ராஜபக்சேவை கூண்டிலேற்று

மே 16-31

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கையின் அதிபர் ராஜபக்சேவை அய்.நா.மன்றம் போர்க் குற்றவாளி என அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அவரைச் சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி தண்டனை வழங்க வலியுறுத்தி திராவிடர் கழகம் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.  இதனைத் தொடர்ந்து ஈழத்தமிழர் படுகொலை பற்றிய அய்.நா. குழுவின் அறிக்கையை மத்திய அரசின் அமைப்பு என்ற தலைப்பில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் திராவிடர் கழகப் பொதுகூட்டங்கள் நடைபெற்றன.  அதில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் சில பகுதிகள் இங்கே:

ஈழத்திலே தமிழர்களுடைய இனப்படு கொலையை ராஜபக்சே மிகக் கொடூரமாக அநீதியின் உச்சத்திற்கே சென்று நடத்தியிருக்கிறார். போர் நடைபெற்றிருக்கிறது. போர்க் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று அதற்கு ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளே உண்டு. அய்.நா. அமைப்பு இலங்கையிலே நடைபெற்ற போர்க் கொடுமைக்குக் காரணமான சிங்கள ராஜபக்சே போர்க் குற்றவாளி என்று அதன் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கையிலே இப்படி ஒரு படுகொலை நடந்ததற்காக  இந்தியாதான் முதலில் இலங்கையை – ராஜபக்சேவைக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், இந்தியா இதைச் செய்யவில்லை. இந்தியாவிற்கு ஏற்பட்ட களங்கத்தை_ அவமானத்தைத் துடைத்து எறிந்திருக்க வேண்டும். வரலாற்றிலே இந்திய அரசின் போக்கை என்ன நினைப்பார்கள்?

இதுவரை ஹிட்லர்கூட இந்த அளவுக்குக் கொடுமையாக நடந்து கொண்டதில்லை. அதைவிட சிங்கள இனவெறியன் ராஜபக்சே நடந்து கொண்டார். அய்.நா. மன்றம் இலங்கை அரசின் போர்க் கொடுமையை ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை 214 பக்கங்களில் அறிக்கையாக உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டிருக்கிறது.

இதைப்பற்றித் தெரிந்து கொண்டாவது மத்திய அரசுக்கு ரோஷம் வர வேண்டாமா? இந்திய அரசுக்கு உணர்ச்சி வர வேண்டாமா? தமிழர்களுடைய உணர்வு நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

இலங்கை அரசு வன்னிப்பகுதியில் அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை கனரக ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது.

சொந்த நாட்டு மக்கள்மீது – சொந்த நாட்டுக் குடிமக்கள் மீதே – அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வான்வெளித் தாக்குதல் மூலம் குண்டுமழை பொழிந்து தாக்கி அழித்தது.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியர்கள் நூறு பேரை டையர் என்ற ஆங்கிலேயன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைத்து சுட்டான் என்பதையே இந்தியா பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் போர் அற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில்  மூன்று லட்சத்து முப்பதாயிரம் மக்கள் வான்வெளித் தாக்குதலுக்கு ஆளானார்களே, சிங்கள ராஜபக்சேவின் இந்த அட்டூழியம், இனப்படுகொலை இந்தியாவுக்குத் தெரியாதா?
அது மட்டுமல்ல அங்குள்ள உணவு மய்யங்களை ராஜபக்சே அரசு – இராணுவம் அழித்தது.

உலகத்திலே எங்கு போர் நடந்தாலும் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த செஞ்சிலுவைச் சங்கத்தினர்தான் போரில் காயம் பட்டவர்களுக்கு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வார்கள்.

உலகமே மதிக்கக் கூடிய செஞ்சிலுவைச் சங்கத்தையே இலங்கையிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டவர்தான் கொலைகாரன் ராஜபக்சே. போரில் சிக்கிய தமிழர்களைக் கப்பலில் வைத்து நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வந்தனர் செஞ்சிலுவைச் சங்கத்தினர்.

கடலில் – கப்பலில் இருந்த நோயாளிகளோடு செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீதும் குண்டுமழை பொழிந்து அழித்தது. பூண்டோடு அழிக்கப்பட்டனர் தமிழர்கள்.
வன்னி பகுதியிலே மருத்துவமனை இருக்கின்ற பகுதிகளை சிங்கள இராணுவம் குறி வைத்துத் தாக்கி அழித்தது.

உலகப் போர் நடைபெற்றபொழுதுகூட ஜப்பான் இராணுவம் எந்த மருத்துவமனையையும் போரின் போது அழிக்கவில்லை. ஹிட்லர்கூட போர் தொடுத்த எந்த நாட்டில் உள்ள மருத்துவ மனையையும் அழித்ததில்லை.

சிங்கள இராணுவத்தினர் சிங்கள அரசு –  ராஜபக்சே அரசு எப்படி கொடூரமாக நடந்து கொண்டது என்பதற்கு உதாரணம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவு இல்லாமல், மருந்து இல்லாமல், குடிநீர் இல்லாமல் அனைத்து வழித்தடங்களையும் அழித்தது. பொதுமக்கள் எதுவும் கிடைக்காமல் கதி அற்று, தானே சாகும் அளவுக்கு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது.

தமிழர்கள் செய்த குற்றமென்ன? அவன் தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா?

இதை, திராவிடர் கழகம் சொல்லவில்லை. திராவிட இயக்கத் தமிழர் பேரவை சொல்லவில்லை. திராவிடர் இயக்கங்கள் சொல்லவில்லை. இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது. போர்க் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேதான் என்பதை அய்.நா. மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லி யிருக்கிறது.

இலங்கையில் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வளவு மக்கள் தொகை என்று இருக்கிறது. ஆனால், அந்த மக்கள் தொகையில் தமிழர்களைக் காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை.

அந்த அளவுக்குத் தமிழ் மக்கள்மீது இனப்படுகொலையைச் செய்திருக்கிறது சிங்கள இராணுவம். தமிழர்களைப் புதைப்பதற்குக்கூட அங்கு மண் இல்லை.

இந்தச் செய்திகளைச் சொல்லும் பொழுது எங்களுக்கு இரத்தக் கண்ணீர் வடிகிறது. தமிழர்களுக்குக் கட்சிதான் முக்கியமா? மனிதாபிமானம் முக்கியமில்லையா? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கே காரணம் தமிழ்நாடுதான். ஆனால், தமிழினம் அழிக்கப்படுவது பற்றி இந்திய அரசு கவலையில்லாமல் இருந்தது. உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா?.

இலங்கையில் தமிழர்களின் மீதான கொடுமை இன்னும் தொடர்கிறது என்று அய்.நா. அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசு இன்னும் ஏன் மவுனம் சாதிக்கிறது? இனியாவது இதற்குப் பரிகாரம் தேட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழம்தான். எனவே, தமிழ் ஈழத்தைப் பிரகடனப்படுத்த உதவ வேண்டும். ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

மே 18 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்கத் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதில் திராவிடர் கழகம் பங்கேற்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்கிறார். பெரியார் பன்னாட்டு அமைப்பினரும், திராவிடர் கழகத்தினரும் பங்கேற்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *