அய்யாவின் அடிச்சுவட்டில்…. 134 ஆம் தொடர்

ஜூலை 16-31

`தமிழக அரசு பார்வைக்கு

தந்தை பெரியாரின் நூற்றாண்டினை எப்படி கொள்கைரீதியாக அரசு கொண்டாடலாம் என்பதற்கு அடையாளமாக, அன்று விடுதலையில் ஒரு கட்டுரை வடிவில் தமிழக அரசு பார்வைக்கு என்று குறிப்பிட்டு 18.06.1978 அன்று அய்யா நூற்றாண்டில் தமிழக அரசு செய்யுமா? என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தோம் என்பதனை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என்பதால் அதனைக் குறிப்பிடுகிறேன்.

அந்தக் கட்டுரையில்..

தமிழ்நாட்டின் உடல், ஊண், உணர்வு, உயிர் இவற்றோடு ஒன்றி தமிழகத்தின் மூச்சுக் காற்றாய் எங்கும் என்றும் நிறைந்திருக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கு, வருகிற 1978 செப்டம்பர் 17ஆம் நாள் நூறாவது வயது தொடங்குகிறது. அன்று முதல், அன்னாருக்கு நூறாவது ஆண்டு நிறையும் நாளான 1979 செப்டம்பர் 16ஆம் நாள் இறுதியாக உள்ள இந்த ஓராண்டு முழுவதும், விழாக் கொண்டாடிச் சிறப்பிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதைக் கண்டு தமிழ் மக்கள் அனைவருமே பூரிப்பும், புளகாங்கிதமும் அடைகின்றனர்.

மத்திய அஞ்சல் துறையின் சார்பில் தந்தை பெரியாரவர்களின் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டு அவ்வரசும் தனது கடமையினைச் செவ்வனே செலுத்தி தமிழ் மக்களின் ஒருமித்த நன்றியினைப் பெறுகின்றது!

ஆணையிடத்தக்க ஆலோசனைகள்

(1) தமிழில் தற்போது 247 தனித்தனி எழுத்துகள் வழங்கி வருகின்றன. எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தால்தான் மொழி வளரமுடியும்; அச்சுக் கோர்க்கவும், தட்டச்சு செய்யவும் எளிதாக இருக்கும் என்று தந்தை பெரியார் அவர்கள் கருத்துத் தெரிவித்து, எடுத்துக்காட்டாக தாமே சில எழுத்துச் சீர்திருத்தங்களைக் கையாண்டு வந்தார்கள். அது முழுமையான சீர்திருத்தம் அல்லவென்பதே அவர்கள் கருத்தாயினும், ஒரு முறையைப் புகுத்திட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். அவர்களது நல்லநோக்கம் நிறைவேறவும், ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் குறைவான எண்ணிக்கையில் எழுத்துகள் இருப்பதால் அவை உலகெங்கும் விரைந்து பரவ வழியிருப்பதாலும், தமிழிலும் இந்தக் காலகட்டத்தில் கட்டாயமாக ஒரு எழுத்துச் சீர்திருத்தத் திட்டத்தை மேற்கொண்டு, அரசு ஆணை பிறப்பித்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.

(2) தந்தை பெரியாரவர்களின் அடிப்படைத் திட்டமே ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாய அமைப்பாகும். அதற்கு உறுதுணையாக, மனிதர்களைப் பேதப்படுத்தும் ஜாதிப் பட்டங்களை யாரும் சட்டப்படிச் சேர்த்துக் கொள்ளக்கூடாது; ஊர்கள், தெருக்கள், கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு ஜாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது என உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைக்கும் கொண்டு வரப்பட வேண்டும்.

(3) அரிஜன் என்ற பெயர் மத நம்பிக்கையின் அடிப்படையில் சூட்டப்பட்டதாகும். அதை நீக்கி, தாழ்த்தப்பட்டவர் என்றே குறிப்பிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். (Depressed Class என்று ஆங்கிலத்தில் இருக்கலாம்.)

(4) தந்தை பெரியார் அவர்களின் சொந்த ஊர் ஈரோடு, கோவை மாவட்டம் இரண்டாகப் பிரிகின்ற சாத்தியக் கூறுகள் நிறைய இருப்பதால், ஈரோட்டைத் தலைநகராகக் கொண்டு ஒருதனி மாவட்டம் அமைத்து அதற்குப் பெரியார் மாவட்டம் (ஆந்திராவிலுள்ள பிரகாசம் மாவட்டம்போல்) என்று அரசு பெயரிட வேண்டும்.

(5) திருச்சியில் புதிதாக அமைய விருக்கின்ற பல்கலைக்கழகத்திற்கு பெரியார் பல்கலைக்கழகம் என்று (Periyar University) அரசு பெயர் சூட்ட வேண்டும்.

(6) ஒன்றாம் வகுப்பில் தொடங்கிப் பட்டப்படிப்பு  வரையில், தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய சரியான விவரங்களைத் தாங்கிய வரலாற்றுக் குறிப்புகளும், வாழ்க்கை நிகழ்ச்சிகளும், சிந்தனைக் கோவைகளும் பாடநூல்களில் படத்துடன் இடம்பெற அரசு ஆவன செய்திட வேண்டும். என குறிப்பிட்டிருந்தோம்.

****

கழகத்தோழர்களுக்கு அறிக்கை

தந்தை பெரியார் அவர்கள், தன் சொந்த சொத்துகளையும், மக்கள் தந்த காசுகளையும் லட்சங்களாகப் பெருக்கி, அவற்றைக் கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் அனாதை விடுதிகளுக்கும், அறிவுப் பிரச்சாரத்திற்கும் தந்த ஒரே உலகத் தலைவர் நமது தந்தைதான் என்பதைவிட 60 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு அவர் அள்ளி அள்ளித் தந்த அறிவுச் செல்வம் என்றும் குறையாத செல்வம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது _ மறக்க முடியாது. அத்தகைய ஒரே தலைவனுக்கு நூற்றாண்டு விழாவினை கொண்டாட, வேண்டுகோளாக, மூன்று மாதங்களுக்கு முன்பாகவே விடுதலையில் நான் கழகத் தோழர்களுக்கு அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதனை விடுதலை (5.7.1978)யில் இரண்டாம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தேன்.

அது, நூற்றாண்டு விழா பணியைத் துவக்குக! என்று தலைப்பிட்டு வெளிவந்தது. அதிலிருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன்.

பகுத்தறிவுப் பகலவன் தலைவர் தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட தமிழ்கூறும் நல்லுலகம் தயாராகிக் கொண்டு இருக்கிறது!

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற சிந்தனையாளர் அய்யா அவர்களது நூற்றாண்டு என்பது வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது என்பதோடு தீவிரக் கொள்கைப் பிரச்சார ஆண்டாகவே அதனை நடத்துவது என்பதோடு, ஓராண்டு முழுவதிலும் பல வகையான வகையில் அய்யாவின் அறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காக நாம் பல்வேறு திட்டங்களை, பிரச்சார முறைகளை அடுக்கடுக்காக கையாள முனைந்துள்ளோம். ஆங்கிலம் முதல் பல்வேறு மொழிகளில் அய்யாவின் அறிவுக் கருவூலங்களை மொழிபெயர்த்து வெளியிடுவது, கிராமங்கள் பட்டிதொட்டிகள் எங்கணும் நாடகம், கலை நிகழ்ச்சிகள் ஈறாக அத்தனை வாய்ப்புகள் மூலம் அறிவு ஆசான் அய்யாவின் கொள்கைகளைச் சுழன்றடிக்கும் சூறாவளியாகப் பரப்புவதற்கு நாம் தீட்டியுள்ள பல திட்டங்களும் அவ்வப்போது வெளியிடப்படும்.

இந்நூற்றாண்டு விழாவின் மூலம் பகுத்தறிவுப் பிரச்சாரமும், மூடநம்பிக்கை ஒழிப்பும், இனமானமும், உணர்வும் தமிழ்ப் பெருமக்களிடையே பொங்குமாங்கடலெனக் கிளம்பி வழிவகை கண்டாக வேண்டும்.

அய்யா தந்த அறிவுச் சுடர் என்றும் அணையாது! அதை எவராலும் அணைக்க இயலாது என்பதை புரியாதவர்களுக்கும், புரிந்துகொள்ள மறுக்கிறவர்களுக்கும் புதுப்பாடம் புகட்டும் வகையில் நமது பணி ஓயாத, ஓய்வில்லாத பணியாக மலரப் போகிறது!

எங்கெங்கும் பெரியார் கொள்கைமயமே; அது இருந்திட்டால் நம்மவர்க்கு இல்லை பயமே என்பது வெறும் பாட்டு வரிகள் அல்ல; செயல்பாட்டின் தோற்றம் என்றாகும் வண்ணம் நமது தோழர்கள் கருஞ்சட்டை வீரர்களும், தமிழினப் பெருமக்களும் தீவிரமாகப் பாடுபட இப்போதே தொடங்கிவிட வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு ஒருமுறைதான் வரும். அதை எவரும் மறந்திடக் கூடாது. பிறந்த நாள் விழா என்றாலும் இவ்வாண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டாவது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிட இயலும். ஆனால், நூற்றாண்டு என்பது வரலாற்றின் வைர வரிகள் அல்லவா?

அந்த நூற்றாண்டு விழாவின்போது நாம் இருந்து கொண்டாடும் பொன்னான வாய்ப்புக் கிடைத்தது மிகப்பெரும் பேறு என்று நன்றி உணர்வும் இன உணர்வும் பகுத்தறிவும் பற்றும் உள்ள ஒவ்வொருவரும் மகிழத்தக்க ஒன்றாகும்.

இவ்வாறு மிகச் சிறப்புடன் விழாவினைக் கொண்டாடுவதற்கு நமது இயக்கத்தின் சார்பில் நாடு முழுவதும் உள்ள மக்களிடம், மக்கள் பங்குகொள்ளும் மாபெரும் நமது நாட்டுத் திருவிழா, பெருவிழா _ தந்தையின் நூற்றாண்டு விழா என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் 5 லட்ச ரூபாய் நிதி திரட்ட நாம் எடுத்துள்ள முடிவின்படி, நமது தோழர்கள் அடுத்த வாரம் முதல் இப்பணியை முக்கிய முதற்பணியாகத் தொடங்கிட முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

****

சிங்கப்பூர் – தமிழ்முரசு`

தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா முடிந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் பிரபலமான தமிழ் நாளேடான தமிழ் முரசு 28.01.1979இல் சென்னைக் கடிதம் என்ற பகுதியில் அய்யாவின் நூற்றாண்டு விழா குறித்து நீண்டதோர் கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தது. அந்தச் செய்தியை இங்கே அப்படியே தருகிறேன். அதில்…

பெரியார் உயிரோடு இருந்தபோது கூச்சப்பட்டவர்கள்கூட இப்பொழுது வீதிக்கு வந்து நின்று தமிழினத்தின் தலைவிதியை மாற்றிய தலைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். மனித உணர்வுகள் இன்னும் வற்றிவிடவில்லை என்பதற்கு அடையாளம் காட்டியது பெரியார் நூற்றாண்டு விழா. சில பத்திரிகைகளோ ராஜாஜி விழாவை கலியுகமே கண்டிராத அதிசயம் போல சித்தரித்துக் காட்டி புளகாங்கிதம் அடைந்தன. ஆனால், பெரியார் விஷயத்திலோ உதட்டளவு வறட்டுச் சிரிப்பைக் காட்டின, பெரியார் ஒரு பெரிய சமூகச் சீர்திருத்தவாதி என்று கண்டுபிடித்துக் கூறின. இது பெரியாருக்கு நிஜமாகவே பாராட்டுரையா? மயில் ஒரு நல்ல பறவை என்பதைப் போல இல்லையா? சிங்கம் ஒரு பெரிய விலங்கு என்பதைப்போல இல்லையா? தமிழும் ஒரு மொழிதான் என்று சர்டிபிகேட் தருவதைப் போல இல்லையா? ஆனால், அதே சமயத்தில் இதற்கு மேல் அவர்கள் எப்படிப் போக முடியும்? என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது அவர்கள் நடந்துகொண்ட முறை அவர்களைப் பொறுத்தளவில் சரிதான் என்றே கூற வேண்டியிருக்கிறது.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் எல்லாத் துறைகளிலும் எஜமானர்களாக சவாரி செய்கிறவர்களாக இருந்த சிலரை இன்று சாமானியர்களாக ஆக்கியதுடன் நாலாந்தரப் பேர்வழிகளை, சமுதாயச் சோகைகளை மிடுக்கும் வீரியமும் உரிமை வேட்கையும் நிறைந்த வீரர்களாக்கி வைத்தது பெரியார் அல்லவா?
பெரியார் அரசியல் பிரவேசம் செய்தபோது 60 ஆண்டுகளுக்கு முன் நிலைமை என்ன?

1937இல் முதன்முதலாக தமிழகத்தில் அமைச்சரவை அமைந்தது. ஆச்சாரியாருக்கு அப்பொழுது போட்டியாக நின்றது சத்தியமூர்த்தி, டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள் காங்கிரசில் இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குப் பெரிய மரியாதையோ அந்தஸ்தோ இருந்ததில்லை. காமராசர் ஒரு பிரபல தொண்டர் என்ற அளவிலேயே காங்கிரசில் இருந்து வந்தார்.

அடுத்த இருபதே ஆண்டுகளுக்குள் நிலைமை என்ன ஆயிற்று?

இவ்வளவு பெரிய அரசியல் புரட்சியின் _ சமுதாயப் புரட்சியின் மூலகர்த்தா யார்? பெரியார்தான்.

வடநாட்டு அரசியல் தலைவர்களும் _ தமிழகத்தில் சில பத்திரிகைகளும் சேர்ந்து கொண்டு ராஜாஜி விழாவை ஓகோ என்று விளம்பரப்படுத்திவிட்டார்கள். இந்தியாவின் மிகப்பெரிய _ நூதன அரசியல் மூளைகளில் ஒன்று என்ற வகையில் ராஜாஜி நூற்றாண்டு விழா மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உடையதுதான். ஆனால், அதே சமயத்தில் அவர் தனிப்பெரிய அரசியல் சித்தாந்தத்தின் கர்த்தா அல்ல; அது காந்தியார்தான். காந்தீயத்தின் பாஷ்யக்காரர் ராஜாஜி.

உணர்ந்தோர் எத்தனை?

ஆனால் பெரியாரிசமோ _ காந்தீயத்துக்கு ஒவ்வோர் அம்சத்திலும் நேர் எதிரிடையான சித்தாந்தம். பழைய கோட்பாடுகள், பழைய சமுதாயக் கட்டுக்கோப்பு _ பழைய சமுதாயச் சிந்தனை ஆகிய மூன்றையும் அப்படியே நீடிப்பது காந்திய சித்தாந்தம். அதை முழுக்க முழுக்க எதிர்ப்பது பெரியாரிசம். இந்தத் துல்லியமான வேறுபாட்டைத் தமிழர்களிலேயே   எவ்வளவு பேர்கள் உணர்ந்திருப்பார்களோ!

ராஜாஜி விழாவில் குடியரசு அதிபர் சஞ்சீவரெட்டியிலிருந்து பிரதமர்_மத்திய அமைச்சர்கள் ஈறாக பல அகில இந்தியப் புள்ளிகள் கலந்து கொண்டு ஒரே ராகத்தில் பாடினார்கள். ராஜாஜி_ பெரிய அரசியல் மேதை. அற்புத நிர்வாகி. காந்திஜியின் மனச்சாட்சிக் காவலர் என்றெல்லாம் புகழ்ந்தார்கள்.

பெரிய பணக்காரர் வீட்டு ஆடம்பரத் திருமணம் போல அது நடந்தது. செல்வந்தர் வீட்டு திருமணத்தில் பெரிய பணக்காரர்களுக்கே முதலிடம் தரப்படும். செயற்கைமுறை உபசரிப்பு _வறட்டுச் சிரிப்பு _ கதகதப்பு இல்லாத கைகுலுக்கல் _ இவையே நடைமுறைகள். ஆனால், ஏழை வீட்டுத் திருமணத்திலோ உற்றார் உறவினர் புடை சூழ்ந்து நிற்க பாசமும் அன்பும் கததத்து நிற்கும். பெரியாரின் விழா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தது.

டில்லியின் பாராமுகம்

இதில் மத்திய அரசு பட்டும் படாததுமாக நடந்து கொண்டது. எம்.ஜி.ஆர். அரசின் கோரிக்கைக்கு இணங்கி மத்திய அஞ்சல் துறை பெரியாரின் நினைவாக அஞ்சல் தலையை வெளியிட்டது உண்மை. ஆனால், அதே சமயத்தில் குடியரசு அதிபரோ அல்லது பிரதமரோ இந்த விழாவுக்கு வரவில்லை. குடியரசு அதிபரை அழைத்துவர தமிழக அரசு எவ்வளவோ முயன்றதாம்; ஆயினும் பலனில்லை. அவரோ சென்னையில் பிரபல ஆங்கில நாளிதழாகிய இந்துவின் நூற்றாண்டு விழாவிற்கு மட்டும் வந்து கலந்துகொண்டுவிட்டு டில்லி திரும்பிவிட்டார்.

ஆயினும், அதற்காக தமிழக அரசானது சோர்ந்துவிடவில்லை. மத்திய அமைச்சரும் பெரியாரின் பணியை நன்கு உணர்ந்திருப்பவருமான ஜெகஜீவன்ராமை அழைத்து வந்து ஈரோட்டிலும் சென்னையிலும் பெரியார் விழாவைச் சிறப்பாக நடத்தியது. பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் நினைவைப் போற்றிப் பாதுகாக்கும் பல சீரிய திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்தது. அவற்றில் மூன்று முக்கியமானவை.

முதலாவதாக ஈரோட்டைத் தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை நிறுவி அதற்குப் பெரியார் மாவட்டம் என்ற பெயரையே சூட்டுவது.

அடுத்து பெரியார் மிகவும் விரும்பிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது, மூன்றாவதாக பெரியாரின் பெயரில் புதிய பல்கலைக்கழகம். இம்மூன்றில் முதலிரண்டையும் கண்டு பொறுக்க முடியாமல் சில பத்திரிகைகள் என்னென்னவோ சாக்குப் போக்குகளைச் சொல்லி ஓலமிட்டு பார்த்தும் யாருமே சட்டை செய்யவில்லை.

இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர். அரசு உறுதியாக நின்றதை சிலரின் சலசலப்புகளையெல்லாம் சட்டை செய்யாததை பாராட்டவே வேண்டும். இதற்கும் தமிழகத்தில் உள்ள சில வட்டாரங்கள் சில காரணங்களைக் காட்டுகின்றன. பெரியார் விழாவை இவ்வளவு சிறப்பாக எம்.ஜி.ஆர். கொண்டாடுவதற்கும், பெரியாரின் நினைவாக இவ்வளவு பெரிய திட்டங்களை மேற்கொண்டிருப்பதற்கும் பெரியாருடைய கொள்கைகளின் மீது அவருக்குள்ள பெரிய பிடிப்பு காரணமல்ல.

கருணாநிதியை மனத்தில் வைத்துக்கொண்டு, பெரியார் விஷயத்தில் அவர் மிஞ்சி விடுவதற்கு எந்த விதத்திலும் இடத் தரவே கூடாது என்ற ஒரே நோக்கத்துடன்தான் இவ்வளவும் செய்கிறார்.

மற்றபடி இயக்க ரீதியாக கொள்கை ரீதியாக இவருக்கும் பெரியாருக்கும் வரலாறு பூர்வமான சம்பந்தம் என்ன இருக்கிறது என்று கேட்கின்றனர்.

கருணாநிதியை மனத்தில் நினைத்தபடியேதான் எம்.ஜி.ஆர். இவ்வளவும் செய்வதாக வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் மற்றவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இதில் இவ்வளவு துணிவையும் உறுதியையும் எம்.ஜி.ஆர். காட்டுவது நிச்சயம் பாராட்டுக்கு உரியதுதான்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *