Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வலைவீச்சு : புதியபகுதி

‘தள’ புராணம் – www.kavvinmedia.com

புதிது புதிதாய் எண்ணற்ற செய்தி இணையங்கள் தமிழில் தொடங்கப்பட்டாலும், ஒன்றில் கிடைத்த செய்தியும் பார்வையும்தான் பிற தளங்களிலும் கிடைக்கும்.  இன்னும் சில செய்திகள் வார்த்தை பிசகாமல் அப்படியே இடம்பெற்றிருக்கும்.  அவற்றிலிருந்து மாறுபட்டு நாள்தோறும் கட்டுரை, கவிதை, கதை எனப் பதிவேற்றி நம்மைக் கவர்கிறது கவின் இல்லம்.

ஊடக ஆர்வமும் முற்போக்கு எண்ணமும் கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட் டிருக்கும் கவின் இல்லத்தில் கூடம், படிப்பறை, படுக்கைஅறை, விருந்தினர் அறை, நிலைக்கண்ணாடி, சமையல் அறை, புத்தக அலமாரி, விளையாடுமிடம் என அனைத்து அறைகளும் உண்டு.  அவற்றோடு ஹோம் தியேட்டரும் உண்டு; திண்ணையும் உண்டு.  அக்கறையோடும், நேர்மையோடும் இருக்கின்றன சமூகக் கட்டுரைகள்.  நடிகர் ரஜினி குறித்த வதந்திகள் பரவிக்கொண்டிருந்த வேளையில் கவின் இல்லத்தில் வெளிவந்த இந்த வரிகளே அதன் தன்மையைச் சொல்லும்.

சிகரெட்டை ஸ்டைலாகப் பிடிப்பதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினி.  அந்த சிகரெட்தான் இன்று அவரது உடல்நிலையைப் பாதித்துள்ளது.  ரஜினியின் பாணியை அவரது ரசிகர்கள் பலரும் பின்பற்றுவது வழக்கம். ஆனால், படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டதையடுத்து, தன்னுடைய படத்திலிருந்து அத்தகைய காட்சிகளை நீக்கியவர் ரஜினி.  அவரது ரசிகர்களும், புகைப்பிடிக்கும் விஷயத்தில் ரஜினியைப் பின்பற்றாமல், அவர் படங்களில் தவிர்த்ததைப்போல, நிஜவாழ்க்கையில் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.