Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்துஜாவின் புரட்சி

தங்களுக்கு வரும் இணையர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு ஆண்களுக்கு மட்டும் இருக்கும் என்பதல்ல, பெண்களுக்கும் உண்டு என்பதைப் புரியவைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இந்துஜா.

marry.indhuja.com என்ற இணையதள முகவரி இந்துஜாவைப் பற்றியும் அவரது எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது.

திருமணத்திற்குப் பின் நீண்ட கூந்தல் வளர்க்காமல் ஆண்களைப் போல்தான் முடி வெட்டிக் கொள்வேன். எப்போதும் இருப்பதைப் போல எனது விருப்பப்படியே வாழ்க்கையினை வாழ்வேன். குடும்பப் பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.

திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பல நிபந்தனை களைக் கூறியுள்ளார்.

இந்துஜாவின் நண்பர்களிடையே மட்டுமன்றி, உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். இந்துஜாவின் இணைய தளத்தினை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் புரட்சிகரமான முடிவுக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். மேலும், பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித் துள்ளன. நாடு முழுவதிலுமிருந்து பலர் பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர்.

இந்தச் செய்தியினைக் குறித்து இந்துஜா, நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத்தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

முதலில் இந்த இணையதளம் தொடங்கியதை எதிர்த்த எனது பெற்றோர், இப்போது என் விருப்பத்தைப் புரிந்து கொண்டனர். மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இணையதளத்திற்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இத்தனை புதுமையினைச் செய்துள்ள இந்துஜாவின் இணையப் பக்கத்தில் அவருடைய பெயருடன் ஜாதிப் பெயரும் இடம் பெற்றிருப்பது தான் பொருந்தாமல் உள்ளது.