ஆசிரியர் பதில்கள்

பிப்ரவரி 01-15

veeramani

கேள்வி : இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் செயல்பட நான் அனுமதிக்க மாட்டேன் என்று மைத்ரிபாலா சிறிசேனா கூறியிருப்பது பற்றிய தங்களின் கருத்து? – பெ.கூத்தன், சிங்கிபுரம்

பதில் : புதிதாக ஆளவந்துள்ள அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அவர்கள், சிங்களப் பேரினவாதியாகத் தன்னைக் காட்டிக்-கொண்டால்தான், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற அரசியல் நிர்ப்பந்தத்தாலும், அடிப்படைக் கூறுபாட்டுப்-படியும் இப்படிக் கூறுகிறார்.

உண்மையான நல்லாட்சியை அனைத்துத்தர மக்களுக்காகவும் அவர் நடத்தினால் விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் தோன்றியது? அதன் அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து சரி செய்து ஆட்சி நடத்துவேன் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்.

என்னதான் இடைக்கால மாற்றம் ஏற்படினும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை முழுமை அடைய தமிழ் ஈழம் மட்டுமே தனித்த ஒரே தீர்வு என்ற கருத்தினை, இவரது வாக்கு உறுதிப்-படுத்துகிறது! – இல்லையா?

கேள்வி : இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், பொது வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற, சிறிசேனா அவர்களால், இலங்கைத் தமிழர்களுக்கு இனியாவது புத்தொளி பிறக்குமா? அல்லது இவரும் ராஜபக்சேவின் மறுபதிப்புத்தானா? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : முன்சொன்ன பதிலைப் படியுங்கள். இராஜபக்சே ஆட்சி வீழ்ந்தது என்பது முதல் மகிழ்ச்சி. இது நீடிக்கிறதா? நிலைக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி : அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் காலி இடங்களைத் தேர்வு மூலம் நிரப்பச் சொல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டும், பணத்தை வாங்கிக் கொண்டு காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாவது எதனைக் காட்டுகிறது? – சொர்ணம், ஊற்றங்கரை

பதில் : ஊழல் வெளிச்சத்தோடு தமிழ்நாடு அரசு இயங்குகிறது என்பதைக் காட்டுகிறது!

கேள்வி : அவாளே அண்ணாந்து பார்க்கின்ற அளவுக்கு உயர்ந்துவிட்ட பின்னும், சூத்தர_பஞ்சம தமிழ்ப் பெருமக்கள் சிலர் பார்ப்பனப் பாதந்தாங்கிகளாய் மாறுவது ஏன்? (பெரியாரின் மொழியில் பதில் சொல்லுங்களேன்)
-க. பொய்யாமொழி, மதுரை

பதில் : பெரியார் மொழியில் பதிலா? பொறுக்கித் திங்கறதுக்காக

கேள்வி : ஆண்டுதோறும் போகிப் பண்டிகையில் குப்பைகளைக் கொளுத்தும் நம் தமிழர்களின் மூளையில் சேர்த்து வைத்துள்ள குப்பைகளை எந்தப் போகியில் கொளுத்தப் போகிறோம்?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : பெரியார் கதிர்கள் என்ற தீப்பந்தத்தினை வைத்து எரிப்பார்கள் _ நிச்சயமாக

கேள்வி : திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்று (பா.ஜ.க.) மோடி அரசுடன் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டால், அக்கட்சியைத் தாங்கள் ஆதரிப்பீர்களா? எதிர்ப்பீர்களா? – இல.சங்கத்தமிழன், செங்கை

பதில் : இந்தக் கேள்வியே எழுந்திருக்காது நமது பழைய நிலைப்பாடுகளை நன்கு ஆய்ந்து புரிந்திருந்தால்! தி.மு.க.வையும் எதிர்த்தோமே!

கேள்வி : ஜெயா – ஜெட்லி சந்திப்பு மக்கள் நலனுக்கானது. வேறு எந்த உள் நோக்கமும் இந்தச் சந்திப்பில் இல்லை என தமிழிசை கூறியுள்ளது குறித்து?
– அ.பரந்தாமன், திருவேற்காடு

பதில் : இதுபற்றி ஜெட்லி அல்லவா விளக்கம் கூறவேண்டும்? இந்த அம்மையாருக்கே தெரியாது, அறிவிக்காது – நடந்த சந்திப்பு ஆயிற்றே அது!

கேள்வி : பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுச் சீரழிந்த 12 வயது சிறுமி கடவுள் ஏன் அனுமதித்தார் என கேள்வி கேட்டு போப் ஆண்டவரிடம் முறையிட்டு அழுதது, அதற்கு போப்பின் மனசாட்சி உறுத்தி பதில் சொல்ல முடியாமல் தவித்தது என்ற பரிதாப நிலை எதைக் காட்டுகிறது?
– அ.மா.கண்ணதாசன், வந்தவாசி`

பதில் : கடவுள் இல்லை என்பதை போப்பே மனதிற்குள் ஒப்புக்கொண்டார்; வெளியில் வெளிப்படையாகக் கூற முடியாது. காரணம் அவர் போப் ஆயிற்றே!

கேள்வி : ஆவின்பால் கலப்பட வழக்கில் அத்துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை என அரசு தரப்பில் காவல்துறை அறிக்கை கொடுத்திருப்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சி இல்லையா? – தீ.கரிகாலன், கடலூர்

பதில் : முழுப் பூசணிக்காய் அல்ல, மலையையே மறைக்கும் மூடத்தனம்!

கேள்வி : போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து மும்பை சி.பி.அய். நீதிமன்றம் அமித் ஷாவை விடுவித்திருப்பது பற்றி? அமித் ஷா மீது காழ்ப்புணர்ச்சியோடு தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது என தமிழகத்தின் வீராதி வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பற்றி? – மா.கன்னியப்பன், திருமுக்கூடல்

பதில் : நீதி படும் பாடு மக்கள் அறிந்த ஒன்றுதானே!

கேள்வி : மோடி அரசால் மத்தியத் திட்டக்குழு கலைக்கப்பட்டு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது எந்த நோக்கத்தின் அடிப்படையில்?
– வா.இராவணன், சென்னை

பதில் : எல்லாம் தனது (ஆர்.எஸ்.எஸ்.) ஆட்கள், கருத்தாளர்களைக் கொண்டு, தன்னிச்சையாகத் தலையாட்டும் தம்பிரான்களைக் கொண்டு டிக் மார்க் போடவே இந்த ஏற்பாடு!

கேள்வி : மனிதர்கள் இறந்த பிறகுதான் அவர்களுக்குச் சொர்க்கம் _ நரகம் நிர்ணயிக்கப்படுகிறது என மதவாதிகள் கூறிவரும்பொழுது திருவரங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் சொர்க்கவாசல் திறந்துவிடுவது எந்த அடிப்படையில்?
– வே.கனியமுது, திருவாரூர்

பதில் : பக்தர்கள், ஜீயர்களைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது! என்றாலும் பதில் அளிக்கிறேன். வசூல் _ வருமான அடிப்படையில்!

கேள்வி : நடந்து முடிந்த காஷ்மிர் தேர்தலில் மிகத் தீவிரம் பேசிய முஸ்லீம் அரசியல் கட்சிகள், தேர்தல் முடிந்த பின்னர் பதவிவெறி பிடித்து மதவெறி அரசியலோடு கை கோர்த்து கொஞ்சமும் வெட்கமின்றி கொள்கைகளை மாற்றிக் கொள்கிறார்களே?
– க.முல்லைவேந்தன், கிருஷ்ணகிரி

பதில் : பசி வந்தால் பத்தும் பறந்துபோம்! பதவிப் பசி வந்தால் எல்லாம் பறந்து போய்விடும்! அதற்கு எடுத்துக்காட்டு!

கேள்வி : பி.கே. படத்தின் மகத்தான வெற்றி இந்துமத வெறியர்களிடையே ஆத்திரத்தையும் மதச்சார்பற்ற சக்திகளிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனக் கருதலாமா?
– த.க.அன்புமொழி, தர்மபுரி

பதில் : அதிலென்ன சந்தேகம்! தோற்றோடிவிட்டனர்!

கேள்வி : திருவையாறு இசை விழாவை அகில இந்திய அளவில் ஒலிபரப்பும் அளவிற்கு மிகவும் சிறப்புமிக்க நிகழ்ச்சியாகவோ பெரும்பகுதி மக்களைக் கவரும் சம்பவமாகவோ கருத இயலுமா?
– கி.கண்ணம்மா, வியாசர்பாடி

பதில் : பார்ப்பனர் கையில்தானே இன்று சகல கருவிகளும் சிக்கியுள்ளன! அதன் விளைவே இப்படிப்பட்ட திருக்கூத்துகள்.

கேள்வி : விஞ்ஞானிகள் மட்டும் கூடி ஆய்வுகளை நடத்தும் அரங்கங்களில் நம்பிக்கையின் பெயரால் புனையப்படும் கட்டுக்கதைகளை விவாதிக்கும் போக்கு சரியா? – ம.நெடுஞ்செழியன், மதுரை

பதில் : அதை நம் போன்ற சமூகப் போராளிகளும், ஆர்வலர்களும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

கேள்வி : பதுங்கிப் பதுங்கிப் பேசிய கடந்தகால ஆர்.எஸ்.எஸ். கும்பல், தற்பொழுது நெஞ்சை நிமிர்த்தி அரசு அதிகாரத்துடன் நாங்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் எனக் கூறி வாலாட்ட ஆரம்பித்துள்ளார்களே? – தி.கவுதமன், மன்னார்குடி

பதில் : ஆம். இதைத்தான் 8 மாதங்களுக்கு முன் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினோமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *