இளம் பிஞ்சுகளும், இளைய தலைமுறையினரும் பாக்கட் உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டுவதோடு, அது மதிப்பிற்குரியதாகவும், பெருமைக்குரியதாகவும் எண்ணுகின்றனர்.
இந்த உளவியலைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் கவர்ச்சியான பாக்கட், கருத்தைக் கவரும் விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை, குழந்தைகளை ஈர்த்து, அவர்களை வாங்கி உண்ண உந்தித் தள்ளுகின்றன.
நாம் பலமுறை இவ்வுணவுகளின் கேடுகளைச் சுட்டிக்காட்டி அதைத் தவிர்க்கவும், நமது பாரம்பரிய உணவுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சாப்பிட வேண்டிய கட்டாயத்தை வற்புறுத்தி எழுதியுள்ளோம்.
ஆனால், இன்றைக்கு அதன் கேடு வெளிப்பட்டு, அரசே தடை செய்யும் நிலை வந்துள்ளதால் இனி மேலாவது பாக்கட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நூடுல்ஸ் கேடுகள்:
எம்.எஸ்.ஜி.:- நூடுல்ஸ்ஸில் ஹைட்ராலைஸ்டு பீநட் புரோட்டீன் உள்ளது. இது பெயர் மாற்றிச் செல்லப்பட்டாலும் உண்மையில் எம்.எஸ்.ஜி.தான் இந்த எம்.எஸ்.ஜி. கலந்த உணவை உண்டால் 4 மணி நேரம் கழித்து தலைவலி, படபடப்பு மயக்கம், ஒவ்வாமை வரும்.
காரீயம்: நூடுல்ஸ்ஸில் உள்ள அடுத்தக் கேடு பயக்கும் பொருள். 2.5 பீபீஎம் அளவு காரீயம் இருக்கலாம். ஆனால் நூடுல்ஸ்ஸில் 17 பீபீஎம் அளவு காரீயம் உள்ளது. இது மூளை, நரம்பு மண்டலம், இதயம், சிறுநீரகங்கள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கும் கொடிய நஞ்சு. உடல் பருமன், இரத்த அழுத்தம், வயிற்று வலி போன்ற விளைவுகளையும் இது உண்டாக்கும்.
மலிவு, சமைத்துண்ணுவதில் எளிமை, சுவை, கவர்ச்சியென்று இது ஈர்ப்பதில் ஏமாந்தால் எதிர்கால இளைய சமுதாயம் நலமிழந்து வாழ்விழந்து போகும் அவலம் வரும்.
உப்பு: இதில் கலந்துள்ள உப்பின் அளவும் அதிகம். உப்பு அளவிற்கு அதிகமானால் மிகவும் கேடு. சுவையை அதிகரிக்க இதைத் தயாரிப்பாளர்கள் செய்து, மக்களின் நலத்தைக் கெடுக்கின்றனர். நாம்தான் விழிப்பாக இருந்து நம் நலத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை பெற்றோர்களே முழுப் பொறுப்பு. இந்த கேடுகளிலிருந்து அவர்கள்தான் பிள்ளைகளைக் காக்க வேண்டும்.