நூலின் பெயர் : மெல்லின தேசம் (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவி ஆதவன் பதிப்பகம், 267, 3ஆவது முதன்மைச் சாலை.
ஈஸ்வரன் நகர், பம்மதுகுளம் (அ)
செங்குன்றம், சென்னை _- 052.
கைப்பேசி : 94418 09235
பக்கங்கள் : 80
விலை : ரூ.100
இது தெ.சு. கவுதமனின் நான்காவது கவிதைத் தொகுப்பு என்று அவரே குறிப்பிடுகிறார். இவரது கவிதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளை இத்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார். அதன்வழி பெண்களின் நிலை, சில்லறை வணிகர்களின் வருத்தம், குழந்தைகளின் ஆசைகள், காதல், கிளி சோசியம், ஆற்றுமணல், கடற்கரை மணல், பேருந்து, பள்ளிச் சிறுவர்கள், பூசாரி இப்படி பலவற்றைப் பற்றி பாக்களில் பதிவு செய்துள்ளார்.
பொறுக்கியெடுத்த மீன்களை
அள்ளி எடை போடுகையில்
உரிமையோடு
இன்னொரு மீன் கேட்பதும்
இதுல லாபமே யில்ல தாயீயென
அந்தம்மா மறுப்பதும்
……
குட்டி மீனொன்று கூடுதலாய் தந்து
…..
அதிலும் இருபது ரூபாய் குறைக்க
சின்ன ஏமாற்றத்தை முகங்காட்ட
போகட்டுமென பத்து ரூபாய் நீட்ட,
என்ற கவிதையின் மூலம் சில்லரை வணிகரிடம் சிறுமை காட்டுவோரை கண்டிப்பது,
எதிர்காலத்திற்காக சீட்டெடுத்துக்
கொடுக்கும கிளியின் மனதில்
கூண்டில் சிக்காத கடந்தகால நினைவு!
ஆசிரியர்களற்ற பள்ளிக்கூடம்
கலகலப்பாயிருக்கிறது
பள்ளிப் பேருந்தினுள்
சில நிமிடப் பழக்கத்திலேயே
ஒட்டிக் கொண்டது
கடற்கரை மணல்
என்று குறும்பாக்களின் மூலம் குத்தலாகக் கொள்கைச் சொல்வது என்று எத்தனையோ பாக்கள். கவிதை நயம் கருத்து மயம்!
பாராட்டுக்கள்! விலையைக் குறைத்து விற்பனையைப் பெருக்கினால், பலரைச் சென்றடையச் செய்யலாம்!