அய்யாவின் அடிச்சுவட்டில்…. 128 ஆம் தொடர்

ஏப்ரல் 16-30

ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா!


07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவில் (கரந்தை தமிழ் மன்றத்தில்) நான் கலந்துகொண்டு சுயமரியாதைத் திருமண அடிப்படை _- எஜமானன் அல்ல ஆண்; அடிமை அல்ல பெண்! என்று குறிப்பிட்டு விழாவில் நீண்டதோர் உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

இந்தத் திருமணத்தை நடத்துவதில் எங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் அவசரம் இருக்கலாமே தவிர உங்களுக்கு வேலை இல்லை. ஏனென்று சொன்னால் அவர்கள் போட்டிருக்கின்ற நேரம் ராகுகாலம். அது எங்கே போய்விடுமோ என்று நாங்கள் பார்த்துக்கொண்டு வருகிறோம். தந்தை பெரியார் அவர்கள் கண்ட மௌனப் புரட்சியிது. ரத்தம் சிந்தாத கருத்துப் புரட்சி _- ஆயுதத்தை எடுக்காத புரட்சி. அதை நீங்கள் உங்கள் கண் முன்னாலேயே காண்கிறீர்கள்.

ஒரு காலத்திலே ராகுகாலம் என்று சொன்னால் நடுங்கிய நாட்டில், ராகு வந்துவிடப் போகிறது என்று பயந்து ஒதுங்கிய நாட்டிலே, ராகுகாலம் என்று சொன்னால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் மற்ற நேரத்தைப் போன்றதுதான் என்று தந்தை பெரியாரவர்கள் கொள்கைப் பிரச்சாரம் செய்தார்கள்.
அதோடு மட்டுமல்ல; இப்படிப்பட்ட வாழ்க்கை ஒப்பந்தங்களை நடத்தியும் காட்டினார்கள். அதனால்தான் நாமும், எங்கே ராகுகாலம் போய்விடுமோ என்று அவசர அவசரமாக இந்த மணவிழாவை நடத்த வேண்டிய நிலையிலே இருக்கிறோம்.

இன்னமும் நேரமும், காலமும் நம்முடைய வசதியைப் பொருத்துத்தான் என்ற தெளிவில்லை. எனவேதான், நாங்கள் இப்படிப்பட்ட ராகு கால மறுப்புத் திருமணங்களை நடத்த முக்கியத்துவம் கொடுக்கிறோமே தவிர இதை ஒரு சம்பிரதாயமோ அதில் நம்பிக்கை வைத்தோ அல்ல.

இது ஒரு சாதாரணப் பிரச்சார யுக்தி அவ்வளவுதான்!

நல்ல நேரம், கெட்ட நேரம் என்று ஒன்று இல்லை. சுட்டிக்காட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இதெல்லாம். உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆணும் பெண்ணும் சமம் என்பது இங்கே வலியுறுத்தப்பட்டது.

அய்யா அவர்களின் தத்துவமான சுயமரியாதைத் திருமணம் இதை அடிப்படையாகக் கொண்டுதான் ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற திருமணங்களிலே இல்லாத ஒரு சிறப்பு நிகழ்ச்சியை இங்கு இரண்டு பேருக்கும் சம உரிமை உண்டு என்று சொன்னாலும், இரண்டு பேருக்கும் தலைவர் உறுதிமொழி கொடுத்து நடத்தி வைத்தாலும் மணமகன் கையிலே தாலி இருக்கும்; அல்லது வேறு ஏதாவது இருக்கும். ஆனால், இங்கே இருவரும் சமம் என்ற முறையிலே மணமகள் மணமகனுக்கும் சங்கிலி அணிவித்ததைப் பார்த்தீர்கள்.

ஏனென்றால், சில ஆஸ்திகப் பெருமக்கள் பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்-காகத்தான் தாலி அணியப்படுகிறது. அதைக்கூட இந்தப் பெரியார் ஆட்கள் குறை சொல்கிறார்கள்! என்று சொல்வதுண்டு.

சங்கிலி அணியும் முறையில் இருவரும் சமம் என்பதற்காக சரி என்று சொல்லலாமே தவிர, முறை என்ற கருத்திலே வலியுறுத்தப்-படவில்லை.

ஆண் எஜமான் அல்ல; பெண் அடிமை அல்ல இருவரும் சமம் என்பதே சுயமரியாதைத் திருமணத்தின் அடிப்படை.

மேல்நாடுகளில் நிலா உலகத்திற்குப் போய் செவ்வாய் உலகத்திற்குப் போய் திரும்புகிறான், ஆனால், எமகண்டம் என்று சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு என்ன இருக்கிறது?

நெய்யை நெருப்பிலே ஊற்றாதே! பருப்பிலே ஊற்று என்று சொல்வதற்கு, அய்யா அவர்கள் 60 ஆண்டுகாலம் பாடுபட்டார்கள் என்றால் நம்முடைய மூடத்தனம் எவ்வளவு இருந்திருக்கிறது?

தந்தை பெரியார் சொன்ன கருத்துகள் மனித சமுதாய வளர்ச்சிக்கே தவிர வேறு எதற்கும் அல்ல.

தந்தை பெரியார் அவர்களும், அவருடைய பொதுத்தொண்டும் போல, அன்னை மணியம்மையார் அவர்களும், அவருடைய எளிமையும் போல வாழுங்கள் என்று சொல்லி வாழ்த்தி விடைபெற்றேன்.

தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மீ.அண்ணாமலை அவர்களின் செல்வி ராணிக்கும், மா.இராசேந்திரனுக்கும் நடைபெற்ற இந்த விழாவில், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் தோழர் இரா.இரத்தினகிரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

***

பிரபல வார இதழான தி இல்லஸ்ட்-ரேட்டட் வீக்லியிலிருந்து விடுதலை  அலுவலகத்துக்கு 04.06.1978 அன்று ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் வந்ததை அப்படியே விடுதலை இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். (தமிழாக்கம்) அதை அப்படியே இங்கு தருகிறேன். பெரியாரின் பெரும் வெற்றி என்ற தலைப்புடன் கொடுத்திருந்தார்கள்.

அதில், பார்ப்பனர்கள்…தமிழ்நாட்டில் வெறுக்கப்படுவதற்குக் காரணம், தமிழ்நாட்டு மக்களை அவர்கள் அவமதிப்பதாலும், சுரண்டுவதாலும்தான். திராவிடர்களாகிய நாங்கள், எங்கள் பொன்விளையும் பூமியில் பார்ப்பனர்கள் வந்து குடியேறுவதற்கு அனுமதித்தோம். அதற்கு நன்றிக் கடனாக அவர்கள் எங்களைப் பல ஜாதிகளாகப் பிரித்தார்கள். தாங்கள் உயர்ஜாதி மக்களாகையால் எந்தக் குற்றம் செய்தாலும் அதற்குத் தண்டனை கிடையாது எனக் கூறிக்கொள்ளும் கடவுளால் அனுப்பப்பட்ட அவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே பிறந்த சூத்திரர்கள் நாங்கள்.

அவர்கள் எங்களது பணத்தைப் பலவழிகளிலும் ஏமாற்றிப் பறித்து அதை அவர்களது குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் நிர்வாகத்தில் எல்லாப் பதவிகளிலும் அமர்ந்து கொண்டு அதன்மூலம் பின்னர் தகுதியும் திறமையும் வாய்ந்த திராவிடர்களுக்கு வேலை தராமல் மறுத்தனர்.

இப்படிப்பட்ட நிலைமைகள் பெரியாராலும் அவரது இயக்கமான திராவிடர் கழகத்தாலுமே மாற்றப்பட்டன. இவர்கள் (பெரியாரும் திராவிடர் கழகத்தினரும்) தங்களது கொள்கைகளை வெகு இலகுவாகப் பரப்புவதற்காகவே மேடைப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தினர். இந்த இயக்கத்தை வசை பாடுவதற்கு ஒருபோதும் தவறாதவர்கள் பார்ப்பனர்கள். இவர்கள் தங்கள் வசம் ஏகபோக உரிமையாக வைத்திருக்கும் பத்திரிகைத் துறையின் எதிர்ப்பையும் முறியடித்து, பெரியாரும் அவரது கழகமும் வெற்றி பெற்றிருக்கிறது இவ்வாறு பெர்ஹாம்பூரிலிருந்து ஆர்.என். பரத்வாஜ் என்ற அன்பர் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஜூன்_4ஆம் தேதி இதழில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள் என்றால் தந்தை பெரியாரின் கடுமையான உழைப்பு எப்படி நாடு தழுவியதாகவும் பாராட்டப்-படும்படியாகவும் உள்ளது என்பதை எடுத்துக்காட்ட இக்கடிதம் ஒன்றே போதும்.

***

தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை வரலாறு காணாத வகையில் கொண்டாடுவதற்காக, 04.06.1978 அன்று திருச்சியில் கூடிய நமது இயக்கத்தின் மத்திய நிர்வாகக் குழு கூட்டம், அதுவரை காணாத உணர்ச்சிப் பிரவாகத்துடன் கூடிய கொள்கைக் குடும்பங்கள் சந்திக்கும் எழுச்சி விழாவாக, இயக்கத்தில் முதியவர்களானாலும் இளைஞர்களானாலும், தாய்மார்களானாலும் அவர்கள் எவ்வளவு ஆர்வம் கொப்பளிக்க, கழகப் பணிகளில் தங்களைத் தீவிரமாக்கிக் கொள்ள முனைகிறார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரியும் வண்ணம் இருந்தது.

அய்யாவின் நூற்றாண்டு விழாவினை மிகவும் சிறப்புடன் கொண்டாடுவதற்கு முனைப்பாக ஓராண்டு முழுவதும் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து நான் தெளிவானதொரு தலையங்கத்தினை விடுதலையில் 15.06.1978 அன்று எழுதியிருந்தேன். அந்தத் தலையங்கத்தில், ஒப்பற்ற தலைவர் பெரியார் அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்ததும் அவர்களுக்குத் தொண்டராக இருந்து அவர்தம் இயக்கத்தில் ஈடுபட்டதும் மிகப் பெரும் பேறு என்ற பெருமைக்குச் சிகரம் வைத்தது போன்றது அவர்களது நூற்றாண்டு விழாவின்போது நாம் இருந்து அதனைக் கொண்டாடுவது. இது வெறும் வேடிக்கை விழாவல்ல; வெறும் வெளிச்சம்போடும் வாடிக்கையைக் கொண்ட விழாவாக அமையாது. அவர் தந்த அறிவுச் செல்வத்தை, அகில உலகமும் பரப்பிட வேண்டிய அரியதோர் விழாவாக நடத்திட வேண்டிய மாபெரும் திருவிழாவாகும்.

பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவும், அய்யாவின் பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரத்தை சிற்றூர் முதல் பேரூர் வரையிலும், பட்டிக்காடு முதல் பட்டணக்கரை வரையிலும் பரப்பவும் தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

தமிழ்ப் பெருமக்கள் முழு உற்சாகத்துடன் பங்கேற்கும் விழாவாக இவ்விழா அமைய வேண்டும் என்பதற்காகவே நூற்றாண்டு விழா நிதியாக 5 லட்ச ரூபாய் நிதி திரட்டுவது என்றும் இதில் பெரிதும் வீட்டுக்கு வீடு சென்று ஒரு ரூபாய் வசூலிப்பதே பிரதான திட்டம் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது மிகவும் சிறப்பானதாகும்.

தந்தை பெரியார் அவர்களது 60 ஆண்டுகாலத் தொண்டால் பயன் பெற்றுள்ள நமது மக்கள் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களில் நன்றியுள்ள ஒரு பகுதியினர் தலைக்கு ஒரு ரூபாய் என்றால் நூற்றாண்டு விழா நிதி நமது இலக்கான 5 லட்சத்தையும் தாண்டி பல மடங்கு மேல் போய்விடுமே!

நூற்றாண்டு விழா நிதி என்பது உண்மையில் தந்தை பெரியார் தொண்டுக்குத் தலைவணங்கி அளிக்கும் நன்றிக் காணிக்கை நிதியாகும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களும் _ விவசாயிகள், பாட்டாளித் தோழர்கள், வணிகப் பிரமுகர்கள் என்.ஜி.ஓ.க்கள் என்ற நமது அரசு ஊழியர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தாய்மார்கள் ஆகிய ஒவ்வொரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கு உதவிட முன்வருவது மிகவும் அவசியம் ஆகும்.

தந்தை பெரியார் அவர்கள் இல்லாதிருந்-தால் நாமெல்லாம் எங்கிருப்போம்? எந்த நிலையில் இருந்திருப்போம்? என்று நெஞ்சைத் தொட்டுச் சிந்தித்து அவர்களுக்கு நாம் பட்டிருக்கும் நன்றிக்கடனை பல வழிகளில் செலுத்திட வேண்டும்; அதற்கு இது ஒரு எளிய வழி என்று எல்லோரும் எண்ணிட வேண்டுமாய் தமிழ்ப் பெருமக்களை மிக்க பேரன்புடன் வேண்டிக் கொள்ளுகிறோம்.

தனது இறுதி மூச்சு அடங்கும் வரை பதவி, புகழ், பெருமை, சுகபோகம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது ஆமைகளாய், ஊமைகளாய் கிடந்த, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே உரிமைக் குரலாய் ஒலித்த நம் அய்யாவுக்குக் கல்விக் கண்ணையும், உத்தியோகக் கண்ணையும் தமிழர்களுக்குத் தந்த அந்த அறிவு வள்ளலுக்கு, தன்மானம் அறியாது கிடந்த மக்களுக்கு தன்மானத்தைப் போதித்தும் பிறகு இனமானம் தன்மானத்திலும் பெரிது என்று சொல்லியும் கொடுத்த சோர்வறியாத மேதைக்கு, மண்ணடிமை தீருவதைவிட முக்கியம் பெண்ணடிமை தீர்வது என்று உழைத்திட்ட உலகப் பெரியாருக்கு அனைவரும் நன்றிக்கடன் செலுத்த இதைவிட ஓர் அரிய வாய்ப்பு வேறு கிட்டுமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும் நம் தமிழ்ப் பெருமக்கள்.

நிதி குவிந்திட வேண்டும்; அதன் மூலம் எங்கெங்கும் பெரியார் கொள்கைமயமே என்று ஒரு பிரமிக்கத்தக்க மாற்றத்தை பெரியார் நூற்றாண்டில் இந்த நாடும் நானிலமும் கண்டாக வேண்டும்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவது என்று முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் உள்ள தமிழக அரசும் அறிவித்திருப்பதை நாம் வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பெருமை எங்கிருந்து கிடைத்தாலும் நாம் வரவேற்க வேண்டியவர்களே!

அதுபோது கொள்கை ரீதியான பல ஆக்கத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றையும் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் இனி என்றென்றும் திராவிடர் இயக்கம்தான் _ தந்தை பெரியார் வழி. இது இன்றைய அரசியல் நோக்கர்களின் கணிப்பு. இதைவிட அய்யா அவர்களது நூற்றாண்டு விழாவில் தனிச்சிறப்பு வேறு இல்லை.

பெரியார் நூற்றாண்டு விழா மக்களாலும் கொண்டாடப்படுகிறது; அரசாலும் கொண்டாடப்படுகிறது. அது அனைத்துத் தரப்பாலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

ஜாதியற்ற, மூட நம்பிக்கையற்ற, சமவாய்ப்புச்  சமுதாயத்தைச் சரியாக உருவாக்குவதே அய்யா நூற்றாண்டுக்குச் சரியான நினைவுச் சின்னம் என்றாலும் அதற்கு ஆவன செய்வதுதான் நூற்றாண்டு விழாவில் நமது செயல் திட்டங்களாகும்.

நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் அரசு ஊழியத்திலும் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைக் குடும்பங்கள் பல லட்சக்கணக்கில் உள்ளன என்பதை நமது நிதி வசூல் அளவுகோல்போலக் காட்டுவதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். நிர்ணயிக்கப்பட்ட நிதியைவிட அதிகமாகக் குவிந்தது என்றால் அய்யாவின் மானம் பாராத தொண்டுதான் காரணம் என்று குறிப்பிட்டு அன்று விடுதலை வெளியிட்டோம்.

நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *