ஊன்றிப் படிக்க : உண்மையை உணருக!
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஆசை
இது ஆசா என்ற வடசொல்லின் திரிபு என்று கதைப்பர் பார்ப்பனரும், அவர் வால்பிடிக்கும் தமிழர் சிலரும்.
மனம் தன்னிலை நிற்றல் பொருள் அடையத் தக்க நிலை என்பர் அறிந்தோர். அஃதன்றி அம் மனம் வெளிப் பொருள் நோக்கி அசைதல் என்பது துன்பம் பயப்பது அன்றோ? எனவே அசைதல், அல்லது அசைவு என்பது மனத்தின் அசைவாயிற்று. அசைதல் தொழிற் பெயர். அசை முதனிலைத் தொழிற் பெயர். ஆசை முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆசை தூய தமிழ்ச் சொல் என்க. மனம் பிறவற்றில் செல்லுதல் என்பது அதன் பொருள். உதவி என்பதற்கு ஒத்தாசை என்றது இழிவழக்காக வழங்கி வருகிறது. இந்த ஒத்தாசை என்பதில் அசை என்பதுதான் ஆசை என நீண்டது என அறிதல் வேண்டும். அசைதல் என்பதற்கு ஆசை என ஆனதற்குப் பேச்சு வழக்கில் வந்துள்ள இதையும் கண்டு நினைவுறுத்தினோம்.
பூசை
இது பூசா என்ற வடசொல்லின் சிதைவு என்று ஏமாற்றுவார் ஏமாற்றுவர்.
பூசு+ஐ என்பன தொழிற் பெயர் முதனிலையும் இறுதி நிலையுமாகும். பூசுதல் என்பதுதானே இது?
பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும். எனவே, பூசை, பூசனை தூய தமிழ்ச் சொற்கள் என முடிக்க.
நாடகம்
இது தூய தமிழ்ச் சொற்றொடர், வடமொழியன்று. நாடுகின்ற அகம் என விரியும் நிகழ்தி வினைத்தொகை நிலைத்தொடர் என்பர் தொல்காப்பியர்.
இனி அகம் என்ற சொல்லுக்கு
அகம், மனம், மனையே, பாவம்
அகவிடம் உள்ளும் ஆமே
என்ற நூற்பாவினால் பொருள் காண்க. நாடு அகம் என்பதில் வரும் அகத்துக்கு புகலிடம் என்று பொருள் கொண்டு (மன) உள்ளம் நாடுகின்ற அகன்ற இடம் எனக் கொள்க. இது நாடகமாகிய இடத்தைக் குறித்தது. இனி, நாடுகின்ற பாவம். அதாவது மெய் எனக் கொண்டு நாடுகின்ற ஆடல்நிலை எனப் பொருள் கொள்க.
எவ்வாறாயினும் நாடகம் என்றது தமிழ்ச் சொற்றொடர் என்பதில் தமிழர்க்கு ஓர் ஐயம் வேண்டா.
– (குயில், 28.6.58)