“நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல்.
தமிழ் என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற-போது ‘தமிதா’ என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் ‘தமில்லா’ ஆகி முடிவில் ‘திராவிடா’ என்று உருத்திரிந்தது. ‘திராவிடா’ என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது.
அதாவது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ள-வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்-கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொருத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு-விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரேமக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்-கொள்வது மிக மிக அவசியமாயிற்று.
தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
எனவே, தென் இந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதானது நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடிமறைக்க அனுமதிக்கக் கூடாது. நாகர்கள் என்பது இன அல்லது பண்பாட்டுப் பெயர்; திராவிடர் என்பது மொழி அடிப்படையில் அமைந்த அவர்களது பெயர்.
தாசர்கள் என்பதும் நாகர்கள் என்பதும் ஒன்றுதான்; அதே போன்று நாகர்கள் என்பதும் திராவிடர்கள் என்பதும் ஒன்றுதான். வேறுவிதமாகச் சொன்னால் இந்தியாவின் இனங்களைப் பற்றிக் கூறுவதானால், இத்துறையில் அதிகபட்சம் இரண்டு இனங்கள்தான் உள்ளன. ஆரியர்களும் நாகர்களுமே அவர்கள்.
– டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 7, பக்கம்: 300