ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக!
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
இலக்கணம்
இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம்.
இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு.
(இலக்கு+அணம்) இலக்கணம் என்றால் அதன் பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம்_அணுகுவது. ஈறு திரிந்த ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் இருந்தால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது.
இது செய எச்சம். (இலக்கு+அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு சொற்றொடர் ஆட்சியில் வந்துள்ளதா எனில் மணிமேகலையில் 30_-வது பவத்திறம் அறுகெனப்படுவ நோற்றகாதை 18_-வது அடியில், இலக்கணத் தொடரில் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க.
இதைத் தொடர்ந்தும், சொற்றகப்பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம்.
இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ.மீனாக்ஷி, அழகு, சேது முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள்.
இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காக, வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலம் படித்து பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் என்றும் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றனர் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (குயில், 8.-6.-1958)
நேயம்
இது நேசம் என்னும் வடசொல் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049_-ம் செய்யுள், நெய் போதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதைக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள்.
நெய் என்ற சொல்லினடியாகப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக.
மீன்
இது கூட மீனம் என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.
அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.
எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.
கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.
குயில் 28. 6. 1958