ஈஸ்டர் தீவு
-மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தென்அமெரிக்காவின் குச்கோ நகரிலிருந்து லீமா பெரு நகருக்கு விமானப் பயணம் செய்து வந்தடைந்தோம். அங்கிருந்து தொடர்ச்சியாக 7 மணி நேரம் விமானப் பயணம் செய்து அக்டோபர் 11ஆம் தேதி ஈஸ்டர் தீவை அடைந்தோம்.
எங்கே போகிறோம் என்ற எங்களிடம், ஓர் அற்புதமான இடம், மக்கள் என்று கூறிப் படங்களுடன் பேராசிரியர்கள் பாடம் எடுத்தனர்.
இத்தீவு உலகிலேயே மிகத் தனிமையான தீவாகும். தென் அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் பசிபிக் பெருங்கடலில் உள்ளது. 1000 மைல்களுக்கு அருகே நிலமே கிடையாது. நிலப்பரப்பு 63 சதுர மைல் கொண்டது.
1987இல் அமெரிக்காவுக்கு விண்வெளிப் பயண விண்கலம் இறக்க இடம் தேவை என்ற காரணத்திற்காக பெரிய விமானத் தளம் அமைக்கப்பட்டது உல்லாசப் பயணிகள் வர நல்லதாகிவிட்டது. இத்தீவு எரிமலைகளால் உண்டாக்கப்பட்டது. எரிமலைகள் அமைதி ஆகி 15,000 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது அறிவியலாளர்கள் கணிப்பு ஆகும்.
ராப்ப நூயி என்பது அந்த மக்கள் அழைக்கும் பெயர். 1722இல் டச்சுக்காரர் ஜேகப் ரோகவீன் ஈஸ்டர் ஞாயிறன்று முதன்முதலில் வந்திறங்கியதால் ஈஸ்டர் தீவு என்றழைக்கப்பட்டு வருகின்றது. ராப்ப நூயி எழுத்துகளைக் கல்வெட்டுகளில் பார்த்தோம். பட வடிவ எழுத்துகளாக உள்ளன.
இத்தீவில் வசிக்கும் மனிதர்கள் ஃகவாய் தீவில் உள்ள பாலிநேசியன் மக்கள் போல் முகச்சாடையும் உடல் அமைப்பும் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களுடைய பழக்க வழக்கங்கள் மிகவும் பழைமையானது. ஒரு காலத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நிறைந்திருந்தனவாம். மக்கள் அழித்ததாலும், எலிகள் வேர்களைத் தின்றதாலும் அவை பெரும்பாலும் அழிந்துவிட்டன.
இயற்கையை வழிபட்ட இம்மனிதர்கள் எரிமலைப் பாறைகளில் மிகப்பெரிய சிற்பங்களைச் செதுக்கி அவற்றை நெடுந்தூரத்தில் உள்ள அனகீனா கடற்கரையில் நிறுத்தி உள்ளனர். இச்சிலைகள் 6அடியிலிருந்து 30அடி உயரமானவை. இச்சிலைகளை மோய் என்று அழைக்கிறார்கள். இவை பல டன்கள் எடை உள்ளவை.
பெரிய சிலை 82 டன். இவற்றைச் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கடினமான கற்களை உளியாகப் பயன்படுத்திச் செதுக்கியிருப்பார்கள் என்று தொல்பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கனமான சிலைகளை வெறும் மரங்களையும் கயிற்றையும் வைத்தே எப்படி பல கிலோமீட்டர்கள் நகர்த்தி கடற்கரைக்குக் கொண்டு வந்திருப்பார்கள் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.
இச்சிலைகளை அத்தீவின் மக்கள் முன்னோர்-களாகவும், அவர்களை ஆபத்துகளிலிருந்து காப்பவர்களாகவும் கருதுகிறார்கள். இந்த மாதிரி நூற்றுக்கும் மேலான சிலைகள் தீவின் மலைச்சரிவுகளில் அரைகுறையாகச் செதுக்கிய நிலையில் கிடக்கின்றன.
1960இல் பெரிய சுனாமி வந்து சிலைகள் அடித்து சிதைக்கப்பட்டுவிட்டன. அவற்றை ஜப்பானியரின் எந்திரங்கள் மற்றும் அமெரிக்க, ஜப்பான் பொருளுதவியுடன் பொருத்திய பேராசிரியர்கள் வில்லியம் மலாய், அங்கு எங்களுடன் வந்து விளக்கிச் சொன்ன பேராசிரியை பெட்றீசியா வர்காஸ் காசனோவா, அவரது இணையர் பேராசிரியர் கிளாடியோ கிறிஸ்டினோ பல ஆண்டுகளாக அங்கே பணி செய்து வருகின்றனர்.
அவர்கள் காட்டிய அந்தத் திரைப்படம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. முதலில் இருந்த அந்த அழகிய அனகீனா கடற்கரையிலேயே அழகாக வைத்துள்ளனர்.
ஒரு காலகட்டத்தில் 1959இல் இத்தீவின் மக்கள்தொகை 159 பேர் தான். பிறகு தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ‘சிலே’ இத்தீவை தன் ஆட்சிக்கு உட்படுத்திய பிறகு இத்தீவின் மக்களுக்கு பல வகை உதவிகள் கிடைத்தன. உணவு இறக்குமதி, உல்லாசப் பயணிகள் வரவு, உலக அரங்கில் ஓர் அறிமுகம், அய்க்கிய நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவன ஈர்ப்பு ஆகியன கிடைக்க ஆரம்பித்தன.
மக்களின் வாழ்க்கைத்தரம் உயர ஆரம்பித்தது. பழங்காலத்தில் இவர்களுக்குப் பணப்புழக்கம் தேவைப்படாததாக இருந்தது. இப்பொழுது பயன்படுகின்றது. இந்தத் தனித்த தீவில் மக்களுக்குக் கடல் தரும் உணவுதான் முக்கிய உணவு. மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழை, கரும்பு போன்றவற்றைத் தென்-அமெரிக்காவிலிருந்து வந்து பயிர் செய்திருக்க வேண்டும்.
இம்மக்கள் இத்தீவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் தோணிகளில் வந்திருக்கக்கூடும் என்பது ஒரு கருத்து.
இம்மக்களின் தலைவர்கள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்தாலும் வடக்கு தெற்கு என்று இரு குழுவாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தீவின் ஓராண்டிற்கான தலைவராக, மலை உச்சியிலிருந்து இறங்கி ஒரு கிலோ மீட்டர் கடலில் நீந்தி, அங்குள்ள பெரிய மலைப் பாறையில் வந்து முட்டையிடும் சூட்டி டெர்ன் பறவையின் முட்டையை உடைக்காமல் கொண்டு வருபவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதைப் பறவை மனிதன் என்று சொல்லி 1760 முதல் 1864 வரை தொடர்ந்திருக்கின்றார்கள். “ராபாநூயி என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் “இந்தக் கதை காட்டப்பட்டுள்ளது. அந்தச் செங்குத்தான பாறையை நேரில் பார்த்த போது யாரால் முடியும் என்று மலைக்க வைத்தது.
நாங்கள் தங்கிய விடுதியில் கூரையின் மேல் புல் வளர்த்திருந்தார்கள். இதனால் என்ன நன்மை என்று தெரியவில்லை. கோடை வெயிலுக்காகவோ? தினமும் காலை உணவு மூக்குமுட்ட விதவிதமாகச் சாப்பிட வேண்டியது, பிறகு கால் கடுக்க நடந்து அல்லது பல நூறு படிகள் ஏறி ஊர்சுற்றிப் பார்க்க வேண்டியது.
உடல் சோர்ந்தது, உள்ளமோ துள்ளியது! இரண்டாம் நாள். பசிபிக் தீவுக்குரிய கலை நிகழ்ச்சிக்குப் பிறகு இரவு 9 மணியளவில் கடற்கரையிலிருந்து விண்மீன் கூட்டங்களைக் காணச் சென்றோம்.
அங்கே கற்கள் நிறைந்-திருக்கும், நாங்கள் உங்களுக்கு அனுப்பிய சிறிய கைமின் விளக்கை எடுத்து வாருங்கள் என்று சொன்னதையும் கேட்காமல் சென்ற இளங்கோவன் எப்போதும் போல என் (கைவிளக்கின்) உதவியால் தப்பித்தார்! எங்கள் குழுவுடன் வந்த புகைப்பட நிபுணர் க்ரிசு விண்மீன்களைப்பற்றி நிறைய விளக்கம் சொன்னார்.
இரவில் எப்படிப் படமெடுப்பது என்பதை ஒவ்வொருவருக்கும் அவரவர் காமிராவில் காண்பித்தார். அந்த இரவில் உலகின் மாசில்லாத தூய்மையான வானம் வந்து நம்மைத் தொடுவது போலவும், விண்மீன்களைக் கையால் பிடித்துவிட முடியும் போலவும் இருந்தது. எ
ங்கோ உள்ள தீவிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்களே, அங்கே என்ன இருக்கப் போகின்றது என்று எண்ணிய எங்களைப் பார்த்து விண்மீன்கள் சிரித்தன!
கனவு இன்று, நனவு அடுத்த இதழில்!