கண்டுபிடித்தது…. கடவுள் அல்ல! – 5
பல்லுக்குத் தோல்நோயில் பங்குண்டு
– மதிமன்னன்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி! ஆலங்குச்சி விழுதிலிருந்து எடுத்தும் வேலங்குச்சி கருவேலமரத்தில் வெட்டி எடுத்தும் பல் துலக்கிக் கொண்டிருந்த மக்கள் இவை இல்லாத இடத்தில் பூவரசு, வேம்பு, ஆவாரம், சவுக்கை போன்ற பல குச்சிகளைப் பயன்படுத்திப் பல் அழுக்கைப் போக்கினர்.
இன்னும் சில இடங்களில் மணல், செங்கல் பொடி, உப்பும் கரியும் என்றெல்லாம் போட்டுப் பல்லைத் துலக்கியதோடு பல்லையும் தேயச் செய்தனர். கி.மு.5000 ஆண்டுகளிலேயே எகிப்தியர்கள் பல் துலக்க ஒருவகைப் பொடி தயாரித்துப் பயன்படுத்தினர். மாட்டுக் குளம்பைச் சுட்டு அதன் பொடி, முட்டை ஓடுகள், கிளிஞ்சல் போன்ற பல பொருள்களைப் பொடி செய்து கைவிரலினால் பற்களின்மேல் தேய்த்துத் துலக்கினர்.
கடந்த 18ஆம் நூற்றாண்டில்தான், அய்ரோப்பிய நாடுகளில் பல்பொடியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தப் பொடி பல்லைத் துலக்கியதோடு, பல்லின் பாதுகாப்புக்காக இருக்கும் எனாமலையும் தேய்த்து அழித்துவிட்டது. 1850இல் (கரும்பலகையில் எழுத உதவும்) சாக் கலந்து பல்பொடி தயாரிக்கப்பட்டது. 1873இல் கோல்கேட் நிறுவனம் ஜாடிகளில் பற்பசை தயாரித்து விற்றது.
1498ஆம் ஆண்டில் சீனர்களால் பயன்படுத்தப்பட்ட பல்துலக்கும் பிரஷ் பற்றிய குறிப்பு சீனமொழிக் கலைக் களஞ்சியத்தில் காணக் கிடைக்கிறது. விலங்கு எலும்பில் கோக்கப்பட்ட சைபீரிய காட்டு எருதின் மயிர்கள் (இன்றைய) பிரஷ் போலப் பொருத்தப்பட்டுச் செய்யப்பட்ட பிரஷ் அது. அய்ரோப்பியர்களின் ஈறு மென்மைக்கு ஏற்றாற்போல் குதிரையின் மயிர்கள் பொருத்தப்பட்ட பிரஷ் தயாரிக்கப்பட்டு சீனர்களால் அய்ரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டன.
இவற்றிற்கு முன்னதாகவே 5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு மாதிரியான பிரஷ் எகிப்தில் பயன்பாட்டில் இருந்ததாக அகழ்வுகள் எண்பிக்கின்றன. தற்கால பிரஷ் 1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் எனும் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. 1840இல் மேம்படுத்தப்பட்ட பிரஷ் வந்தது. 1938இல் நைலான் பிரஷ் உருவாக்கியவர் டுபான்ட் தெ நெமோர் என்பவர். மின்சார பிரஷ் கூட 1939இல் உருவாக்கப்பட்டுவிட்டது.
இவ்வளவு பாதுகாப்பாகத் துலக்கியும் பற்கள் கெட்டுப்போவது, விழுவது, சொத்தை உண்டாவது போன்றவை ஏற்பட்டன. இவை விழுந்துவிட்ட இடங்களில் பொய்ப் பற்கள் பொருத்தப்படுவது அவசியமாகிவிட்டது. பற்கள் கட்டுவது 1791இல் தொடங்கிவிட்டது. நிகோலஸ் துபா தெ ஷெமான் என்பவர் 1791இல் பல்செட்டுக்கான காப்புரிமை பெற்றுள்ளார். மனிதப் பற்கள், விலங்குப் பற்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்செட் கி.மு.700ஆம் ஆண்டிலேயே இருந்துள்ளது. தந்தத்தாலும் பல்செட் தயாரிக்கப்பட்டு, இருக்கும் பற்களோடு கம்பிகளால் பிணைக்கப்பட்டுப் பயன்படுத்தியுள்ளனர். பீங்கானில் தயாரிக்கப்படும் பல்செட் கண்டுபிடித்தவர் நிகோலஸ் துபா தெ ஷெமான் அவர்களே! இவர் இதற்கான காப்புரிமையை 1791இல் இங்கிலாந்து நாட்டில் பெற்றிருக்கிறார்.
பல் துலக்குவது பற்களின் மேல்பகுதி, அடிப்பகுதி ஆகியவற்றைச் சுத்தப்படுத்தும். பற்களின் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் உணவுத் துணுக்குகளை அப்புறப்படுத்துவது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அமெரிக்கப் பல் மருத்துவர் லெவி ஸ்பியர் பார்ம்லி என்பவர் கண்டுபிடித்ததுதான் பல்லிடுக்கில் மெல்லிய நூலைக்கொண்டு சுத்தப்படுத்தும் முறை.
பல்நோய் பலவித தோல் நோய்களுக்கும் காரணி. அருவருப்பான தோல் நோயால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பிரபல தோல் நோய் மருத்துவர் காலஞ்சென்ற தம்பையா அவர்களைப் பார்த்தார். சோதித்த பின் மருத்துவர் தம்பையா, அவரைப் பல் மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். அந்தப் பல் மருத்துவர் வாயில் மேல் வரிசையில் இரண்டு பற்களைப் பிடுங்கி எடுத்துவிட்டார். சில நாள்களில் தோல் பழையபடியே மாறி, தோல் நோயின் சின்னமே இல்லாமல் சீராகிவிட்டது. பற்களின் பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை இதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
தமிழ் சினிமா உலகில் பெரும் புரட்சியையும் அதன் போக்கில் தலைகீழ் மாற்றத்தையும் உண்டாக்கிய சினிமா வேலைக்காரி. சி.என்.அண்ணாதுரை, எம்.ஏ., என்றிருந்த காலத்தில் அறிஞர் அண்ணாவால் கதை, வசனம் எழுதப்பட்ட படம். அதன் ஒரு காட்சியில் கடவுள் பொம்மைக்கு முன்பு நின்றிருக்கும் ஒருவர் கையைக் கூப்பி வணங்குவதற்குப் பதிலாகக் காலைத் தூக்கி படையல் பட்சணங்களை எட்டி உதைத்த காட்சி இடம் பெற்று அதிர்ச்சியை, ஆவேசத்தை, கண்டனத்தை ஏற்படுத்தியது. அந்தக் காட்சி பலரின் மனதில் மகிழ்ச்சியை, அறிவை ஏற்படுத்திய விளைவும் ஏற்பட்டது உண்டு. அதே காட்சிக்கு முன்னதாக படத்தின் நாயகன் காளியைக் கும்பிட்டுக் காசு பணம் செலவழித்தும் பலன் ஏதும் ஏற்படாதது கண்டு கோபம் கொப்புளிக்கப் பாடுவான், கண்ணில்லையோ? உன் காதென்ன செவிடோ? என்று கடவுளிடம் கண்டனக் குரல் கொடுப்பான். கதாநாயகன் அந்தப் பாடலைத் தன் சொந்தக் குரலிலேயே பாடி, முடிவில் பட்சணங்கள் இருந்த பாத்திரங்களை எட்டி உதைத்து அந்தக் கடவுளால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதை எண்பித்துக் காட்டுவார். அந்தப் புரட்சி நடிகர்தான் நடிப்பிசைப் புலவர் என்று அழைக்கப்பட்ட கே.ஆர்.இராமசாமி அவர்கள். நாத்திகம் எது? ஆத்திகம் எது? என்பதை விளக்கிடும் வகையில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மறுவாழ்வுக்காக அண்ணா எழுதிய சொர்க்க வாசல் படத்தில் நடிக்க பாகவதர் மறுத்தபோது, அப்படத்தில் நடித்து அண்ணாவின் ஆசையை நிறைவேற்றிய நடிகர்!
கஷ்டப்படும் பக்தனைக் கைதூக்கி விடாத கடவுளை, கண்ணில்லாத கடவுள் என்று திட்டுவது மக்களின் பழக்கம். பார்வை இல்லாதவர்களைக் குருடன், கபோதி என்று வசைபாடுவதும் வழக்கம். அப்படித் திட்டித் தீர்க்குமாறான நிலையில் பார்வை இழந்தவர்களும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் துன்பத்திற்கு ஆளானதும் உண்டு. பார்வை இன்மையையும், குறை-பாட்டையும் கொண்ட மனிதர்களைப் படைத்த கடவுள் எப்படி தயாபரன்? கருணை உள்ளம் கொண்டவன்? அன்பே குணமாகக் கொண்டவன்? அது நிற்க.
பார்வையைத் தருவதற்கும் குறையைச் சரி செய்யவும் எல்லாம் வல்ல கடவுள் கையாலாகாத நிலையில் இருப்பதை நினைத்து வருந்திய மனிதர்கள் முயன்று வெற்றி பெற்றதைப் பார்ப்போமா? கண் பார்வைக் குறை எந்த அளவில் உள்ளது என்பதை அளவிடுவதற்கான CHART ஒன்றினை (விளக்க அட்டை) வடிவமைத்தவர் ஹெர்மன் ஸ்நெல்லன் எனும் டச்சு நாட்டுக் கண் மருத்துவர். 1862இல் இவரால் வடிவமைக்கப்-பட்ட அட்டைதான் இன்றளவும் பயன்-பாட்டில் உள்ளது. இங்கிலீஷ் எழுத்துகளான C,D,E,F,L,N,O,P,T மற்றும் Z என்கிற பத்து எழுத்துகள் மட்டுமே இந்த அட்டையில் அச்சிடப்பட்டு இருக்கும். முதல் வரிசையில் இருக்கும் எழுத்துகளை (8.75 மி.மீ.) 20 அடி தூரத்தில் அமர்ந்து படித்தால் குறைபாடற்ற நார்மல் (20/20) பார்வை என்கிறார்கள். அதற்கடுத்த வரிசையில் உள்ள இருமடங்குப் பெரிதான எழுத்துகளை (17.5 மி.மீ.) படித்தால் பார்வை அளவு 20/40. இத்தகைய பார்வை அளவு 20/200 என்று இருக்குமேயானால் சட்டப்படி, குருடு என்பதாகக் கொள்கிறார்கள்.
வரலாற்றுப் பதிவின்படி கி.பி.1284ஆம் ஆண்டில் இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த சால்வினோ டிஅர்மேட் என்பாரும் அலஸ்சான்டரோ டஸ்பினா என்பவரும்தான் மூக்குக் கண்ணாடி என்று அழைக்கப்படும் கண்ணாடிகளைக் கண்டுபிடித்தனர். ஆனால், உலகப் பயணி மார்கோபோலோ 1270ஆம் ஆண்டில் சீனர் ஒருவர் கண்ணாடி அணிந்து படித்ததைக் கண்டதாகப் பதிவு செய்துள்ளார். அரேபியர்கள் அதனைக் கண்டுபிடித்ததாக அந்தச் சீனர் சொன்னாராம். தூரப் பார்வைக் குறைபாடுக்கும் கிட்டப் பார்வைக் குறை-பாடுக்கும் தனித்தனி லென்சுகள் பொருத்தப்-பட்டன. கி.பி.1730ஆம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த கண்ணாடி வணிகர் எட்வர்ட் ஸ்கார்லட் என்பவர் தற்போதுள்ள கண்ணாடியை வடிவமைத்தார்.
(தொடரும்)