இராணுவச் சட்டங்கள்
இரோம் சர்மிளா :
விடுதலையும் தொடரும் கைதுகளும்
‘சர்மிளா தற்கொலைக்கு முயலும் குற்றவாளி’, அவரைக் காண இம்பால் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிபதி அனுமதி மறுத்துக் கூறியவை இவை. ஆனால் அதே நீதிமன்றம் ‘சர்மிளா குற்றமற்றவர், அவரது போராட்டம் சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்து. ஜனவரி 22ஆம் தேதி விடுதலை செய்தது.
ஆனால் அடுத்த நாள் இரவே மருத்துவ உதவி தரப்படுகிறது என மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த விடுதலையும் தொடரும் கைதுகளும் சர்மிளாவின்மேல் நிகழ்த்தப்படுவதல்ல, அவர் வைக்கும் கோரிக்கையின்மேல் நிகழ்த்தப்படுபவை.
மணிப்பூரில் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே அந்தக் கோரிக்கை. அதற்காகவே கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.
இந்தச் சட்டத்தை இங்கிலாந்து காலனிய காலத்தில் எதிர்த்த அதே காங்கிரஸ்தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இங்கு நடைமுறைப்படுத்தியது.
இந்திய விடுதலைக்குப் பிறகான அரை நூற்றாண்டு காலம் கடந்தும் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டம், மத்தியில் எந்த அரசாங்கம் மாறினாலும் மாறாத ஒன்று. அந்தச் சட்டம் ஏற்படுத்திய வன்முறையே எனது உண்ணாவிரதத்துக்குக் காரணம் என்கிறார் சர்மிளா.
அப்படி என்ன வன்முறை? நவம்பர் 2, 2002, மாலோம் என்ற பகுதியில் காலைப் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 10 பேர் எவ்வித எச்சரிக்கையுமின்றி அசாம் ரைபில்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதில் ஓர் இளைஞர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வீரதீர விருது பெற்றவர். இந்தச் சட்டத்துக்குக் கொடுக்கப்படும் கேள்விகள் கேட்கமுடியாத உட்சபட்ச அதிகாரத்தை எதிர்த்து அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சர்மிளா தொடர்கிறார்.
ஏன் இந்தச் சட்டம்? 1948இல் இந்தியாவால் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட மணிப்பூரிலும் இன்னும் பிற வடகிழக்குப் பகுதிகளிலும் இந்திய _- காலனித்துவ ஆட்சி (Indian Colonial Rule) என்று நிலவும் அரசியல் சூழலை இன்றளவும் இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை என்பதால் இங்கு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வைத்திருக்க வேண்டிய நிலை இந்திய அரசுக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு, ஆயுத இயக்கங்கள் ஊடுருவலைத் தடுக்கவே இச்சட்டம் என்கிறது.
தற்கொலை குற்றமல்ல
அண்மையில் உச்ச நீதிமன்றம் அய். பி. சி. 309, அதாவது தற்கொலைக்கு முயல்வது குற்றமாகாது என்றது. இப்போது சர்மிளாவுக்குக் கொடுக்கப்பட்ட விடுதலை, அய். பி. சி. 309 விலக்கப்பட்ட அடிப்படையில்தான் என எண்ணப்பட்டது.
தற்கொலைக்கு முயலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சட்ட ஆணையகம், தற்கொலைக்கு முயல்வோரைத் தண்டிப்பது சரியாகாது. அவர்களுக்கு அதிலிருந்து மீண்டும் உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றது.
சட்ட ஆணையகம் கருத்தின் அடிப்படையில், இங்கு சிகிச்சையானது ராணுவ சிறப்பதிகாரச் சட்டக் கொள்கை மீதே தேவையாக உள்ளது.
– மகா.தமிழ்ப் பிரபாகரன்
(கட்டுரையாளர் நியூஸ்7 தொலைக்காட்சியில் தமிழ் செய்தியாளராகப் பணியாற்றுபவர். இரோம் ஷர்மிளா குறித்து அத்தொலைக்காட்சியில் சிறப்புப் பதிவினைச் செய்தவர்.)
Leave a Reply