(கெளரவக்) கர்வக் கொலைகள்
– மஞ்சை வசந்தன்
கௌரவக் கொலைகள்! தற்போது தமிழகம் முழுவதும் சூடாக பேசப்படும் செய்தி! காட்டுமிராண்டிச் செயலுக்கு கவுரவம் என்று கூறுவதே முதலில் கண்டிக்கத்தக்கது.
கவுரவம் என்பதை பெருமை என்று தமிழில் கொள்ளலாம். பெருமை என்பதற்கு என்ன பொருள்? எது பெருமை? மானம் என்பதன் பொருள் என்ன? மதிப்பு என்பதன் அர்த்தம் என்ன? இவைபற்றி ஒன்றும் தெரியாத அறியாமையில் உழலும் உணர்வு வயப்படும் பேர்வழிகள் நிகழ்த்துகின்ற அநியாயப் படுகொலைகள்தான் கவுரவக் கொலைகள் என்று கூறப்படுகின்றன.
பெருமையானவர் (கவுரவமானவர்), பெருமையான குடும்பங்கள் (கவுரவமான குடும்பம்) என்றால் என்ன?
குடும்பத்தில் உள்ளவர்கள் பொய் பேசாது, களவு செய்யாது, புறம் கூறாது, பிறரை வஞ்சிக்காது, பிறருக்கு உதவி, நேர்மையாய் சம்பாதித்து, ஒழுக்கத்தோடு, கட்டுப்பாடோடு நல்வழியில் வாழ்வோரே பெருமைக்குரியவர். அப்படிப்பட்டவர்களைக் கொண்ட குடும்பமே பெருமைக்குரிய குடும்பம் ஆகும்.
குடித்துவிட்டு ஆடுவான்; பொய் சொல்லிப் பிழைப்பான்; திருடுவான்; மோசடி செய்வான், தீயவழியில் தான் நடப்பான். இதனால் குடும்பப் பெருமை போகாது! ஆனால், அப்படிப்பட்ட ஒருவன் பெண் தன் ஜாதியைவிட்டு இன்னொரு ஜாதிப் பையனை காதலித்தால் மணம் செய்ய முயன்றால், அவன் குடும்பப்பெருமை போய்விடுமாம்! அதற்குத் தீர்வு என்ன? அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டால் அவன் பெருமை காப்பாற்றப்படுகிறதாம்; அவன் குடும்பத்துப் பெருமையும் காக்கப்படுகிறதாம்! எப்படிப்பட்ட அயோக்கியத் தனம் இது?
தன் மகள் பிற ஜாதியானை மணம் செய்யக்கூடாது என்கின்ற எத்தனைத் தந்தை தன் மனைவியோடு மட்டுமே வாழ்பவன்? நாணயத்தோடு இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!
தன் தினவு தீர்க்க நாயினும் கேவலமாய் அலைகிறான்; காசுக் கொடுத்து விபசாரிகளிடம் செல்கிறான்; அவள் என்ன ஜாதியென்று பார்த்தானா? கள்ள உறவு வைக்கிறான் அப்போது ஜாதி பார்த்துத்தான் உறவு கொள்கிறானா? ஊர் அறிய சின்ன வீடு வைக்கிறான் அங்கு எந்த ஜாதியும் பார்ப்பதில்லை!
சாராயத்தை ஊற்றியவனுக்கு சாயந்தரம் வந்தால் ஜாதி தெரியாது! ஆனால், தன்மகள் ஜாதிமாறி துணை தேடினால் ஜாதி, பெருமை, மானம் எல்லாம் வருகிறது? இது என்ன யோக்கியதை?
தமிழன் தமிழன் என்று முழங்குகிறான். தமிழனுக்குள் கல்யாணம் செய்யப் போனால் கொலைப் பண்ணுகிறான்! அப்ப இவன் பேசர தமிழன் பேச்சு பித்தலாட்டம் அல்லவா? தமிழனுக்கு ஜாதியுண்டா? யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? தமிழர் பெருமை பேசுகிறான் தமிழன் காதல் வாழ்வு வாழ்ந்தவனாயிற்றே!
உன் தந்தை, உன் தாய் யார் என்று தெரியாது. எந்த ஊர் என்று தெரியாது. என் தந்தை தாய், ஊர் பற்றி உனக்கும் தெரியாது என்ற நிலையில், காதலால், கருத்தொற்றுமையில், விருப்பத்தால் உள்ளங்கள் இரண்டு கலந்து, மணந்து வாழ்ந்தன என்று தானே தமிழ்மரபு சொல்கிறது.
அதைத்தானே பெருமையாக ஊர் ஊராய் பேசுகிறாய்! ஆனால் உன்மகள் ஒருவனை விரும்பிச் சென்றால் ஜாதிவெறி கொண்டு அலைகிறாய், சதிசெய்து கொல்கிறாயே! என்ன நியாயம்?
சொல்வது போல வாழ்வது தானே பெருமை? அப்படி வாழ்பவன் தானே பெருமைக்குரியவன்? ஆனால், பெருமைக்கு தகுதியில்லாதவனுக்கு பெருமை, மானம் இதுவெல்லாம் எப்படிவர முடியும்?
வேறு ஜாதி ஆணை காதலித்தாள்; கல்யாணம் முடிக்கப்போகிறாள் என்று அறிந்ததும், பெண்ணைப் பெற்றவர் உடன் பிறந்தவன் ஒன்று சேர்ந்து அவளை மரத்தில் கட்டிவைத்து, மண்ணென்னை ஊற்றிய போது, அவள் எவ்வளவோ கெஞ்சி, விடும்படி கதறியும் கொஞ்சங் கூட இரக்கமில்லாமல், தீ வைத்துக் கொளுத்திய கொடுமை இங்கு நடக்கிறது என்றால், நாமெல்லாம் மனிதர்களா?
அப்பெண் செய்த தவறு என்ன. ஒருவனை விரும்பினாள், அவனைத் திருமணம் செய்ய முயன்றாள். அதற்கு அவளைக் கொளுத்தி இவர்கள் குலப்பெருமை காக்கிறார்கள் என்றால், இவர்களெல்லாம் மனிதர்களா? மனிதர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்களுக்கு பெருமை ஏது? மானம் ஏது? சூடு ஏது? சொரணை ஏது? இன்றைக்கு ஜாதி பார்க்கும், குலப்பெருமை பேசுகிறோமே, நாம் எல்லோருமே காட்டுமிராண்டிகளாய்த் திரிந்தவர்களின் வழிவந்தவர்கள்தான்.
அக்காலத்தில் வாழ்ந்தவர்களெல்லாம் கண்டபடி புணர்ந்து பிள்ளை பெற்றவர்களாயிற்றே அப்படியானால், இரத்தத் தூய்மை, ஜாதித் தூய்மை பேச என்ன தகுதியிருக்கிறது? நம் உடலில் ஓடும் இரத்தத்தில் எந்த ஜாதி என்று அடையாளம் இருக்கிறதா?
ஜாதிவெறி கொண்டு பெற்ற பிள்ளையையே கொளுத்தும் கொடியவர்கள், தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்யும் கயவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.
உயிருக்குப் போராடும் போது, இரத்தம் தேவை உடனே இரத்தம் ஏற்றவில்லை என்றால் உயிர் போய்விடும் என்ற நிலை வரும் போது, எவன் இரத்தம் கிடைக்கும் என்று அலையும் போது, அடுத்த ஜாதிக்காரன் இரத்தத்தை வேண்டாம் என்கிறோமா? கீழ்ஜாதிக்காரன் இரத்தம் ஏற்றாதே என்கிறோமா?
இன்றைக்கு நாடுவிட்டு நாடு திருமணம், ஹிந்தி பேசுகிறவனுக்கும், தமிழ் பேசுகிறவனுக்கும் திருமணம், ஒரு மதத்தாருக்கும் இன்னொரு மதத்தாருக்கும் திருமணம், அப்படி ஏராளமாய் நடக்கும் நிலையில், ஜாதிவெறியில் பெற்ற பிள்ளைகளையே கொல்லும் வெறி எவ்வளவு கொடுமையானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? 75 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் பெரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் ஜாதிமறுப்பு, மதமறுப்பு திருமணம் செய்துள்ளனர். அவர்களின் வாரிசுகளெல்லாம் சிறப்பாக வாழும் போது இருபத்தோறாம் நூற்றாண்டில் ஜாதிக்காக கொலைகள் செய்வது சரியா?
இன்றைக்கு மிகச்சிறந்த திரைப்பட இயக்குநராக இருக்கும் எஸ்.பி. முத்துராமன் அவர்களும், மிகச் சிறந்த பேச்சாளரான சுப.வீரபாண்டியன் அவர்களும் உடன்பிறந்த அண்ணன் தம்பிகள், அவர்களின் பெற்றோர், கலப்பு மணம் செய்துக் கொண்டவர்கள். அவர்களின் குடிப்பெருமை கெட்டுவிட்டதா? சுப.வீரபாண்டியன் அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் சாதி மறுப்பு மணம் செய்து கொண்டவர்கள். மகிழ்வோடும் சிறப்போடும் வளத்தோடும் வாழ்கிறார்கள்.
சாதிக்காக கொலை செய்கிறவன் குடும்பம் இவர்களைவிட பெருமை பெற்று பேசப்படுகிறதா? சிந்திக்க வேண்டாமா? ஏன், அன்றைக்கு காந்தியார் (வாணியர்) மகனுக்கும் இராசகோபாலாச்சாரியார் (பார்ப்பனர்) பெண்ணுக்கும் திருமணம் நடந்ததே, அவர்களின் கௌரவம் போய்விட்டதா? இவர்கள் குடும்பத்தைவிட இன்றைக்கு கர்வக் கொலை செய்யும் குடும்பம் கவுரவத்தில் பெரிய குடும்பமா? சிந்திக்க வேண்டாமா?
தமிழன் என்று சொல்லிக்கொள்கிறவன் காதல் திருமணத்தை ஏற்க வேண்டும். சாதியை மறுக்க வேண்டும். காதலை ஏற்காதவனும், சாதியை மறுக்காதவனும் தமிழன் அல்ல என்பதுதானே உண்மை! அவர்களுக்குத் தமிழர் பெருமை பேசத் தகுதியும் இல்லை. தமிழர்களின் வளர்ச்சிக்கும் அவர்கள்தான் எதிரிகள். காரணம், தமிழர் சாதி இல்லாதவர்கள், காதலை ஏற்றவர்கள்.
ஒரு தாழ்த்தப்பட்டவரும் ஒரு நாயுடுவும், ஒரு வன்னியரும்-, ஒரு தாழ்த்தப்பட்டவரும், ஒரு கவுண்டரும் ஒரு தாழ்த்தப்பட்டவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால், அவர்களெல்லாம் தமிழர்களா? இல்லையா? தமிழர்கள்தான் என்னும்போது அவர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதில் என்ன குற்றம்? என்ன கேவலம்? தமிழரிலே கேவலத் தமிழன், உயர் தமிழன் உண்டா? கேவலமும், உயர்வு தாழ்வும் வாழும் முறையில் வரலாமேயன்றி பிறப்பால் எப்படி வரமுடியும்? சிந்திக்க வேண்டாமா?
தமிழக அரசின் பாராமுகம் தமிழகத்தை அழிக்கும் செயலாகும்!
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளே இல்லையென்று அறிக்கைப் படிக்கிறார். இது எவ்வளவு பெரிய மோசடி! காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு இப்படி அறிக்கைப் படித்தால் காவல் துறையின் நடவடிக்கை எப்படி குற்றவாளிகளுக்கு எதிராய், கடுமையாய் இருக்கும்?
கர்வக் கொலை செய்யும் குற்றவாளிகள் எப்படி அஞ்சுவர்?
கர்வக் கொலைகளையெல்லாம் தற்கொலையாக்கி அறிக்கையளித்தால் கர்வக் கொலை செய்கின்றவர்கள் அச்சமின்றி செய்ய மாட்டார்களா? இச்செயல் அதிகரிக்காதா?
எனவே, அரசு கர்வக் கொலைத் தொடர்பாகக் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்காமல் அதிகப்படியான, கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கற்பழிக்கிறவன்; கூலிக்குக் கொலை செய்கிறவன்; பெற்ற மகளையே வன்புணர்ச்சி செய்கிறவன்; திருடுகிறவன், விபசாரம் செய்கின்றவர், மோசடி செய்கின்றவர் இவர்களெல்லாம் குற்றம் வெளியில் தெரிந்த பின்னும் சூடு சொரணையின்றி, மான வெட்கமின்றி, உணர்வும் தலைகுனிவும் இன்றி வாழ்கிறான், அவனைக் குடும்பம் ஏற்கிறது, அவனை குடும்பத்தைவிட்டு விரட்டுவதில்லை, அவனால் குடும்ப கவுரவம் போய்விட்டது என்று அவர்களை குடும்பத்தினர் சொல்வதில்லை.
ஆனால், ஒரு ஆணோ, பெண்ணோ, ஆரிய பார்ப்பான் செய்த சாதி (சதி)யை ஏற்று, அதிலே வெறிகொண்டு, பெற்ற பிள்ளையைக் கொல்வது, கொளுத்துவது, தண்டவாளத்தில் தள்ளுவது மனிதத் தன்மையற்ற, கொடுஞ்செயலல்லவா? அப்படிச் செய்கின்றவர்கள் கவுரவம் பேச கடுகளவாவது தகுதியுண்டா? அடுத்த சாதியில் திருமணம் செய்துகொண்டால் எப்படி கவுரவம் குறையும்? ஏதாவது காரணம் கூற முடியுமா? விளக்க முடியுமா?
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்த உணர்வுதான் இவர்களை ஆட்டிப்படைப்பது. அந்த மற்றவர் யோக்கியதை என்ன? ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? நாற்றமெடுக்கும் ஆயிரம் கேவலம் அந்த மற்றவர்கள் மத்தியில் இல்லையா?
நாம் வறுமையில் வாடும்போது, படிக்க வைக்க முடியாமல் தவித்தபோது, கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டபோது, திருமணம் செய்ய பொன் கொடுக்க முடியாமல் வேதனைபட்டபோது அந்த மற்றவர்கள் வந்தார்களா? வருவார்களா? அப்படியிருக்க எதற்காக அந்த மற்றவர்கள் பற்றி கவலைப்பட வேண்டும்? அந்த மற்றவர்கள் நாம் நன்றாக இருந்தால் வயிறு எரிகிறார்கள்; வழுக்கி விழுந்தால் கைகொட்டிச் சிரிப்பார்கள்; நல்ல பெயர் வந்தால் களங்கம் சொல்வார்கள்? இவர்களுக்காகவா நாம் வாழ்வது?
நம் பிள்ளை விருப்பம் மகிழ்வு, வாழ்வு இதையல்லவா நாம் நினைத்துச் செயல்பட வேண்டும். கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்தபின்னும் நான் அவனோடுதான் வாழ்வேன் என்று சொல்கிறாள் என்றால் எந்த அளவிற்கு அவள் அவனை விரும்புகிறாள் என்பதை உணர வேண்டாமா? அப்படிப்பட்ட ஓர் உன்னதமான காதலர்கள். எவ்வளவு மகிழ்வாக அவர்கள் வாழ்வார்கள்! அவர்களைப் பிரித்து அழிக்கலாமா?
ஏமாற்றி, வஞ்சித்து, நாடகமாடி ஒருவன் ஒரு பெண்ணை ஏமாற்றி விடுவது இன்றைக்கு அவ்வளவு எளிய செயலா? ஏமாற்றும் மோசடியும் தொன்மைக்கால தமிழர்களிடமும் இருந்திருக்கிறது. அதற்குப் பின்தான் பலர் அறிய திருமணம் செய்தனர். (பொய்யும் வழுவும் தோன்றிய பின் அய்யர் யாத்தனர் கரணம்).
அப்படி காதலன் மோசடியானவன் என்றால், அதை மகளிடம் சரியான காரணத்தைச் சொல்லி அவளைத் திருத்தலாமே, அவனைத் துரத்தலாமோ!
அதை விட்டுவிட்டு எல்லாமே மோசடி நாகடம் என்று பேசுவதும், வாதிடுவதும் சமுதாய அழிவுக்கே வித்திடும் என்பதை உரியவர்கள் உணர வேண்டும்.
இந்தக் கர்வக் கொலைகளை சமுதாயத் தொண்டர்களும், முற்போக்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து தீவிரமாய் எதிர்த்து, காதலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு மையங்களை அமைக்க வேண்டும். ஆட்சியாளர்கள் இதில் அதிக அக்கறையெடுத்து, குற்றவாளிகளை அடக்கி, தண்டித்து கலப்பு மணங்களை ஊக்குவிக்க வேண்டும். இதுவே இந்தக் கர்வக் கொலைகளுக்கான தீர்வாகும்.
யார் எத்தனை தடை போட்டாலும், கொன்றாலும், கொளுத்தினாலும், காதல் மணங்கள் காலத்தின் கட்டாயம். காதல் மணங்கள்தான் எதிர்கால உலகை ஒரு குடும்பம் ஆக்கப் போகின்றன. வரதட்சணை கொடுமையைக் கொளுத்தப் போகின்றன. சாதி, மதம், இனம், நாடு என்று எல்லா பேதங்களையும் தகர்த்து மனிதர் என்ற சமநிலையை நிலைநிறுத்தப் போகின்றன! இந்த மாற்றத்தை, வளர்ச்சியை, ஒன்றிணைவை ஒருவரும் தடுத்துவிட முடியாது. இன்றில்லை யென்றால் நாளை நடந்தே தீரும்! இந்த கால மாற்றத்தை இன்றே ஏற்று, உண்மையாய் விரும்புகின்றவர்களைச் சேர்த்து வைத்து வாழ்த்துவதே அறிவுடைமையாகும். சாதிய காரணங்களுக்காய் படுகொலை புரிவது மனிதத் தன்மையற்ற மாகொடுஞ்செயல் ஆகும். சாதி உணர்வை, வெறியை சரியான நெருப்புகொண்டு எரிக்க வேண்டும். அதற்குரிய சரியான நெருப்பை அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில்,
எங்க ஊர் நெருப்புவீடெரிக்கும்; காடெரிக்கும்;ஆளெரிக்கும்; நீதி யெரிக்கும்!பாவி மக்கா! சாதியைஎரிக்கும் நெருப்பைஎப்பப்பா கண்டுபிடிக்கப் போறீங்க!