வாழ்ந்துதான் பார்ப்போமே!

ஜனவரி 16-31

உற்சாக சுற்றுலாத் தொடர்

வாழ்ந்துதான் பார்ப்போமே!

– மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

நேசனல் ஜியோகிராபி என்ற ஒரு அமைப்பு. அதில் வரும் படங்களும் செய்திகளும் கண்களைக் கவர்ந்து மனதை மயக்கி ஒரு ஏக்கத்தை உண்டாக்கிவிடும்.
நேரில் பார்க்கும் நாள் வாராதோ என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை.

அதிலும் பல முக்கிய இடங்களை ஒரு குழுவாக அந்த இடங்களை நன்கு அறிந்த அறிஞர்கள் விளக்கிச் சொல்லிட பார்த்துவரும் வாய்ப்புக் கிடைத்ததும் வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற ஆர்வம் வந்துவிட்டது.

அதிலும் கால்கள் நன்றாக இருக்கும் போதே பார்த்துவிட வேண்டும். மனம் இருந்தும் உடல் ஒத்துழைக்க வேண்டுமே! நடக்கவும், பல இடங்களிலே ஏறி இறங்கவும் தெம்புள்ள போதே பார்த்துவிட வேண்டும். இந்தப் பயணம் ஒழுங்காகத் திட்டமிடப்பட்ட பாடமாகவும் அமைந்து விட்டது.

நேஷனல் ஜியாகிரபிக் என்பது நாம் வாழும் இந்த உலகம், மண்ணுலகம், விண்ணுலகம் பற்றிய தெளிவான ஆராய்ச்சிகள் செய்து அறிந்தும், புரிந்தும் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு இயக்கம். பல அறிவியல் ஆராய்ச்சிகள் செய்து அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அற்புதமான படங்-களுடன் விளக்கி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தாங்கி மாத இதழாக அதே பெயரில் வெளியிடுகின்றார்கள்.

தலைசிறந்த படப்பிடிப்பு விற்பன்னர்கள் ஒரு நல்ல படம் எடுப்பதற்காக நாள்கணக்காக ஏன் மாதக்கணக்காகக் காத்திருந்து காடு மேடுகள் என்று எடுத்துள்ள படங்கள் ஏராளமானவை. அப்படிப்பட்ட படமெடுத்தவர்களில் ஒருவர் பயணத்தில்  வந்து விளக்கிச் சொல்லவும் ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது.

இந்தப் பயணத்தின் ஏற்பாடுகள் ஓராண்டிற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிடும். ஆண்டிற்கு இரண்டே பயணங்கள், எழுபது பேருக்குத்தான் இடம். முன்பணம் கட்டிவிட வேண்டும். பயணிகள் தங்களைப் பற்றிய விவரங்கள், மருத்துவர் அனுமதி, சிறப்புத் தேவைகள் போன்றவற்றை அனுப்ப வேண்டும்.

பயண அனுமதி அட்டை மற்றும் பயணம் செய்யும் நாடுகளுக்கு வேண்டிய அனுமதிப் பதிவு போன்ற ஏற்பாடுகள் ஆரம்பித்துவிடும். சில நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பு ஊசி, மற்ற தடுப்பு ஊசிகள் தேவைப்படும். விவரங்கள் அனுப்பப்படும். அவரவர் அதற்குரிய ஏற்பாடு-களையும் செய்துகொள்ள வேண்டும்.

பயணத்தின் சில சிறப்புகளைப் பார்ப்போம். உலகின் பல சிறந்த இடங்களில் பத்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை லிமா, மாச்சு பிச்சு பெரு நாட்டில், அடுத்து ஈஸ்டர் தீவு, சிலி நாட்டில், மூன்றாவது பசிபிக் பெருங்கடலில் உள்ள சாமொவா, அடுத்து பெரும் பவளப்பாறைகள் உள்ள ஆஸ்திரேலியா-வின் போர்ட் டக்ளசு, அய்ந்தாவது கம்போடியாவில் ஆங்கார் வாட், அடுத்து சீனாவின் செங்டோவும் திபெத்தின் லாசாவும், அங்கிருந்து ஆக்ராவில் தாஜ்மகால், பின்னர் ஆப்பிரிக்காவிலுள்ள டான்செனியாவின் சிராங்கட்டி காப்பகம், அடுத்து ஜோர்டன், கடைசியாக மொராக்கோ.

தலை சுற்றுகின்றதா? பயணம் சிறப்பாகவும் வசதியாகவும் அமைக்கப்-பட்டிருந்ததால் மகிழ்ச்சியாகவே அமைந்தது. 21 நாட்கள் பறந்துவிட்டன, முப்பதாயிரம் மைல்களுடன்! தனி விமானம், வசதியான இருக்கைகள், கனிவான கவனிப்பு. வாழ்ந்துதான் பார்ப்போமே!

உடன் எழும் கேள்வி, எவ்வளவு என்பதுதானே? மூன்று தவணைகளாக முன்பே வாங்கிவிட்டனர், ஆகவே இப்போது அதைப்-பற்றி எண்ணாமல் பயணத்தை அனுபவிப்போம், வாருங்கள்.

உலகச் சுற்றுப்பயணம்

அக்டோபர் 6ஆம் தேதி வாசிங்டன் நகரிலிருந்து ஆரம்பித்தது.
இப்பயணம் எதிர்பாராத விதமாக அமைந்தது. எங்கள் இளைய மகன் மருத்துவர் குமார் வற்புறுத்தலாலும் ஊக்கத்தாலும் இப்பயணம் ஆரம்பித்தது.

இப்பயணத்தின் எல்லா ஏற்பாடுகளையும் என் இணையர் மருத்துவர் சோம. இளங்கோவன் கவனித்துக் கொண்டார். எல்லா நாடுகளின் விசா கிடைக்க  சில மாதங்கள் முன்னரே ஏற்பாடு செய்து வாங்கிவிட்டனர். பயணத்திற்கு இரண்டு வாரங்கள் முன்னர் ஒரு பெரிய பார்சல் வந்தது.

அதிலே ஒவ்வொருவருக்கும் ஓர் எண் கொடுத்த அடையாள அட்டை பெட்டிகளில் தொங்கவிட. சிறப்பாகச் செய்யப்பட்ட தள்ளுவண்டிப் பெட்டி, அதற்குள்ளேயே தனித்தனியாக வைத்துக்கொள்ள பல தடுப்புகள். தோளில் தொங்கும் பள்ளிக்கூடப் பிள்ளைகள்  பை, அதிலும் பல உள்பைகள்.

இடுப்பில் கட்டிக்-கொள்ள ஒரு பை.  ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அய் பேட் கணினி. அதில் வேண்டிய புத்தகங்கள், பாட்டுகள், சினிமா போன்ற-வற்றைத் தரவிறக்கிக் கொள்ள 100 டாலர் பெறுமான இலவசக் கட்டண அட்டை.

பயணம் பற்றிய முழு விவரம் அடங்கிய பைண்டர் புத்தகம் அதில் அனைத்து விவரங்-களும், ஆங்காங்கே தங்கும் விடுதிகளின் முகவரி, தொலைப்பேசி எண் உறவினர்களுக்குத் தெரிவிக்க. பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அனைத்தும் அடங்கிய ஒரு பட்டியல். மகள், மகன்கள், மருமகன், பேத்திகள் அன்புடன் வழியனுப்ப பயணத்தைத் தொடங்கினோம்.

பென்சில்வேனியாவின் ஃகாலந்து நகரிலிருந்து காரில் 3 மணி நேரம் கழித்து வாசிங்டன் வந்து சேர்ந்தோம். அன்று இரவு நேசனல் ஜியாகிரபிக் அறக்கட்டளைக் கட்டிடத்தில் 70 பயணிகளுக்கு வரவேற்புக் கொடுத்தார்கள் . உடன் பயணம் செய்தவர்கள் பல துறை வல்லுநர்களாக இருந்தார்கள்.

பயண அமைப்பாளர் திருமதி சூசன் வரவேற்புரை வழங்கி பயண விவரங்கள் பற்றி சுருக்கமாகச் சொன்னார். பயணத்தில் பல நாடுகளின் அரசியல், கலாச்சாரங்களைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்றப்போகும் பேராசிரியர்கள் அலெக்சாண்டர் மர்பி, சேக் டால்டன்  அவர்களை அறிமுகப்படுத்தினார்.

பிறகு இரவு உணவு வெள்ளைமாளிகை அருகில் கேஆடம்ஸ் விடுதியில் நடைபெற்றது. நேசனல் ஜியாகிரபி அமைப்பின் தலைவரே வந்து பங்கேற்று சிறிது நேரம் பேசி அனைவருடனும் அளவளாவி வழியனுப்பி வைத்தார்.

பிச்சாண்டார் கோவிலிலும், மேலக்கல்-கண்டார் கோட்டையிலும்  பிறந்து வளர்ந்த எங்களுக்கு, பெருஞ்செல்வந்தர்களும், பெரும் பதவி வகிப்பவர்களும் தங்கும் விடுதியின் விருந்தறையில் அமர்ந்து கீழே தெரியும் வெள்ளை மாளிகையைக் கண்டு உணவருந்தியது தந்தை பெரியார், பெருந்-தலைவர் காமராசரின் உழைப்பின் பயன் என்பதை எண்ணிப் பார்த்துப் பெருமைப்-பட்டோம்.

(பயணிப்போம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *