நம் நாட்டில் அறிவியல் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் கருதி அரசு இதைச் செய்ய வேண்டும்.
– சி.என்.ஆர்.ராவ், அறிவியலறிஞர்
முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும் அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா?
– தீஸ்டா செட்டில்வாட், மனித உரிமைப் போராளி
தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் பணியாற்றத் தேவையான பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுதவிர, தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
– எஸ்.கே.கௌல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை விலக்கும் முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இடைக்காலத் தலைவருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்.
– அல் ஹுசைன், அய்.நா.மனித உரிமை குழுத் தலைவர்.
நம் நாடு உலகளாவிய போட்டித் தன்மைப் பட்டியலில் 79ஆம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல்களில் நம் நாடு முதல் 10 இடங்களில் இடம் பெறுவதற்குப் படைப்பாற்றல் கல்வி, புத்தாக்கம், தொழில் முனைவு, கூட்டு முதலீட்டு முறை ஆகியவற்றைச் செயல்-படுத்துவதன் மூலம்தான் முடியும்.
– அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.
ம.பி.யில் மணல் மாபியாக்களின் அநியாயம் தாங்க முடியவில்லை. பா.ஜ. அரசும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. குற்றவாளிகளும் போலீசாரும் கைகோர்த்துத் திரிந்தால் மாநிலம் எப்படி உருப்படும்? இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
– ஜோதிராதித்யா சிந்தியா, மேனாள் மத்திய அமைச்சர்