அய்யாவின் அடிச்சுவட்டில்…. 127 ஆம் தொடர்

ஏப்ரல் 01-15

 

ஆரியத்தின் ஜம்பம் பலிக்குமா?

விடுதலை அலுவலகப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு நிகும்பன் என்ற பெயரில் முதுபெரும் பெரியார் தொண்டர் ஒருவர் பாராட்டி எழுதிய  கடிதத்தை 03.06.1978 அன்று விடுதலையின் மூன்றாம் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். அதனை அப்படியே இங்கே தருகிறேன்.

சிக்கெனப் பிடித்தோம்!

( நிகும்பன் )

(தந்தைக்குப் பிறகு தாய் -_ தாய்க்குப் பிறகு தளபதியாக இயக்கம் வளையாது, நெளியாது வீறுநடை போட்டு வரும் உறுதிப்பாட்டை உணர்ச்சியோடு படம் பிடித்துக் காட்டுகிறார், ஒரு பழம்பெரும் இயக்கத் தோழர்.)

உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் மனித நல்வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பல்வேறு தலைவர்கள் இருந்து வந்துள்ளனர். அத்தகையோர் மக்களால் போற்றப்பட்டும், மரியாதை செலுத்தப்பட்டும் வந்துள்ளனர். ஆயினும் உலக வரலாற்றை உன்னிப்பாகக் கவனிக்கும் எவரும், தன்னுடைய 95 வயது வரை ஓய்ச்சல் ஒழிவின்றி தன்னைச் சார்ந்த மக்களின் மேம்பாடு ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டும், ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் எவ்விதத் தொய்வு இல்லாமலும், தலைவராக அல்லாமல் _ தொண்டராக _ எதிர்ப்புகளுக்கும், ஏளனத்துக்கும் மத்தியில் சுற்றச் சூழ அவ்வப்போது தொல்லைகள் தந்து கொண்டேயிருந்த துரோகிகளுக்கு ஈடு கொடுத்துக் கொண்டே சலிப்பு ஏதுமின்றி உழைத்த ஒருவரை வரலாற்றுக் குறிப்பில் காணவே இயலாது. அத்தகைய பெருமை மிக்க சிறப்புக்கு நிதர்சனமான உதாரணமாகத் திகழ்பவர் வணக்கத்துக்குரிய தந்தை பெரியார் அவர்கள் ஒருவரேதான் என்று அறியும்பொழுது நமக்கெல்லாம் நெஞ்சு நிமிர்ந்த பெருமிதம் ஏற்படுகிறது. எவ்வளவோ பேர் தலைவர்களாக இருந்தனர், இருந்து வருகின்றனர். வழிகாட்டிகளாக, மகான்களாக, மகரிஷிகளாகப் போற்றப்பட்டனர், போற்றப்படுகின்றனர். சொல்லப்போனால் தேசப்பிதா, தேசத் தந்தை என்றுகூட பலர் பொத்தாம் பொதுவாக அழைக்கப்படுகின்றனர். ஆனால், எந்த நாட்டிலும், எந்த நாட்டு மக்களாலும், தங்களால் மதிக்கப்பட்ட, நேசிக்கப்பட்ட, போற்றிப் புகழப்பட்ட எந்த ஒரு தலைவரையுமே என் தந்தை எங்கள் தந்தை என்ற எக்காள அடைமொழியோடு அழைக்கப்பட்ட _ அழைக்கப்படும் தலைவர் நம் வணக்கத்துக்குரிய தந்தை பெரியார் அவர்களைத் தவிர எந்த ஒரு தலைவருமே கிடையாது. அந்தச் சிறப்புமிக்க பெருமைக்குரியவரும் நம் தந்தை பெரியார் அவர்கள்தான். அத்தகைய எக்காளத்துக்குச் சொந்தக்காரரும் தன்மானத் தமிழர்களாகிய நாமேதான். அண்மையில் சென்னையில் நமது இயக்கம் நடத்தி முடித்த மாணவர் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியிலே பயிற்சி மாணவராகப் பங்கெடுத்துக் கொண்டிருந்த அருமை மாணவத் தோழர் பாண்டியன் பேசும்போதுகூட வீட்டிலே சென்று அப்பாவைப் பார்த்து அப்பா நீங்கள் எனக்குத் தந்தையல்ல, தந்தை பெரியார்தான் எங்களுக்கும், இந்தச் சமுதாயத்துக்கும் தந்தை என்று கூறுவோம்.

அம்மாவைப் பார்த்து, அம்மா நீங்கள் எனக்கு அம்மா அல்ல. இந்தத் தமிழர் சமுதாய இயக்கத்தைக் கட்டி வளர்த்து மறைந்தாரே அந்த அன்னை மணியம்மையார்-தான் எங்களுக்கு அம்மா என்று கூறுவோம் என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறினாரே அந்த எக்காளப் பெருமிதம் உலகில் வேறு எவருக்கேனும் உண்டா?

நம்மைப் பெறுவதற்குக் காரணமாயிருந்த-வர்களை ஏதோ சம்பிரதாயப்படி அம்மா _ அப்பா என்று காலாகாலமாக நாம் அழைத்து வருகிறோமேயல்லாமல் நமது சாஸ்திரப்படி நாம் சூத்திரர்கள் என்னும் தேவடியாள் பிள்ளைகள்தானே! தேவடியாள் பெற்ற பிள்ளைகளுக்கு என் அப்பன் என்று ஒருவனைச் சுட்டிக்காட்ட என்ன நியாய உரிமை இருந்தது _ இருக்கிறது?

திருமண உரிமையே கிடையாது

நம்மையும் என் அருமை மகனே, என் செல்வ மகளே என்று அழைத்துக்கொண்டே நம் பெற்றோர்களைப் பார்த்து உனக்குத் திருமண உரிமையே கிடையாது. நீங்களெல்லாம் தாசி மக்கள், வேசி பரம்பரை என எழுதியுள்ள ஆதாரத்தையே மதமாகவும், சாஸ்திரமாகவும் அவற்றை வலியுறுத்துவதையே கடவுளாகவும் வணங்கிக் கொண்டும் இக்கருத்தை வலியுறுத்தும் நம் இன எதிரியையே நம் போற்றுதலுக்கான முன்னவர்களாகவும் ஏற்றுக் கொண்டுதானே இருந்தார்கள் நமது முன்னோர்கள். இந்தச் சூதான ஏற்பாட்டை அவமானகரமான சூழ்ச்சி வலைப்பின்னலை நமக்கு விளக்கிக் காட்டியவர் தந்தை பெரியார். ஆகவே நெஞ்சை நிமிர்த்தி உரத்த குரலிலே உலகறியக் கூறுகிறோம். என் தந்தை பெரியார் எங்கள் தந்தை பெரியார் என்று ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளாக நம் சந்ததி மீது ஏற்றப்பட்டுவிட்ட இந்த அவமானமிக்க சூதினை _ சூழ்ச்சியினை _ வஞ்சகத்தைப் புரிந்துகொள்ளக்கூட இயலாத வடிகட்டிய முட்டாள்களாகத்தானே இருந்து வந்துள்ளோம் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை சகாப்தம் தோன்றும் வரைக்கும்.

தந்தை அவர்களின் சங்கநாதம் தூங்கிக்-கிடந்த தமிழனை விழிப்படையச் செய்தது புதிய கருத்து _ புதிய சிந்தனை _ புத்தம் புதிய உணர்வு ஓட்டம். இவற்றால் ஆகர்ஷிக்கப்பட்ட ஒரு பிரிவு ஓரணியாகத் திரண்டு தந்தை பெரியார் அவர்களின் கூடாரத்திலே தங்களை இராணுவ வீரர்களாகப் பதிவு செய்து கொண்டனர்.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து தமிழ்நாட்டுப் பட்டிதொட்டியெல்லாம் பகுத்தறிவுக் கருத்துகளை சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்த தந்தை பெரியார் அவர்களின் வேலைத் திட்டங்களை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் ஜஸ்டிஸ் கட்சி அப்படியே முழுமையாக ஒரு மாற்றம் கூட வேண்டாமல் ஏற்றுக் கொண்ட காரணத்தால், அவ்வியக்கத்தோடு இணைந்து, விரைவிலேயே அதன் தலைவராகி சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேலத்தில் ஒரு மாபெரும் மாநில மாநாட்டைக்கூட்டி திராவிடர் கழகமென பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக மக்கள் மத்தியில் மிக மிக செல்வாக்குப் பெற்ற இயக்கமாக மாற்றிக் காட்டினார்.

புத்தரைப் போல்

கௌதமபுத்தர் எவ்வாறு அரசுகுமாரனாக இருந்து கொண்டே மனதில் தோன்றிய சீர்திருத்த எண்ணங்களை நாட்டிலே பரப்பிட, அரசுக் கட்டில் பலனளிக்காது என தீர்மானமான முடிவுக்கு சிந்தித்துத் தெரிந்து, இராச்சிய பாரத்தையே உதறித் தள்ளி, வெளியேறினாரோ, அதே போலவே, தந்தை பெரியார் அவர்களும், தாம் தலைமையேற்று நடத்தும் இயக்கம் அரசியல் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கக் கூடாது எனும் கருத்திலே மாற்று அபிப்பிராயத்துக்கே இடமில்லாமல் இராணுவக் கண்டிப்புடன் இருந்து வந்தார்கள். தந்தை அவர்களுக்கு வழி வழி வந்த பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள சொத்துகளை சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்துக்காக அறக்கட்டளை ஏற்படுத்தி தனது ஆஸ்தி முழுவதையுமே நாட்டு மக்களுக்குப் பொதுவாக்கிட வேண்டும் என எண்ணிய தந்தை அவர்கள் செய்த ஏற்பாடுதான் வணக்கத்துக்குரிய அன்னை மணியம்மையார் அவர்களைச் சட்டபூர்வமான வாரிசாக ஏற்படுத்திக் கொண்ட திருமண ஏற்பாடு. அதிலே அய்யா அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

சரியான கணிப்பு

அம்மா அவர்கள் தந்தை அவர்களின் மறைவுக்குப் பின்னால், மிகமிகக் குறுகிய கால அளவே நாலே நாலு முழு ஆண்டுகள் மட்டுமே இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தினார்கள் என்றாலும், தந்தையின் கணிப்பு எவ்வளவு சரியான கணிப்பு என நாமெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும்படியாக இருக்கிறதா இல்லையா? நான்கே ஆண்டுகள் மட்டுமேதான் அவர்களின் தலைமை நமக்குக் கிடைத்தது.

நாம் அவ்வளவு கொடுத்து வைக்காதவர்கள் ஆகிவிட்டோம்.

பதித்த முத்திரைகள்

ஆனால் அந்த நான்கே ஆண்டுகளில் அம்மா அவர்கள் நான்கு பெரிய முத்திரை பதித்த சாதனைகளை ஏற்படுத்தி விட்டார்களே!

1. தந்தை பெரியார் அவர்களின் காலடித்தடத்தை அணு பிசகாமல் அப்படியே பின்பற்றி, அம்மா அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளையும், அம்மா அவர்களின் வாழ்வுக்காக என்று அய்யா அவர்களால் ஒதுக்கித் தரப்பட்ட சொத்துகளையும் இணைத்து எல்லாவற்றையுமே பொதுவுக்கே பெரியார் மணியம்மை கல்வி தர்ம ஸ்தாபனம் என்ற டிரஸ்ட் ஏற்படுத்திவிட்டார்கள்.

2. இந்தியத் துணைக் கண்டமே திடுக்கிடும் அளவுக்கு இராவண லீலாவை நடத்தி, ஆரிய ஆணவ ஏகபோகத்தை எங்கும், எதிலும் எவ்வாறாயினும் நிலைநிறுத்தியே தீருவது என்ற அகங்கார எண்ணம்கொண்ட அலகாபாத் புகழ் இந்திரா அம்மையாருக்கு ஊமைக் காயத்தை ஏற்படுத்தினார்கள்.

3. உலகினுக்கே புதுமையானதொரு இயக்கமாக தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்துக்கு தஞ்சைத் தரணியில் சீரும் சிறப்புமாக பொன்விழாவை நடத்தினார்கள்.

4. எங்கெங்கோ சிந்தியும், சிதறியும் கிடந்த தந்தையின் ஆஸ்திகளை ஒருமுகப்படுத்தி, நெருக்கடி காலப் பிரகடனம் செய்யப்பட்டு திராவிடர் இயக்கத்தின் குரல் வளையையே நெரித்துப் போட்டுவிட வேண்டும் என உறுதி ஏற்று டெல்லிப் பட்டணத்தில் ஆங்கார ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அந்த நாளிலேயே பெரியார் பில்டிங்ஸ் எனும் ஏழடுக்கு மாளிகையை எழில் ததும்ப ஏற்படுத்தி இயக்க நடைமுறைச் செலவுகளுக்கு ஒரு நிரந்தர வருவாயை ஏற்படுத்தினார்கள்.

அம்மா அவர்களை, தனக்குப் பிறகு இயக்கத்தை நடத்திச்செல்ல என்று அய்யா அவர்கள் அடையாளம் காட்டியதானது எவ்வளவு பெரிய தூரநோக்குப் பார்வை கொண்டது என்பது புரிகிறதா இல்லையா?

விடுதலை ஏட்டில் பொதுவாக நாள்தோறும் தலையங்கப் பகுதிகளை ஆசிரியர் அவர்கள்தான் எழுதுவது என்றாலும் சிற்சில சமயங்களில் முக்கியம் எனக் கருதுவதையோ, தான் சொல்ல வேண்டும் எனக் கருதுவனவற்றை தந்தை பெரியார் அவர்களே எழுதுவது வழக்கம். மிகமிக முக்கியமானது என்றும், இயக்கத் தோழர்களும், நாட்டு மக்களும் உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என தந்தை பெரியார் அவர்கள் எண்ணினால் தலையங்கப் பகுதிகளைத் தன் கையெழுத்திட்டே எழுதுவது தந்தையின் வழக்கம். அவ்வாறு எழுதப்படுபவை இயக்கத் தோழர்களுக்கான அறிவுறுத்தல்கள் மட்டுமல்ல, கடைப்பிடித்து ஒழுக வேண்டிய அவசிய நெறிமுறைகளும்கூட. இது இயக்கத் தோழர்களுக்கு நன்கு தெரிந்த அரிச்சுவடி.

அந்த அரிய தலையங்கம்

அத்தகைய அரியதோர் தலையங்கத்தை அய்யா அவர்கள் 10-.8.1962 அன்று விடுதலையில் கையெழுத்திட்டு எழுதியுள்ளார்கள். வரவேற்கிறேன் என மகுடமிட்டு விடுதலையில் எழுதிய தலையங்கத்தில் அய்யா அவர்கள் கூறுகிறார்கள். என் உடல்நிலை எனக்குத் திருப்தி அளிக்கத்தக்கதாய் இல்லை. இப்போது போல் சுற்றுப்பயணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகம் நல்லபடி இயங்க வேண்டுமானால் பிரச்சாரமும், பத்திரிகையும் மிக்க அவசியமாகும். இந்த இரண்டு காரியத்திற்கும் தகுதியான தன்மையில்தான் நான் இருந்து வந்தேன். எப்படி என்றால் நான் ஒருவன்தான் இவற்றிற்கு முழுநேரத் தொண்டனாகவும் கழகத்தில் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் இல்லாதவனாகவும் இருந்து வந்தேன்; வருகிறேன். கழகத்தின் மூலம் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாத தோழர்கள் கழகத்தில் ஏராளமான பேர் இன்று நல்ல தொண்டு ஆற்றி வருகிறார்கள்.

ஆனால், கழகத் தொண்டுக்கு முழு நேரம் ஒப்படைக்கக்கூடிய தோழர்கள் இல்லை. பிரச்சாரத்திற்கும் அப்படிப்பட்ட தோழர் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைக்கும் அப்படிப்பட்ட தோழர் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் கழக விஷயமாய் நான் நீண்ட நாளாக பெருங்கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள் நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழுநேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும், பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக்கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார்.

இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவிக்கிறேன்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரம் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.
சிக்கெனப் பிடித்தோம்!

தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்டு _ வரவேற்கப்பட்டு நமக்கெல்லாம் அடையாளம் காட்டப்பட்ட பொதுச் செயலாளர் அவர்களை பெரியார் பாசறையின் தன்மானத் தொண்டர் குழாமாகிய நாம் மிக மிக கெட்டியாகவே பிடித்துக் கொண்டோம். அய்யா அவர்களுக்குப் பிறகு அம்மா _ அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு எங்களுக்குத் தலைவரே வேண்டாம் என்பது மட்டுமல்ல _ எங்களுக்கு தந்தையால் _ தாயால் அடையாளம் காட்டப்பட்ட பொதுச் செயலாளரே போதும். அவரேதான் ஆயுட்காலப் பொதுச் செயலாளராகவும் இருத்தல் வேண்டும் என்றும் நிர்ணயித்துக் கொண்டோம்.

ஒரு பழைய சம்பவம்

இச்சமயத்தில் பழைய சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. 1940_41 என நினைவு. அப்போது நம் இயக்கம் தென்இந்திய நலஉரிமைச் சங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) எனும் பெயரால் இயங்கி வந்தது. தெ.இ.ந..உ. சங்க சார்பான ஒரு மன்றத்தின் ஆண்டு விழா காலையில் நடந்துமுடிந்து அதே பந்தலில் தூத்துக்குடியில் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பத்திரப்பதிவு இலாகாவின் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரலும் குலசேகரப்பட்டினம்  வாசியுமான உயர்திரு. சி.டி.நாயகம் அவர்கள் தலைமையில் அண்ணாவும், தந்தை பெரியாரும் மேடையில் அமர்ந்துள்ளார்கள். அண்ணா பேசும்போது, குல்லுகபட்டர் ராஜாஜி அவர்களைக் குறிப்பிட்டு தமிழர்களின் நல உரிமையைக் களவாட வந்த கள்ளன் ராஜாஜி என்று அண்ணாவுக்கே உரித்தான அடுக்கு மொழியில் பேசி, அந்தக் கள்ளனின் ஜம்பம் இந்தக் குள்ளனிடம் (அண்ணா) பலிக்காது என நீண்ட கரகோஷத்தினிடையே கூறினார்கள். 1967இல் ராஜாஜியைப் பற்றி மெய்ப்பித்துக் காட்டினாரா இல்லையா?- ஒரு கையில் பூணூலைப் பிடித்துக் கொண்டு மறுகையால் தி.மு.க.விற்கு ஓட்டுப் போடுங்கள் என எந்த ராஜாஜி தி.மு.க. ஆதரவுப் பிரச்சாரம் செய்தாரோ _அண்ணாவையும் தி.மு.க.வையும் வைத்தே தந்தை பெரியார் அவர்களையும் திராவிடர் கழகத்தையும் ஒழித்துவிடலாம் என எந்த ராஜாஜி கணக்குப் போட்டாரோ அந்தக் கணக்கெல்லாம் வெறும் தப்புக் கணக்கு என ராஜாஜியே உணர்ந்து தலைக்கு முக்காடிட்டுக் கொண்டாரா இல்லையா?

அதே தோற்றத்தில் இருக்கும் நமது பொதுச் செயலாளரிடமா ஆரியத்தின் ஜம்பம் பலிக்கப்போகிறது?

நமது பொதுச்செயலாளர் அவர்கள் தந்தையால் நமக்களிக்கப்பட்ட தனயன் மட்டுமல்ல, இயக்கத்திற்குக் கிடைத்த நம் ஈரோட்டுத் தலைவரின் இளைய வாரிசும்கூட. ஆண்டாண்டுக் காலமாக நம்மை அடக்கி வந்த ஆரியம் அவர் கையால்தான் மரண அடி வாங்கப் போகிறது. இது முக்காலும் உறுதி.

(நிகும்பன் என்ற புனைப் பெயரில் எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் ஜே.வி.கே. என்ற பெயர் கொண்ட ஜே.வி.கண்ணன் அவர்களேயாவார்.)

(நினைவுகள் நீளூம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *