Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நவீன அய்ரோப்பாவின் நாத்திகர்கள்-சென்ற இதழின் தொடர்ச்சி…

சென்ற இதழின் தொடர்ச்சி…

(புரட்சிகர சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் கடவுளின் கதை என்ற தலைப்பில் ஆறு தொகுதி நூல்கள் – ஆய்வு வரலாறுகளாக எழுதியுள்ளார். அதில் மூன்றாம் தொகுதியில் உள்ள நவீன அய்ரோப்பாவின் நாத்திகர்கள் என்ற தலைப்பில் வரும் சிறந்த பகுதி இதோ: படியுங்கள் – சுவையுங்கள்.)

ஆ-ர்

திதரோவுக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்தது அவர் பதிப்பித்த கலைக்களஞ்சியம். 1751இல் முதல் பாகம் வெளிவந்தது. அதன் 17ஆவது மற்றும் இறுதிப் பாகம் வெளிவந்தது 1765இல். தலைமைப் பதிப்பாளர் என்ற முறையில் 14 ஆண்டு காலக் கடும் உழைப்பை நல்கினார்.

புரட்சிக்கும் முந்திய புரட்சி என்று அதை மதிப்பீடு செய்திருக்கிறார் டூரன்ட் என்றால் அதற்குக் காரணம் பிரெஞ்சு சிந்தனை உலகில் சகல பழமைகளுக்கும் மாற்றாக அது புதுமைகளை முன்மொழிந்தது. அலெம்பெர்ட், வால்டேர், ஹோல்பாக், ரூசோ போன்ற அக்கால ஞானிகள் எல்லாம் அதில் பங்களிப்பு செய்திருந்தார்கள்.

கத்தோலிக்க கிறிஸ்தவம் ஆளுமை செலுத்திய அன்றைய பிரான்சில் மத விமர்சனமோ அல்லது சுதந்திரச் சிந்தனைகளோ அவ்வளவு எளிதில் வெளிவர முடியவில்லை; கடுமையான தணிக்கைமுறை இருந்தது. அதையும் மீறி இந்தப் பெருநூலைக் கொண்டுவர பல உத்திகளைப் பின்பற்றினார் திதரோ.

விக்கிரக ஆராதனை கொண்ட புறச் சமயங்களை விமர்சிப்பது போல கத்தோலிக்கத்தையும், அதன் குருமார்களையும், சடங்காச்சாரியங்களையும் விமர்சிக்கிற கட்டுரைகளை அதில் இடம் பெறச் செய்தார்.

அனேகமாக ஹோல்பாக் எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிற குருமார்கள் பற்றிய கட்டுரையில் இந்த உத்தி இருந்தது. அதிலுள்ள இந்தப் பகுதியை நோக்குங்கள்:

தங்களது ஆதிக்கத்தை உறுதிபட நிலைநிறுத்துவதற்காக கடவுள்களைக் கொடூரமானவர்களாக, பழிவாங்குகிறவர்களாக, வன்மம் கொண்டவர்களாகச் சித்தரிக்கிறார்கள் குருமார்கள்.

மதவெறி சாம்ராஜியத்திற்கு ஏற்ற ஒரு பரிதாப நிலையை மனிதர்கள் மத்தியில் உருவாக்குவதற்காக விதவிதமான சடங்குகளை, ஆச்சாரங்களை, அற்புதங்களை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.

அதனால் பலிபீடங்-களில் மனித ரத்தம் ஆறாய் ஓடியது. பயத்தாலும் மூடநம்பிக்கையாலும் மிரண்டு போயிருந்த மக்கள் கடவுள்களின் நல்லெண்ணத்தைப் பெற எந்த விலையையும் தரலாம் என்றார்கள்.

எரியும் நெருப்பில் _ ஒரு சொட்டுக் கண்ணீரும் விடாமல் _ தாய்மார்கள் தம் குழந்தைகளைப் போட்டார்கள்; பலிக் கத்திகளுக்கு பலபேர் பலியானார்கள்.

பழைய நம்பிக்கை மீதான யுத்தமானது புதிய நம்பிக்கைகளைப் புகழ்வது, விஞ்ஞான _ தத்துவ முறைமைகளைப் போற்றுவது என்பதாக இருந்தது. மதத்தின் இடத்தில் விஞ்ஞானம், குருமார்களின் இடத்தில் தத்துவஞானிகள் அமர வேண்டும் என்பது கலைக்களஞ்சியக்-காரர்களின் கனவாக இருந்தது.

எபிகூரசின் நாத்திகவாதம் எடுத்துரைக்கப்பட்டது. புருனோவும் ஹோப்சும் புகழப்பட்டார்கள். கிறிஸ்தவருக்கு (கடவுளின்) கிருபை எப்படியோ அப்படி தத்துவஞானிக்குப் பகுத்தறிவு என்றார் திதரோ.

கலைக்களஞ்சியமானது டேயிசத்தை ஆதரித்ததேயன்றி நாத்திகத்தை அல்ல. எனினும், பழமைவாத ரீதியிலான கட்டுரைகளில் பின்னிணைப்பாகத் தரப்பட்ட சில குறிப்புகள் மத நிந்தனையாக இருந்தன.

உதாரணமாக அற்புதங்கள், புராணங்களை மறுதலிக்கிற வகையில் ஆதாரங்கள் கோரும் கோட்பாடு-களைக் கொண்ட செய்முறை எனும் கட்டுரை அதற்கோர் உதாரணம் என்றார் டூரன்ட்.

ஆக, நடைமுறையில் கடவுள் உள்ளிட்ட சகல மத நம்பிக்கைகள் மீதும் சந்தேகத்தைக் கிளப்புவதை அடிநாதமாகக் கொண்டிருந்தது கலைக்-களஞ்சியம். அதனால்தான் மதவாதிகள் வட்டாரத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு.

அதை பாரிசில் வெளியிட திதரோ பட்டபாடு தனிக்கதை. விசால உள்ளம் கொண்ட ரஷ்யாவின் மகாராணி கேதரினும், பிரஷ்யாவின் ராஜா மகா பிரடெரிக்கும் அதைத் தங்களது நாடுகளில் வெளியிட முன்வந்ததைக் கண்டபிறகுதான் அதன் அச்சாக்கத்தை அனுமதித்தார்கள் பிரெஞ்சு அதிகாரிகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆளும் வர்க்க ஆட்சியாளர்களுக்கிடையே பிளவு வராமல் முற்போக்குச் சிந்தனைகள் மக்களைச் சென்றடைவதில்லை எனும் வரலாற்று விதியே இங்கும் வேலை செய்தது.

ஒரு ஜெர்மானியராகிய ஹோல்பாக் 1748இல் பாரிசில் குடியமர்ந்து குடிமகனானார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் புதுமையான தத்துவ விவாதங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.

அவரது மாளிகையில் பிரதி வியாழன் மற்றும் ஞாயிறுகளில் சாப்பாட்டு மேஜை முன்பு ஞானிகள் கூடினார்கள். அவர்களில் திதரோ, ஹெல்வெடியஸ், அலெம்பெர்ட், ரூசோ போன்றோரும் உண்டு.

சூரியனுக்குக் கீழ் உள்ள சகல விஷயங்கள் பற்றியும் சுதந்திரமாகப் பேசினார்கள். ஆங்கிலேய தத்துவஞானி ஹியூம், பொருளாதார மேதை ஆடம் ஸ்மித் போன்றோர் பாரிஸ் வரும்போது இந்த விருந்தில் பங்கு கொண்டார்கள்.

உண்மையிலேயே நாத்திகர்கள் என்போர் இருக்கிறார்களா? என்று ஹியூம் கேட்டபோது இந்த மேஜையின் முன்னால் அப்படி 17 பேர் இருக்கிறார்கள் என்று ஹோல்பாக் பதில் சொன்னாராம்! எனினும் சந்தித்துக் கொண்டவர்கள் அனைவரும் நாத்திகவாதிகள் அல்ல. எங்களில் கணிசமானோர் ஆத்திகர்களே;

அதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. நாத்திகர்களோடு அளவளாவுவதில் நாங்கள் பிரியம் கொண்டாலும் எங்களது ஆத்திகத்திற்காக வாதாடினோம் என்றார் அதில் பங்குகொண்ட பிரீஸ்டிலி என்பார். ஆக, ஆத்திகர்களும் நாத்திகர்களும் அந்த மாளிகையில் சந்தித்து மனந்திறந்து விவாதித்தார்கள்.

திதரோவின் கலைக்களஞ்சியத்திற்கு ஹோல்பாக் விஷயதானம் செய்ததைக் கண்டோம். 1761இல் அந்த நாத்திகப் பரிசோதனைச் சாலையிலிருந்து _ அப்படித்தான் நண்பர்கள் சிலர் அவரை அழைத்தார்கள். அம்பலப்படுத்தப்படும் கிறிஸ்தவம் எனும் நூல் வெளிவந்தது. காலமான எம்.பவுலங்கர் நூலின் ஆசிரியர் என்று அச்சாகியிருந்தது.

செத்துப்போன நூலாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முடியாதல்லவா? ஆனால் நூலை விற்ற சிலர் அடிமைகளின் கப்பல்களில் வாசம் செய்யுமாறு அனுப்பி வைக்கப்பட்டார்கள். என்ன காரணம்? நூல் திருச்சபைக்கும் அரசுக்கும் இடையிலிருந்த உறவைக் கடுமையாகத் தாக்கியது, மார்க்சின் வருகையை முன்னறிவித்தது: மதமானது மனிதர்களுக்குப் போதை ஊட்டும் கலை.

ஆட்சியாளர்கள் செய்யும் கேடுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழாமல் செய்யும் கலை. இகலோகத்தில் துன்பத்தில் வாட ஒப்புக் கொண்டால் பரலோகத்தில் மகிழ்ச்சியாய் இருக்கலாம் என்று நம்பவைக்கும் கலை.

பிரான்சின் அன்றைய துயரத்திற்கு அடிப்படைக் காரணம் திருச்சபையும் அரசும் ஒன்றுசேர்ந்து மக்களைக் கொள்ளையடிப்பது-தான் என்று கருதினார் ஹோல்பாக். ஒழுக்கங்களைப் போதிப்பதற்குப் பதிலாகக் கிறிஸ்தவமானது மெய்யான பகுத்தறிவுக்குப் புறம்பான அதிசயக் கதைகளையும், அர்த்தமற்ற கோட்பாடுகளையும் போதிக்கிறது.

ஒரு கிறிஸ்தவன் புலனறிவை நம்பக்கூடாது, பகுத்தறிவைப் பயன்படுத்தக்கூடாது, மாறாக மத அதிகாரத்திற்குப் பணிய வேண்டும் என்று போதிக்கிறது _ என்று வேதனையோடு சாடினார்.

எனினும் இது உச்சம் அல்ல. அது நடந்தது 1770இல். அதன் பெயர் இயற்கையின் முறைமை நூலை எழுதியவரின் பெயர் எம்.மிராபவுடு என்றிருந்தது. அவர் இறந்து பத்தாண்டுகள் ஆகியிருந்தன. அவரைப் பற்றி அறிந்த எவரும் நம்பவில்லை.

இதை அவர் எழுதியிருப்பார் என்று. எழுதியது ஹோல்பாக் என்று பத்துப்பேரே அறிந்திருந்தார்கள், ரகசியத்தை இருபது ஆண்டுகளாகக் காத்து வந்தார்கள். நிறையப் பேர் திதரோவைச் சந்தேகப்பட்டார்கள். பாவம் மனிதர், பாரிசில் இருப்பது பாதுகாப்பல்ல என்று வேறொரு ஊருக்குச் செல்ல வேண்டி வந்தது.

நூல் பரபரப்பாகப் படிக்கப்பட்டது. பண்டிதர்கள், பாமரர்கள், பெண்கள் என்று சகலரும் படிக்கிறார்கள் என்றார் வால்டேர். எழுதியது தானல்ல என்பதை தான் மட்டுமே அறிந்திருந்த திதரோவுக்கு நூல் மிகவும் பிடித்துப் போயிருந்தது.

இதிலே தத்துவமானது தெளிவாக, திட்டவட்டமாக, வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ஒரு பக்கத்தில் நாத்திகராக, இன்னொரு பக்கத்தில் டேயிஸ்டாக இல்லை. அவரது தத்துவம் எல்லாம் ஒன்றுதான் என்றார்.

பரந்த நோக்குடைய பிரஷ்யாவின் மகா பிரடெரிக்கிற்கே இந்த நூலைப் படித்து அதிர்ச்சி. பலரும் படிக்கிறார்கள் என்று பதிவு செய்த வால்டேருக்கும் அதன் நாத்திக உள்ளடக்கம் பிடிக்கவில்லை.

அய்ரோப்பாவின் மூடநம்பிக்கை அதிகமில்லாத இரண்டு பேர் தன் பக்கம் இருப்பது கண்டு கடவுள் பெரிதும் மகிழ்வார் என்றார் வால்டேர். இவர்களே இப்படி என்றால் பிரான்சின் ஆட்சியாளர்களும் மதகுருமார்களும் எத்தகைய எதிர்வினைகளை ஆற்றியிருப்பார்கள் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

நூல் வெளிவந்த அதே ஆண்டில் கூடிய குருமார்கள் சபையானது 15ஆம் லூயி கேட்ட பண உதவியைத் தந்துவிட்டு கிறிஸ்தவத்திற்கு எதிரான அந்த நுலை ஒடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. அவனும் உடன் நன்றிக்கடன் செலுத்தினான்.

பிரதிகளைக் கைப்பற்ற உத்தரவிட்டான். பாரிசின் நாடாளுமன்றம் கூடி ஏழு நூல்களைக் கண்டனம் செய்தது. அதில் இரண்டு ஹோல்பாக்கின் நூல்கள். மத நிந்தனை-யானவை, ராஜத் துரோகமானவை,

தெய்வீகம் பற்றிய சகல சிந்தனைகளையும் அழிப்பவை, மதம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களைக் கிளப்பி விடுபவை என்று வருணித்த நாடாளுமன்றம் அவற்றை எரித்துச் சாம்பலாக்குமாறும், ஆசிரியர்களைக் கைது செய்து தண்டனை தருமாறும் ஆணையிட்டது. அப்படி அந்த நூலில் என்ன இருந்தது?

மனிதனின் துன்பத்திற்கு காரணம் இயற்கையை அவன் அறியாததே. மனிதனுக்குத் துணிவைத் தருவோம், பகுத்தறிவை மதிக்கச் சொல்வோம், சத்தியத்தின் மீது மாறாத காதலை ஏற்படுத்துவோம், அதன் காரணமாய் அவன் தன்னைத்தானே நேசிப்பான்,

பகுத்தறிவுள்ள _ நீதியுள்ள மனிதனாக மாறுவான், அப்போது அவன் ஆனந்தமாக வாழ்வான் _ இப்படித்தான் நூலை ஆரம்பித்திருந்தார் ஹோல்பாக்.

இயற்கையை அறிந்திடுக என அவர் தந்த முழக்கத்திற்கு ஏற்ப அதன் அடிப்படைக் குணத்தை விண்டுரைத்தார். பிரபஞ்சத்திலுள்ள சகலமும் இயங்குகின்றன. சடப்பொருளின் சாரம் இயக்கமே.

கூர்ந்து நோக்கினால் புரிபடுகிறது எந்த வஸ்துவும் முழு ஓய்வில் இல்லை என்பது. ஓய்ந்து கிடப்பதாகத் தோற்றம் தரும் எதுவும்கூட எந்தக் கணமும் ஒரே நிலையில் இல்லை. சகலமும் விடாமல் ஜனிக்கின்றன, வளர்கின்றன, குறைகின்றன, மறைகின்றன.

கடினமான கற்களும் காற்றின் கைபட்டுக் கரைகின்றன என்றார் அந்த ஞானி. சடப்பொருளின் இந்தச் சாரத்திற்கு ஓர் அயல் சக்தியும் தேவையில்லை. அது தனக்குத்தானே இயங்கிக் கொள்கிறது.

சடப்பொருளுக்கு எப்படி உணர்வு வந்தது என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் அதன் இதர தன்மைகளாகிய ஈர்ப்பு சக்தி, காந்த சக்தி, நெகிழ்ச்சி சக்தி, மின்சக்தி போன்றவை மட்டும் என்ன அவ்வளவு எளிதில் புரியக்கூடியதா? கேட்டார் ஹோல்பாக்.

சடப்பொருளுக்குள் இத்தகைய சக்திகள் இருக்கும்போது அதற்குள் உணர்வு எனும் சக்திகள் உருவாகியிருப்பதில் ஆச்சரியம் இல்லை என்பது அவரது தெளிவான கருத்து.

மனிதன் ஒரு சுத்தமான பவுதீக வஸ்து. உலகின் இதரவற்றைக் கட்டுப்படுத்தும் அதே விதிகள்தாம் இவனையும் கட்டியாளுகின்றன. ஆனால், ஒரு பவுதீக உடலும், ஒரு பவுதீகமற்ற மனமும் எப்படி இணைந்து செயலாற்று-கின்றன?

மனம் அல்லது ஆன்மா எனப்பட்டது உடலின் இயக்கமே, ஒட்டுமொத்த மனிதக் கட்டமைப்பின் வெளிப்பாடே. மரணத்திற்குப் பிறகும் ஆன்மா உணரும், சிந்திக்கும், அனுபவிக்கும்,

வேதனைப்படும் என்பது சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட்ட ஒரு கடிகாரம் மணிக்கொரு தடவை ஒலி எழுப்பும் என்று சொல்கிற கதைதான் என்றார். அதாவது உடலுக்கு அயலாக இருக்கக்கூடிய உணர்வு, அந்த நித்திய ஆன்மா எனப்பட்டது இருக்கக்-கூடிய வாய்ப்பே இல்லை என்றார். பிரான்சிலும் மதவாதிகளின் அடிமடியில் கைவைக்கப்பட்டது.

இந்த உண்மையை உணர்தல் நடைமுறைப் பயன்பாடு மிக்கது என்றார். உடலிலிருந்து தனித்து இயங்குவது, நித்தியமானது மனம் எனும் தவறான புரிதல் மன நோய்களைத் தீர்க்க உதவவில்லை.

மனமானது உடலின் இயக்கம் எனும் உண்மையை உணர்ந்தால்தான் உரிய வைத்தியம் செய்ய முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினார். மனநல மருத்துவர்கள் தோன்று-வதற்கும் நல்ல தத்துவவெளி தேவைப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, நித்திய ஆன்மாவை மறுப்பது அந்தக் கடவுளின் தேவையைச் சத்தமில்லாமல் சாகடித்தது. சடப்பொருளுக்கு, இயற்கைக்கு அப்பாற்பட்ட தனிமனித ஆன்மா இல்லையென்றால் அவற்றையெல்லாம் கட்டியாளும் பேரான்மாவும், அந்தக் கடவுளும் இல்லையென்றானது.

தெளிவான நாத்திகப் பிரகடனம் உள்ளுறையானது. ஹோல்பாக் தொடர்ந்தார்: மனிதன் இயற்கையின் தயாரிப்பு; அதனது விதிகளுக்குக் கட்டுப்பட்டவன். தனக்கான ஆனந்தத்தை மனிதன் உலகிற்கு அப்பால் தேடாமல், இயற்கையில் தேடட்டும். அதற்காக இயற்கையை, அதன் விதிகளைக் கற்கட்டும்.

ஹோல்பாக்கின் தத்துவத்தில் கடவுளுக்கு இடமில்லை. அவருடைய சிந்தனை இயற்கையையே கடவுளாகப் பாவிக்கிற பேந்தியிசமும் இல்லை. எனவே, ஆத்திகம், டேயிசம், பேந்தியிசம் என்று கடவுளை மையமாகக் கொண்ட சகல கோட்பாடுகளையும் ஒதுக்கித்தள்ளி இயற்கைக்கு அப்பாற்பட்டது ஏதுமில்லை என்று துணிவோடு பிரகடனப்படுத்தியது.

கடவுளின் தனிப்பட்ட எதிரி என்று அவரின் நண்பர்கள் செல்லமாக அழைக்கிற அளவுக்கு தனது கொள்கையில் உறுதி காட்டினார். ஆரம்ப கால வரலாற்றுக்குள் போனால் அறியாமையும் பயமுமே கடவுள்களை உருவாக்கின.

ஒருவித கவர்ச்சி அல்லது உற்சாகம் அல்லது ஏமாற்று அவற்றை அலங்காரப்படுத்தின அல்லது அசிங்கப்படுத்தின, பலவீனம் அவற்றை வழிபாடு செய்தது, அறியாமை அவற்றை நீடித்து வைத்தது, பழக்கதோஷம் அவற்றுக்கு மரியாதை தந்தது, அதிகார பீடம் அவற்றை ஆதரித்தது, அவற்றால் பலனடைந்தது என்பதைக் காணலாம் என்றார் ஹோல்பாக்.

இத்தகைய திட்டவட்டமான வரலாற்றுப் பார்வை கொண்டு கடவுள் எனும் சொல்லாடலையே கைவிடச் சொன்னார். கடவுள் மற்றும் படைப்பு எனும் வார்த்தைகளையே மொழியிலிருந்து எடுத்துவிட வேண்டும்.

அறியாமையால் உருவாக்கப்பட்ட அர்த்தமற்ற வார்த்தைகள் அவை. அனுபவ-மில்லாத மனிதர்களை, சோம்பேறி மனிதர்களை அல்லது இயற்கையையும் அதன் தன்மை-களையும் அறிய ஆர்வமில்லாத மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் திட்டமிட்டுக் கோர்க்கப்பட்டவை அவை என்றார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மனித குலத்தின் நண்பர் எவரும் கடவுளின் நண்பராக இருக்க முடியாது. காரணம், அந்தக் கடவுள் எப்போதும் இந்த பூமி மீது வீசப்படும்  மெய்யான சவுக்கடியாய் இருக்கிறார் என்று முரசறைந்தார் ஹோல்பாக்.

இத்தகைய சிந்தனாவாதி பற்றி டூரன்ட் தரும் தகவல்களைக் கேட்டுக் கொண்டால் அவரின் முக்கியத்துவம் புரிபடும்: கத்தோலிக்கத்திற்கு எதிரான யுத்தத்தில் தங்களது அடையாள அட்டையாக இளைஞர்கள் நாத்திகத்தை ஏந்தினார்கள்.

ரூசோவை ஏற்றிருந்த ரோபஸ்பீருக்கு முன்பும் பின்புமான காலத்தில் பிரெஞ்சுப் புரட்சியின் உணர்வில் ஹோல்-பாக்கின் தத்துவம் இருந்தது. கேமில் டெஸ்மாலின், மரட், டேன்டன் ஆகியோரிடம் முறைமையின் எதிரொலியைக் கேட்கிறோம்.

ஹோல்பாக் வால்டேருக்கும் மேலானவர், திதரோவுக்கும் மேலானவர். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் நிலவிய சகல தத்துவம் மற்றும் மத விரோதச் சிந்தனை-களுக்கும் தந்தை அவர் என்றார் பக்குட்.

கத்தோலிக்க மீட்சியைத் தடுக்கும் ஒரு முயற்சியாக ஹோல்பாக்கின் நூலை சகல டிபார்ட்மென்ட் (மாகாண) தலைவர்களுக்கும் அனுப்பினார் டைரக்டரி காலத்து (பிரெஞ்சுப் புரட்சியின் ஒரு கட்டத்து) மந்திரி ஒருவர்.