ஆசிரியர் பதில்கள்

ஜூலை 16-31

கேள்வி : ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், விடுதலையானது குறித்து, மேற்படி வழக்கை மேல்முறையீடு செய்வதில் பேராசிரியருக்கு முழுச் சம்மதம் இல்லையென பரவலாகப் பேசப்படுகிறதே… இதுகுறித்து தங்களது தனிப்பட்ட கருத்து? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : இவைகள் எல்லாம் பத்திரிகை புருடாக்கள். தி.மு.க.வின் எதிரிகளால் திட்டமிட்டுக் கிளப்பப்படும புழுதிகள். இவைகளைப் போய் உண்மை வாசகர் ஆராய்ந்து கேள்வி கேட்கலாமா? வருத்தப்படுகிறோம்.

கேள்வி : மோசசு வீராசாமி நாகமுத்து என்ற ஒரு தமிழர் கயானா நாட்டிற்கு பிரதமராகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு தமிழர் முதலமைச்சராக முடியவில்லையே ஏன்?

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : மக்களுக்கு விரைவில் விழிப்புணர்வு வரும். நம்பிக்கையோடு இருங்கள்.

கேள்வி : லலித்மோடி விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரின் தலையீடு, சட்டரீதியான அத்துமீறல் இல்லையா?
_ நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : அசல் 100க்கு 120 சத அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம்.

கேள்வி : நாடகக் காதலைத்தான் எதிர்க்கிறோம் என்று கூறுவோரின் வாதம் சரியா? – சேகர், எடப்பாடி

பதில் : அதை நாடகத்தில்தான் எதிர்க்கலாம். நிஜ வாழ்க்கையில் எதிர்ப்பது எவ்வகையில் புத்திசாலித்தனம்?

கேள்வி : வல்லுறவு கொண்டவனே மணக்க வரும்போது பெண்ணும் சம்மதித்தால் தீர்ப்பு எப்படியிருக்க வேண்டும்?
_ குணா, திண்டுக்கல்

பதில் : பெண் சம்மதித்தால் தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக இருக்கலாம்! பிறகு அவன் எப்படி நடந்துகொள்வான் என்பதற்குரிய உத்தரவாதம் உண்டா? இதற்குரிய விடையோடு அத்தீர்ப்பு அமையின் நன்று.

கேள்வி : கௌரவக் கொலைகள் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை அளித்தது பற்றி…
_எழிலன், நன்னிலம்

பதில் : முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் அண்டப்புளுகு இது!

கேள்வி : கலப்பு மணங்கள் பரவவும், கலப்பு மணம் புரிய முற்படுவோர் பாதுகாக்கப்படவும் தாங்கள் விரிவான செயல் திட்டத்தில் இறங்கினால் என்ன?
_ அறிவழகன், மேலூர்

பதில் : நிச்சயமாக யோசிக்கலாம். அது கொலையில் _ வன்முறையில் முடிந்துவிடக் கூடாதே என்ற கலையும் உண்டே!

கேள்வி : வளர்ச்சிக் கவர்ச்சியில் வாக்களித்த இளைஞர்கள் மோடி என்றால் மோசடி என்று பேசத் தொடங்கிவிட்டது எதைக் காட்டுகிறது?
_ வெற்றிச்செல்வி, குற்றாலம்

பதில் : விழிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது!

கேள்வி : 4 வயது சிறுவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுக்கும் தாய்மாமன் செய்கை எதைக் காட்டுகிறது? – புரட்சிமதி, வேலூர்

பதில் : குடிகாரக் குடும்பப் பெருமைக்குப் பாதுகாப்புத் தேடுவதாக உள்ள கோரக் கூத்து இது!

கேள்வி : கல்லூரி மாணவர்களுக்கு சமூக அக்கறை அக்காலத்தில் இருந்ததுபோல் இன்று இல்லாமல் போனது ஏன்? மீண்டும் வர என்ன செய்ய வேண்டும்? – அன்புமொழி, சென்னை

பதில் : தற்போதுள்ள இணையம், கைத்தொலைபேசி போன்றவைகளின் ஆதிக்கம் குறையவோ அல்லது அவைகளே இதனைத் தூண்டவோ திட்டமிடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *