பெண்ணால் முடியும்

ஜூலை 16-31

அய்.ஏ.எஸ்.தேர்வில் முதல் நான்கு இடங்களையும் பெண்களே பெற்றனர்.

தமிழக அளவில் பெண்ணே முதலிடம்!

ஓட்டுநர் மகள்

இந்திய அளவில் 152ஆவது இடம்பெற்ற வான்மதி கார் ஓட்டுனரின் மகள் என்பது பெருமைக்குரியது!

அய்.ஏ.எஸ். தேர்வில் தேசிய அளவில் முதல் நான்கு இடங்களைப் பெண்கள் பெற்று மிகப்பெரிய, அரிய சாதனையைப் படைத்துள்ளனர். இதில் இன்னும் குறிப்பிட வேண்டிய அரிய பெரிய சாதனை என்னவென்றால், நாடு அளவில் முதலிடம் பிடித்த அய்ரா சிங்கால் (31) என்பவர் ஒரு மாற்றுத் திறனாளி! ஊனம் ஒரு தடையல்ல என்பதையும் இச்சாதனை மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

அடுப்பூதவும், பிள்ளை பெறவும் மட்டுமே பெண்கள் என்ற அறியாமையையும், அடிமைத்தனத்தையும் தங்கள் விழிப்பின் மூலமும், உழைப்பின் மூலமும், ஊக்கத்தின் மூலமும் தகர்த்து இச்சாதனையைப் புரிந்துள்ளனர் என்பது பெண்ணிய வரலாற்றில் ஆழப் பதிய வேண்டிய அரிய செய்தியாகும். பெண்களால் எல்லாம் முடியும், உடலால் ஊனப்பட்டிருந்தாலும், சமுதாயத்தால் ஊனப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் வென்று, வீறுகொண்டு சாதிப்போம்; சரித்திரம் படைப்போம் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளனர்.

இந்திய அளவில் முதல் நான்கு இடங்களையும் பெண்களே பெற்று சாதிப்பது என்பது எளிய சாதனை அல்ல. ஆணை முந்தி சாதிப்பதே பெரிய செயல்; அப்படியிருக்க ஒரு ஆணையல்ல, நான்கு ஆண்களை முந்திச் சாதிப்பது அரிய சாதனையல்லவா?

முந்தியது நான்கு ஆண்களை மட்டுமல்ல, அத்தனை ஆண்களையுமே என்பதுதான் உண்மையிலும் உண்மை.

இந்திய அளவில் ஆறாம் இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை சாரூஸ்ரீ பெற்றுள்ளார். தமிழக அளவில் இவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க பெருமை!

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மெர்சி ரம்யா இந்திய அளவில் 32ஆவது இடத்தையும், சத்தியமங்கலம் வான்மதி 152ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *