கேழ்வரகு
கேழ்வரகில் கால்சியம், இரும்புச் சத்து அதிகம் உள்ளன. பாலில் உள்ள கால்சியத்தைவிட இதில் அதிகம் உள்ளது. கேழ்வரகை வாரம் இருமுறையாவது சேர்த்தால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மோர் கலந்து சாப்பிடும்போது கேழ்வரகு கூழ் உடல் சூட்டை வெகுவாக தணிக்கும்.
கேழ்வரகு முருங்கைக் கீரை அடை
தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு_2 கப், வெங்காயம்_1, பச்சைமிளகாய்_2, முருங்கை கீரை (ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்) _1 கப், உப்பு _ தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும். கடைசியாக கீரையைப் போட்டு லேசாக வதக்கவும்.
வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கலந்து உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறியபின் இந்த மாவை உருண்டையாக நடுவில் வைத்து அடையாக தட்டவும்.
சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
சூடான கேழ்வரகு அடை தயார்!
குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவுடன் பால், வெல்லம் சேர்த்துக் கூழாகக் காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தினம் கேழ்வரகுக் கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். கேழ்வரகில் உள்ள நார்ச்சத்துகள் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும். இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து உள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ்வரகு செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக்கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாத கெத்தான வாழ்க்கையை வாழலாம்!