பதினேழாம் நூற்றாண்டில் அய்ரோப்பிய நாடுகளில் கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் மதப் பிரிவினர்களுக்கிடையே பல போர்கள் நடைபெற்றன. லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜெர்மனி நாட்டில் இம் மதயுத்தம் முப்பது ஆண்டுகள் கி.பி.1618 முதல் கி.பி.1648ஆம் ஆண்டுவரை நடந்தது. அந்நாடே பெரும் அழிவுக்குள்ளாகியது. ஜெர்மன் நாட்டின் பல பகுதிகளில் 25 முதல் 40 சதவீத மக்கள் இறந்தனர். பல பகுதிகளில் ஆண்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. அந்த அளவுக்கு பாதிப்பு கடுமையாக இருந்தது.
இந்தியாவிலும் இந்து மதத்தினருக்கும் இஸ்லாமிய மதத்தினருக்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில், கி.பி.1947ஆம் ஆண்டு பெரும் மதக் கலவரம் ஏற்பட்டது. அந்த மதக் கலவரத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் மாண்டனர். மேலும், சுமார் 90 லட்சம் மக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறினர். அதுபோல, சுமார் 60 லட்சம் இஸ்லாமியர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறினர். தங்களுடைய சொத்து, உடைமைகளை விட்டுச் சென்றனர். மனித சமுதாய வரலாற்றில் மதச் சண்டைகளால்தான் அரசியல் சண்டைகளைக் காட்டிலும் அதிகமான மக்கள் மாண்டுள்ளனர்.