முரண்பாடுகளின் மொத்தமே மத நம்பிக்கைகள்!
மதம், மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள் ஆகியவற்றின் பெயரால் மனிதன் தன்னுடைய அறிவை இழக்கிறான். மதத்தைப் பின்பற்றுவோர் முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டிருப்பதை இங்கே உள்ள படங்கள் காட்டுகின்றன.
அர்ச்சகர்களுக்கும், மூட நம்பிக்கை மற்றும் சடங்குகளுக்கும் பணத்தை மக்கள் கொடுக்கின்றனர். அதேநேரத்தில், பெற்றோருக்கு உணவளிக்க, கவனிக்க மறுக்கிறார்கள். இறந்தபின் திதி கொடுக்கிறார்கள்!
கர்நாடகாவில் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் எருதுகளைத் தீயில் புகுந்து விரட்டுகிறார்கள். அதேநேரத்தில் பசுவைப் புனிதம் என்பார்கள். மாட்டிறைச்சியை உண்பவர்கள்மீது ஆத்திரப்படுவார்கள். வழிபாடு என்பதன் பெயரால் விலங்குகளைக் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். அனுமனுக்குக்கூட பான் அட்டை கொடுக்கும் அவல நிலை. தேவி சரசுவதி பெயரில் முகநூல். அதேநேரத்தில் மேற்கத்தியக் கலாச்சாரம் என்று எதிர்ப்பு, விமர்சனம் செய்கிறார்கள்!
பன்னாட்டளவில் ஒவ்வொரு 3.6 வினாடிகளிலும் பட்டினியால் வதைபடுகிறார்கள் என்கின்ற நிலையில், லட்சக்கணக்கில் குழந்தைகளுக்கு பாலில்லை. ஆனால், கல் கடவுளுக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம். இதில் யாருக்கு முக்கியத்துவம்? சாப்பிட முடியாத கடவுளுக்கா? சாப்பிட முடிந்த மனிதனுக்கா?
சிந்திக்க வேண்டாமா? முரண்பாடுகளின் மொத்த உருவம்தானே மதம், மத நம்பிக்கைகள்.
- 50 ஆயிரம் செலவில் விநாயகர் சிலை ஆயிரக்கணக்கில் அதற்குப் பூசை – வணக்கம்! அடுத்த நாள் அதைத் தடியால் அடித்து கடலில் மிதிக்கிறான்!
- கருடனை பார்த்து கன்னத்தில் போட்டு வணங்குகிறான். கோழிக்குஞ்சை அது தூக்கும்போது கல்லால் அடித்து விரட்டுகிறான்.
- அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறான். ஆனால் கோயிலுக்குப் பூட்டுப் போடுகிறான்!
- கடவுள் நம்மைப் படைத்தது; நம்மைக் காப்பது என்கிறான். ஆனால், இவன்தான் கடவுளைப் படைக்கிறான், காக்கிறான்.
சிந்தியுங்கள்…