தங்களது நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் ஒரு பெண் இயக்குநரைக் கூட நியமிக்காத தனியார் நிறுவனங்களிடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது.
சட்ட விதிகளின்படி, ரூ.100 கோடி பங்கு மூலதனம் அல்லது ரூ.300 கோடி விற்பனை வருமானம் கொண்ட நிறுவனங்கள், தங்களது இயக்குநர் குழுவில் குறைந்தது ஒரு பெண்ணையாவது நியமித்திருக்க வேண்டும். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இந்த விதிகளைப் பின்பற்றவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், தேசியப் பங்கு சந்தை மற்றும் மும்பைப் பங்கு சந்தை ஆகியவை 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அதுதொடர்பான அறிவிக்கையை ஏற்கெனவே அனுப்பியிருந்தது.
இதைத் தவிர, இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியமும் (செபி) பெண் இயக்குநர் நியமன விதிகளைப் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், பெண் இயக்குநரை நியமிக்காத நிறுவனங்களிடம் பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. அந்நிறுவனங்கள் அளிக்கும் விளக்கங்களின் அடிப்படையில் தேவையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.