புத்தரை இழந்த புத்த மதம்!

மே 01-15

உற்சாக சுற்றுலாத் தொடர் – 7

புத்தரை இழந்த புத்த மதம்!

மனித குலத்தின் இன்னல்களைப் போக்க வழி கண்டவர் புத்தர். கடவுள் மறுப்பாளர். மூட நம்பிக்கைகளையும், ஏமாற்று வித்தைகளையும், மிருகங்-களைக் கொன்ற யாகங்களையும் எதிர்த்துப் போராடியவர். அவருக்கு நேர்ந்துள்ள அவமானச் சின்னமாக உள்ளது திபெத்!

தலாய் லாமாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு நடக்கும் மூட நம்பிக்கைகளின் வெளிப்பாடு புத்தரைப் புத்த மதம் இழந்து-விட்டதைப் பறைசாற்றுகின்றது.

உலகின் கூரையாக உள்ள மலை உச்சியில் உள்ளது லாசா நகரம்.

திபெத் நாட்டின் தலைநகரான லாசாவுக்கு பயணத்தின் 14ஆம் நாள் சென்றடைந்தோம். இமயமலையின் கிழக்குப் பகுதியின் மேல் விமானம் பறந்தது. உலகத்திலேயே மிக உயரத்தில் 13,000 அடி கடல் மட்டத்துக்கு மேல் ஓடும், யார்லங்க் சாங்போ (Yarlung TSangpo) என்ற இந்த ஆறு இந்தியாவின் அசாம் மாகாணத்தில் நுழையும்போது பிரம்மபுத்திரா ஆறு ஆகிவிடுகிறது.

திபெத்து நாடு கி.பி.8ஆம் நூற்றாண்டில் உண்டாக்கப்பட்ட சுதந்திர நாடாகும். புத்தமதம் எங்கும் பரவியிருந்தது. பல திபெத்திய அரசர்கள் ஆண்டார்கள். பிறகு தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். லாமாக்கள் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்கள். கி.பி.1792 வரை திபெத் வெளிநாட்டவர்களை நாட்டின் உள்ளே அனுமதிக்காமல் வைத்-திருந்தது. 1903இல் இந்தியாவிலுள்ள ஆங்கிலேய அரசு சீனாவுடன் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் திபெத்தை ஆக்கிரமித்தது. 1906இல் ஆங்கிலேய அரசு சீனாவுடன் சமாதான உடன்படிக்கை செய்து திபெத் நாட்டைச் சீனாவுக்குக் கொடுத்துவிட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு திபெத்திய மக்கள் சீனாவை விரட்டியடித்து சுதந்திர நாடாக அறிவித்-தார்கள். 1959ஆம் ஆண்டு மாசேதுங் சீனாவின் தலைவராக இருந்தபொழுது சீனா திபெத்தை ஆக்கிரமித்தது. திபெத் மக்களுக்காக மற்ற நாடுகள் உதவி செய்தாலும் சீனாவின் ஆட்சியை அசைக்க முடியவில்லை. தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
தற்பொழுது திபெத்தின் பொருளா-தாரத்தைப் பெருக்க சுற்றுலாப் பயணிகளை நாட்டின் உள்ளே வர சீனா ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. பெரிய அளவில் வளர்ச்சி தெரிகின்றது.

விமான நிலையத்தில் திபெத்திய முறையில் வெள்ளைப் பட்டுத் துண்டு மாலை போட்டு யாக் மாட்டுப் பாலின் கட்டியில் செய்த முறுக்குக் கொடுத்து தடபுடலாக மேள தாளங்களுடன் வரவேற்றார்கள். சீன ஆதிக்கம் எங்கும் பரந்திருந்தது. ஒவ்வொரு வீடு, கட்டிடத்திலும் சீனக்கொடி பறக்கின்றது. எங்கும் சீன ராணுவத்தினர் நிற்பது தமிழ் ஈழப்படங்களை நினைவுப்படுத்துகின்றது. திபெத் நாடு உலகத்திலேயே மிக உயரத்தில் (4,500 மீட்டர், 14,763 அடி) அமைந்த நாடு. உலகத்தின் கூரை (Roof of the world) என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்நாட்டின் பரப்பளவு 9,50,000 சதுர மைல்களாகும்.

விமான நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து செயின்ட் ரீஜிஸ் (St. Regis) என்ற விடுதிக்கு வந்து சேர்ந்தோம். இங்கும் திபெத்திய ஆடல் பாடல்களுடன் வரவேற்புதான். வரும் வழியில் பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்து வந்தோம். ஒரு மலையை சுமார் 2 மைல் நீளத்திற்குக் குடைந்து சாலை போட்டு வைத்திருந்ததால் பயண நேரம் பாதி குறைந்து விட்டதாக வழிகாட்டி (Tour Guide) சொன்னார். வழியெங்கும் மலைகள். ஆனால் பச்சைத் தாவரங்களையும் மரங்களையும் பார்ப்பது அரிதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் இந்த அழகான விடுதி வியப்பை உண்டாக்கியது. விடுதியில் காலை உணவு நூற்றுக்கும் மேல் விதவிதமாக வைத்திருந்தார்கள். மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். லாசா தெருக்களில் ஏராளமான திபெத்திய மக்கள் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் குளிரைத் தாங்க அடுக்கடுக்காக வண்ண ஆடைகள் அணிந்திருந்-தார்கள். கையில் ஒரு சுழலும் உருளையை வைத்துக் கொண்டு முணுமுணுவென்று மந்திரம் சொல்லிக் கொண்டு நடந்து கொண்டே இருந்தார்கள். இளைஞர்களும் வயதானவர்-களும் நடந்துகொண்டே மண்டியிட்டு கும்பிடு போட்டுக் கொண்டு சென்றவண்ணம் இருந்தார்கள். இதைப்பற்றி விசாரித்தால், இவர்கள் மொத்தமாக 10,000 முறை வரை மண்டியிட்டுத் தரையில் படுத்து பின் எழுந்து நடந்து மீண்டும் மண்டியிட்டு எழுந்து நடந்து வேண்டுதலை முடித்துக் கொள்வார்களாம்.  முழங்கால்களில் துணி மெத்தையும் கைகளில் கட்டைகளையும் வைத்து அந்த மாதிரி விழுந்து எழுவதைப் பார்த்தால் இவர்கள் புத்தரை இழந்துவிட்டார்கள் என்பது புரிகின்றது. இவர்கள் திபெத்தின் தொலை தூரத்திலுள்ள பல மாநிலங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் பார்த்தால், புத்த மதம் நிறைய மாற்றங்களுடன் மூட நம்பிக்கையின் முழு இருப்பிடமாகத் தெரிந்தது. புத்தரே பலவிதமான உடல் வருத்தும் நோன்புகள், பல ஆரிய வேத வழிமுறைகளில் எங்கும் உண்மையில்லை என்பதை உணர்ந்து பின்னர் தானே தெளிவடைந்தார்!

திபெத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில் ஜோஹாங் (Jokhang). இது கி.பி.641இல் ஒரு திபெத்திய அரசியால் கட்டப்பட்டதாகும். கட்டியதற்கு மூடநம்பிக்கையே காரணமாக அமைந்துள்ளது. அதைப் பற்றிய விளக்கம் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன். கோவிலுக்குள் நுழையும் முன் எல்லோரையும் ஆயுத பரிசோதனை செய்து  அனுப்புகிறார்கள். இக்கோவிலில் பல வகை உலோகத்தாலான மிகப்பெரிய ஆண் பெண் சிலைகள் உள்ளன. திபெத்தின் புகழ் பெற்ற மன்னனும் அவன் மனைவிமார்கள் மூன்று பேர் சிலைகளும் உள்ளன. ஒரு மனைவி நேபாளி, ஒருவர் சீனா, மூன்றாமவர் திபெத்தியர். தமிழ்நாட்டில் இருப்பதைப் போல தேங்காய் உடைப்பது, பூமாலை போடுவது, சூடம் ஏற்றுவது போன்ற வழக்கங்கள் இங்கு கிடையாது. ஊதுபத்தி போன்ற ஒரு வகை புகை உண்டாக்கும் தாவரக்குச்சியை யாக் மாட்டின் நெய் கொண்டு எரிக்கிறார்கள். புத்த பிக்குகள் ஆங்காங்கே செபித்துக் கொண்டு இருந்தார்கள். சீன ஆக்கிரமிப்பிற்குப் பிறகு புத்த பிக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்.

இரண்டாம் நாள் தலாய் லாமாக்களின் முந்தைய இருப்பிடமான பொடாலா அரண்மனை (Potala Temple) பார்க்கச் சென்றோம். இந்த அரண்மனை, வெள்ளை மாளிகை போன்று பளீர் என்று காட்சி அளிக்கின்றது. இது ஒரு குன்றின் மேல் கி.பி.1645லிருந்து 1653க்குள் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனையை ஒட்டியுள்ள சிவப்பு அரண்மனை (Red Palace) கி.பி.1690லிருந்து 1693 வரை கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனை-களைப் பார்க்க நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு படிகளில் ஏறி தொடர்ச்சியான மலை அறைகளை ஊடுருவிச் சென்றோம். மங்கலான ஒளியில் பளபளப்பான தங்கத்தினால் ஆன சிலைகள் பலவகை விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு மிளிர்ந்தன. இச்சிலைகளைச் செய்ய கலைஞர்கள் பலர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இச்சிலைகளில் இருப்பவர்கள் அரச குடும்பத்தினர்களாவர். எங்கு பார்த்தாலும் கனன்று கொண்டிருக்கும் ஊதுபத்திகள் மற்றும் பணத்தாள்கள் கிடந்தன. ஒவ்வொரு சிலைக்கும் போடுவதற்காக ஒரு ரூபாய் நோட்டு போல மாற்றி வைத்துக்-கொண்டு செல்கின்றனர். யாரும் பணத்தை எடுக்கப் பயப்படுகிறார்கள். ஏன் என்றால் திருடினால் தீமை வந்து பிடித்துக் கொள்ளும் என்று நம்புகிறார்கள். மற்றபடி அழகிய சித்திரங்கள், பல வண்ண மாவினால் வரையப்பட்ட கோலங்கள் பார்த்தோம்.

இத்தோடு அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான பெட்டிகளில் புத்தரின் கருத்துகளை எழுதி பாதுகாப்பாய் வைத்துள்ளார்கள். ஆகமொத்தம்  800 படிகளுக்கும் மேல் கால் வலிக்க ஏறி வெள்ளை மாளிகை, சிவப்பு மாளிகையை அடைந்தோம். மாளிகை மேல் தங்கக் கூரை வேய்ந்திருந்தார்கள். மலை உச்சியிலிருந்து அழகான ஊரைக் கண்டுகளித்தோம். புத்தபிக்குகள் அரண்மனையைப் பார்க்க வந்த பயணிகளுடன் அன்புடன் உரையாடினார்கள்.

ஏறத்தாழ 5 மணிநேரம் ஏறி இறங்கி அரண்மனையைப் பார்த்துவிட்டு விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் மாட்டுக்கறி கடைகள் பார்த்தோம். இவை யாக் மாட்டுக்கறியாகும். இங்கு புத்த மக்கள் யாக் மாட்டுக்கறியினை உண்ணுகிறார்கள். காரணம், இங்கே காய்கறிகளை எளிதாக விளைவிக்க முடியாது.

அன்று இரவு கலைப்பொருட் கண்-காட்சியும், மிகச் சிறந்த விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்தில் எங்களுக்கெல்லாம் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது என்ன-வென்றால், எங்களுடன் பயணித்தவர்களில் மிகவும் வயதான தம்பதிகளாக இருந்த லான்ச், மார்ச் அவர்களுக்கு திபெத்திய முறையில் திருமணம் செய்து வைத்தார்கள். நான் பெண்ணின் அம்மாவாக அறிவிக்கப்பட்டேன். வேடிக்கைதான். பிறகு திபெத்திய நடனம், பாட்டுக் கச்சேரி நடந்தது.

இரண்டாம் நாள் சாரா புத்த மடத்துக்குச் சென்றோம். சிறு மலைமேல் கட்டப்பட்டிருந்த அந்த மடம் நிறைய வீடுகளைக் கொண்டது. சீன ஆக்கிரமிப்பிற்கு முன்பு ஆயிரக்கணக்கில் ஆண், பெண் புத்தபிக்குகள் இங்கு இருந்ததாகச் சொன்னார்கள். ஒரு மண்டபம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் தலாய் லாமாவின் பிறந்த நாள் சமயத்தில் எல்லா பிக்குகளும் சந்திப்பார்களாம். இந்த மண்டபம் ஓர் அமெரிக்கத் திரைப்படத்திலும் வந்துள்ளது.
இந்த மடத்தில் பழைய அரசர்கள், அரசிகள் சிலைகளையும், மண்டலா என்ற வண்ண மாவுக் கோலங்களையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இன்னொரு இடத்தில் புத்த பிக்குகள் குழுக்களாக ஒருவரோடு ஒருவர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வெற்றி பெற்றவர்கள் வினோதமாகக் கையைத் தட்டி மகிழ்ச்சியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

இவர்களது கல்வி முறையே விவாதங்கள் மூலம்தானாம். இவற்றையெல்லாம் பார்த்து-விட்டு தலாய் லாமாக்கள் கோடை மாளிகைக்குச் சென்றோம். இந்த மாளிகை கி.பி.1780லிருந்து 14வது தலாய்லாமா 1959இல் நாட்டை விட்டு வெளியேறும்வரை அவரது இருப்பிடமாக இருந்தது. இந்த மாளிகையைச் சுற்றியிருந்த மரங்கள், பூந்தோட்டங்கள் மிக்க அழகுதான். தலாய் லாமா சிறுபிள்ளையாய் இருந்தபோது அயல்நாட்டுத் தூதர்கள் இங்கு வந்து அவருக்கு பல விஞ்ஞானப் பரிசுகளைக் (ரேடியோ, தொலைக்காட்சி பெட்டி) கொடுத்தனர். இப்பொழுது லாமா இங்கு இல்லாவிட்டாலும் மிக அருமையாகப் பாதுகாத்து வருகிறார்கள். மிக அழகிய சித்திரங்களும், பல வகைக் கலைப்பொருட்களும் பல அரிய நூல்களும் நிறைய உள்ளன.

அடுத்த நாள் காலை திரும்பி சீனாவின் செங்குடு சென்றோம். எங்கள் குழுவின் மற்றவர்களும் இணைந்து கொள்ள உலகின் உன்னதமான காதல் சின்னத்தைக் காணத் தயாரானோம். நீங்களும் தயாராகுங்கள்.

– சோம&சரோ இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *