ஆசிரியர் பதில்கள்

மார்ச் 01-15

கேள்வி : இலங்கை அதிபரின் இந்திய வருகையால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதேனும் ஆதாயம் ஏற்பட்டுள்ளதா?- கா.தேன்மொழி, ஈக்காட்டுத்தாங்கல்

பதில் : சிக்கலான கேள்வி. பொறுத்துப் பார்த்துத்தான் பதில் கூறமுடியும். அரசியல் உரிமைகளைத் தமிழர்களுக்குத் தருவதற்கு அவரை மோடியோ, இந்திய அரசோ வற்புறுத்தியதாக எந்தச் செய்திக் குறிப்பும் வரவில்லையே! எனவே இலங்கைத் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் மிஞ்சுவது ஏமாற்றமே!

 

 

கேள்வி : மின்கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பேன், ஊழலை ஒழிப்பேன் என்ற கெஜ்ரிவாலின் கூற்றுகள் நடைமுறையில் சாத்தியமா?
– ப.அன்பரசன், திருவள்ளூர்

பதில் : பொறுத்திருந்து பார்க்கலாம். 5 ஆண்டு கால ஆட்சி அட்டவணை இருக்கிறதே!

கேள்வி : விக்கிலீக்ஸ் அசாஞ்சே பாதுகாப்புச் செலவு 93 கோடி ரூபாய் என செய்தி வெளிவந்துள்ளதே?
– கி.மாசிலாமணி, வந்தவாசி

பதில் : சுதந்திரமாகக் கருத்துக் கூறவோ, நிலை எடுக்கவோ, இவ்வளவு விலையா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

கேள்வி : செவ்வாய் கிரக ஒருவழிப் பாதைப் பயணத்திற்கு பலர் விண்ணப்பித்துள்ளதைப் பற்றி?
– அ.முல்லைவேந்தன், திருவண்ணாமலை

பதில் : அவர்களது துணிவான புது உலகம் காணும் முயற்சியின் விழைவுக்கு வாழ்த்துச் சொல்வோம்! அது ஒருவழிப்பாதை என்பதை அறிந்தும் Adventurous Sport உள்ளவர்கள் இவ்வளவு பேரா? வியக்கலாம்!

கேள்வி : உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்தாலும், பெண்கள் மீதான வன்முறைகள், தவறான பார்வைகள் குறையவில்லையே?
– இல.திராவிடமுரசு, காஞ்சி

பதில் : அப்படிக் கொண்டாடுவதுகூட வரவர வெறும் சடங்கு _ சம்பிரதாயமாவதால்தான் இந்நிலை _ வெட்கக் கேடு!

கேள்வி : வரி செலுத்தாத நிறுவனங்களின் முன்பு திருநங்கைகளை ஆடவிட்டு வரிவசூல் செய்யும் சென்னை மாநகராட்சியின இழிசெயல் பற்றி?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : தங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதே!

கேள்வி : புண்ணிய பூமி(!)யாம் பாரதத்தில் புற்று நோயால் இறப்போர் ஆண்டுக்கு 5 இலட்சம் என்பது எதனைக் காட்டுகிறது?
– ப.கிருஷ்ணமூர்த்தி, வேலூர்

பதில் : நம் மக்களின் அலட்சியப் போக்கையும் அரசுகளின் மெத்தன ஆளுமையையும் காட்டுகிறது!

கேள்வி : பா.ஜ.க. எம்.பி தருண்விஜய், ராமரைத் தென்னாட்டிற்குக் கூட்டிவரவில்லை. வள்ளுவரைத்தான் வடநாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். திருக்குறளை இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கப் போராடியும் வருகிறார். இதனால் தான் சார்ந்திருக்கும் கட்சியைத் தமிழ்நாட்டில் வளர்க்கப் பார்க்கிறார் என சிலர் கூறுவது தவறான குற்றச்சாட்டாகும் என கவிப்பேரரசு வைரமுத்து பேசியுள்ளாரே? – மன்னை சித்து, மன்னார்குடி

பதில் : நண்பர் வைரமுத்துவின் பார்வை தவறு என்பதை, அவரைப் புரியவைக்க கால அவகாசம் தேவை போலும்!

கேள்வி : அரசியல் சட்டத்தின் முன்னுரையில் மதச்சார்பின்மை மற்றும் சமதர்மம் பற்றிய கோட்பாடுகளைச் சேர்த்திருப்பது தேவையற்றது என உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் கூறியுள்ளது பற்றி?
– நாத்திகன் சா.கோ, பெரம்பலூர்.

பதில் : பா.ஜ.க. பதவிக்கு வந்தபிறகு அவர் உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிபதியாக வந்த மேதை. எனவே இவர் கூறியது தந்திரமான கூற்று! ஏற்கெனவே அரசியல் சட்டத்தில் இருந்தாலும் வெளிப்படையாக வற்புறுத்துவது கொள்கை என்பதை ஏனோ அவர் மறந்தார்!

கேள்வி : இளவயது முதல் நாத்திக எண்ணம் கொண்ட தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு இதழை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளிடம் தொடங்கச் செய்தது ஏன்?
– கு.பழநி, புதுவண்ணை

பதில் : பெரியார் பூரண பகுத்தறிவுவாதி. இன உணர்வாளர் _ தக்காரை அடையாளம் காணத் தவறாதவர். அதனால்தான் ஞானியார் அடிகளாரையும், பிறகு தவத்திரு குன்றக்குடி அடிகளாரையும் போற்றினார்!

கேள்வி : தலைநகரம் டில்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்று, காங்கிரஸ் கட்சியைக் காணாமலும், மோடியின் பா.ஜ.க.வை கரையவும் செய்துவிட்டதே?
– சி.மாணிக்கம், திருப்போரூர்

பதில் : சிற்றுளியால் மலையையும் உடைக்க முடியும். பா.ஜ.க. புதுப்புளிப்பு _ காங்கிரஸ் பழைய புளிப்பு _ இரண்டுக்கும் மாற்று தேடியுள்ளார்கள் டில்லி வாக்காளர்கள்.

கேள்வி : மத நல்லிணக்கத்தைப் பற்றி பிரதமர் மோடி பேசி இருக்கிறாரே அதைப் பற்றிய தங்கள் கருத்து?
– பா.ஆனந்தி, வியாசர்பாடி

பதில் : அப்பாடி, இப்போதாவது அமெரிக்கக் குட்டுகள் விழுந்த பிறகே _ பல ஏடுகள் தலையங்கம் எழுதிய பிறகே, டில்லி படுதோல்விக்குப் பிறகே இப்படிக் கூறியுள்ளார். பேச்சு முக்கியமல்ல செயலில் வருவதே முக்கியம்! பொறுத்துப் பார்ப்போம்!

கேள்வி : திருச்சியில் மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சம் பேரை உறுப்பினராகச் சேர்த்த பா.ஜ.க. சிறீரங்கம் இடைத்தேர்தலில் 5000 ஓட்டுகள்தானே வாங்கியிருக்கிறது? – அ.தமிழன், பொள்ளாச்சி

பதில் : மற்றவை மிஸ்டுகாலில் சென்றுவிட்டது; சொந்தக்கால் இவ்வளவுதான், புரிந்துவிட்டதே!

கேள்வி : பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதிமத – மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, பெண்ணுரிமை என்று தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கக் கொள்கைகளையே தனது தமிழ்த் தேசியத்தின் இலக்குகளாக பெ.மணியரசன் முன்வைத்திருக்கிறார். (திராவிடத்தை மட்டும் தவிர்த்துவிட்டு) இது எதைக் காட்டுகிறது? – வ.ம.வேலவன், பூவிருந்தவல்லி

பதில் : அவரது வித்தையையே காட்டுகிறது; தமிழ்த்தேசியம் எப்போது, பெரியாருக்கு முன்பே இவை வந்துவிட்டனவா? இளைஞர்களைத் திசைதிருப்ப _ ஏமாற்ற யாரையோ திருப்திப்படுத்த _ தனித் தலைமையைப் பாதுகாக்க _ எல்லாம் போகப்போகப் புரியும்.

கேள்வி : தமிழ்த் தேசியத்தின் பெயரால் சிலர் முருகனுக்குக் காவடி தூக்கிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்களே. இது எதில் போய் முடியும்?
– பழனிகுமார், அமைந்தகரை

பதில் : அரோகராவில் முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *