ஆதாரப்பூர்வ மறுப்பு
அவதூறு செய்யத் துடிக்கும் ஆரியம்
– கி.வீரமணி
அம்பேத்கரைப் போய் அரசமைப்புச் சட்ட மேதை; அரசமைப்புச் சட்டக் கர்த்தா என்று சொல்கின்றார்களே; இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவர்தான் உருவாக்கினாரா?
அவர் ஒன்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவில்லையே. அவர் என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லையே என்று சொன்னார்கள்.
நண்பர்களே! இதற்குப் பதில் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
அம்பேத்கர் அவர்கள் அவருடைய உரையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். அவர் எவ்வளவு பெரிய பேருள்ளம் படைத்தவர் என்பதை இதன்மூலம் நீங்கள் தெரிந்து-கொள்ளலாம்.
அவருடைய டிபேட்ஸ் எல்லா வால்யூம்-களும் என்னிடத்திலே இருக்கின்றன. அதிலே அவர் புரிந்த வாதங்களிலேயே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, கெய்த்தான், முகமது சாதுல்லா, இப்படி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏழு பேரைப் போடுகிறார்கள். அதிலே ஒருவர் அமெரிக்காவில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் விலகி விடுகிறார். ஆக, அந்த இடத்திற்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போடப்படுகின்றார். ஆகக் கடைசியில் அது ஆறு பேரோடு நிற்கின்றது.
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிலே கடைசியாக 6 பேர் இருந்தார்கள். அந்த 6 பேரில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஒருவர்; டி.டி.கிருஷ்ணமாச்சாரியாருடைய உரையோ என்னிடத்தில் இருக்கின்றது. இதுவே மிகப்பெரிய ஆதாரமாகும்.
டி.டி.கிருஷ்ணமாச்-சாரியார் என்ன சொன்னார் என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்கின்றேன்.
நாங்கள் இத்துணைபேர் இருந்தாலும், எங்களால் இந்தப் பணிகளைச் சரிவரச் செய்ய முடியவில்லை. இதனை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் இத்துணைத் திருத்தங்களையும், இத்துணை வரைவுகளையும் செய்த பெருமை அம்பேத்கர் அவர்களையே சாரும் என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.
ஆனால், அம்பேத்கர் என்ன சொல்கின்றார்? அதைக் கவனியுங்கள். நான்தான் இதை எல்லாம் செய்தேன் என்று என்னைப் பாராட்டாதீர்கள். எனக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது பி.என். ராவ் என்று சொல்லுகின்றார்.
அவர்தான் அரசமைப்புச் சட்ட ஆலோசகர். அவருடைய அறிவுத்துணைதான் எனக்கு ரொம்ப அளவுக்குப் பயன்பட்டது. அவருக்கு நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன் என்று சொல்லுகின்றார்.
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரைச் சொல்கின்றார். கடைசியில் டி.டி. கிருஷ்ணமாச்சாரியைச் சொல்லுகின்றார். தான் மட்டுமே இதை எல்லாம் செய்யவில்லை என்று மற்றவர்-களையும் பெருமைப்பட உயர்த்திச் சொல்லுகின்றார்.
நூல் : அம்பேத்கர்பற்றிய அருண்ஷோரி நூலுக்கு மறுப்பு