பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா?

ஜனவரி 16-31

– திராவிடப் புரட்சி

பதிப்பக உரிமையாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டவருமான பத்ரி சேஷாத்திரி, “The angst of the Tamil bramin: Live and let live” : (தமிழ்ப் பார்ப்பனரின் சோகம் : வாழு வாழவிடு) என்ற தலைப்பில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் 08.12.2014 அன்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். எழுதியுள்ளார் என்று சொல்லுவதை விட எழுத்தில் புலம்பியுள்ளார்.

இந்தப் புலம்பல்களை பத்ரி சேஷாத்திரி என்ற தனி மனிதரின் புலம்பலாக சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கட்டுரையின் தலைப்பு சொல்லுவதைப்போல இதை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களின் புலம்பல்களாகக் கருதி, அதே கோணத்தில் புலம்பல்களை அணுகி, அது தொடர்பாக ஆராய்ந்து, இந்தப் புலம்பல்களில் நியாயமுள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆண்டவர்களின் வரலாறு மட்டுமே சொல்லித் தரப்படும் சூழலில், ஆண்டவர்கள் வரலாறு என்றால், கடவுள்கள் மற்றும் மன்னர்களின் வரலாறு மட்டுமே சொல்லித் தரப்பட்ட புதிய தலைமுறைக்கு, தங்கள் முன்னோரின் அடிமை வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்கள் மானத்தையும், அறிவையும் ஊட்டியதன் விளைவாக, இன்றைய பார்ப்பனரல்லாத தாத்தாக்களுக்கு ஓரளவிற்கு அடிமைப்பட்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அதே சமயத்தில், பதிப்பகம் நடத்தும் பத்ரி சேஷாத்திரி போன்றோருக்கு அடிமைப்படுத்திய வரலாறு தெரியாமல் இருக்காது என்றாலும், பத்ரி சேஷாத்திரி போன்றோரின் புலம்பல்கள் குறித்து நாம் ஆராய்ந்து விளக்கம் தரும்போது, பார்ப்பனரல்லாத புதிய தலைமுறைக்கும் சில செய்திகள் சென்று சேரும் வாய்ப்பிருக்கிறது.

பார்ப்பனர்களின் சார்பாகப் புலம்பியுள்ள பத்ரி சேஷாத்திரியின் புலம்பல்கள் கீழ்வருமாறு.:

1. தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருந்தாலும், எதார்த்தத்தில் நாடு முழுவதும் பெருமளவில் அதிகாரமில்லாமல் இருக்கிறார்கள். அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலை. 2. சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்குப் பார்ப்பனர்கள் அரசாங்கத்தில் பெருமளவில் இருந்தனர். ஆனால், நீதிக்கட்சியும், திராவிடர் இயக்கங்களும் கொண்டுவந்த இடஒதுக்கீடு முறையால், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு வேலைகள் ஆகியவற்றில் முழுமையாக பார்ப்பனர்கள் விலக்கப்பட்டு விட்டார்கள். ஒரு காலத்தில் கணிசமான அளவில் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களாக இருந்தனர், தற்போது மிகவும் குறைந்துவிட்டனர். தமிழகத்தில் சரியான வாய்ப்பு இல்லாததால் பாம்பே, டில்லி போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றனர். 3. அரசியல் அதிகாரத்தில் இருந்து முழுமையாக பார்ப்பனர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். பார்ப்பனர்கள் அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், எல்லாவற்றிற்கும் பார்ப்பன சதி என்று குற்றம் சாட்டுகின்றன திராவிடக் கட்சிகள். தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு என்பதே அரசியல். மோடி பார்ப்பனியவாதி, ஜெயலலிதா பார்ப்பனியவாதி, மத்திய அரசு சமஸ்கிருதத்தையோ இந்தியையோ வளர்க்க முயன்றால் அதுவும் பார்ப்பனியம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக காங்கிரசோ பி.ஜே.பி.யோ இருந்தால் அதையும் பார்ப்பனியம் என்கிறார்கள்.

4. தமிழ்த் திரைப்படங்கள்கூட பார்ப்பனர்–களைத் தவறாகச் சித்தரிப்பது வழமையான ஒன்று. அண்மையில் வெளியான ஜீவா என்ற திரைப்படத்தின் கருவாக இருப்பது, பார்ப்பனர் அல்லாத கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி பார்ப்பன சதியால் தடுக்கப்படுகிறது என்பதே.

5. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதோருக்குக் கல்வி மறுக்கப்பட்டது, மற்ற சலுகைகள் மறுக்கப்பட்டது என்று சொல்லப்படும் கூற்றினால், இப்போது நடக்கும் எல்லா-வற்றிற்கும் ஒப்புதல் வழங்கியது போல ஆகிவிட்டது. இந்தக் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் தேவையில்லை, எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை என்பதே நிலை.

6.    அரசியலில் ஒதுக்கப்படும், சமூகத்தால் வெறுக்கப்படும் தமிழ்ப் பார்ப்பனர்கள், தமிழக சமூகவெளியில் பாதுகாப்பாக உணர்வதற்கும், தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கும் என்ன செய்வது? இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சமணர்கள் எப்படி தங்கள் நமபிக்கைகளை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, வழக்கங்களை, மொழியைப் பாதுகாக்கிறார்-களோ அதுபோன்ற நிலை தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும் வேண்டும். மொத்தத்தில் தமிழ்நாடு பார்ப்பனர்கள் மீதுள்ள அரசியல் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவைதான் அந்தப் புலம்பல்கள். இது-போன்ற புலம்பல்கள் புதிதல்ல வரலாற்றைத் தேடிப் படிப்பவர்களுக்கு. இஸ்லாமியர்களால் தங்கள் ஆதிக்கம் குறைக்கப்பட்ட போது ஒலித்த பார்ப்பனர்களின் புலம்பல் ஒலி வீர கம்பராய சரிதத்தில் கேட்கிறது. தமிழை சென்னைப் பல்கலைக்கழகத்தில் போதிக்கவேண்டும் என்று தமிழுணர்வாளர்கள் குரல் எழுப்பியபோது,  வி.எஸ். சீனிவாச சாஸ்திரியின் புலம்பல்கள் சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் ஒலித்தது. திராவிடர் இயக்கத்தின் செயல்பாடுகளால் பார்ப்பனரல்லாதோரும் உயரத் தொடங்கிய-போது, ஹிந்துவின் புலம்பல் குரல் ஒலித்தது. திராவிட இயக்கம் வலுவாக ஆட்சியில் அமர்ந்த பிறகு, சோவின் புலம்பல் குரல் ஒலித்தது வெறுக்கத்தக்கதா பிராமணியம் என்று. தமிழகப் பிராமணர்கள் யூதர்களைப் போல அடக்கு-முறைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள், அவர்களால் தமிழகத்தில் இயல்பாக வசிக்க முடியவில்லை என்று அசோகமித்திரனின் புலம்பல் ஒலி ஒலித்தது. ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின்படி இயங்கும் மத்திய அரசின் செயல்பாடுகளைப் பார்த்து பார்ப்பனியம் என்று தமிழக மக்கள் பேசத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பத்ரி சேஷாத்திரியின் புலம்பல் ஒலி வந்திருக்கிறது.

புலம்பல்களைப் படிக்கும் பார்ப்பனர்களுக்கு தங்கள் மனசாட்சியின் புலம்பல்களாகத் தோன்றும். வரலாற்றை அறியாத பார்ப்பனரல்லாதோருக்கோ அடக் கொடுமையே! என்ன பரிதாபம்? என்று தோன்றும். ஆனால் இந்தப் புலம்பல்களில் நியாயம் இருக்கிறதா? உண்மை இருக்கிறதா? என்றால் அதுதான் கொஞ்சமும் இல்லை.
உண்மைக்குப் புறம்பாகவா புலம்பியிருப்பார் ஊடகத் துறையில் இருக்கும் சமூக ஆர்வலரான பத்ரி சேஷாத்திரி? என்று பலருக்குள்ளும் ஒரு கேள்வி எழும். அதற்கான விடைகளைத்தான் நாம் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.

புலம்பலின் தொடக்கத்தில் உள்ள கர்வத்தைக் கவனியுங்கள். தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருக்கிறார்களாம். தாங்கள் உச்சியில் இருக்கிறோம் என்ற எண்ணம்தானே எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்பதை இன்றும் சிந்திக்க மறுக்கும் மனநிலை வெளிப்படுகிறது இதில். எதார்த்தத்தில் நாடு முழுவதும் பெருமளவில் பார்ப்பனர்கள் அதிகாரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது உண்மையா? அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலை என்பது உண்மையா?

கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தற்போதைய பி.ஜே.பி ஆட்சியிலும் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்களில் எத்தனை பேர் பார்ப்பனர்கள்? மூன்றரை சதவிகிதம் இருக்கக்கூடிய பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே சதவிகித அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் பெருமளவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். இந்தியாவின் ஜனாதிபதியே ஒரு பார்ப்பனர்-தானே. அமைச்சரவை மட்டுமா? அதிகார வர்க்கத்தில் உள்ள அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ் உட்பட மத்திய அரசுப் பணிகளில் பெருமளவில் அதிகாரம் செலுத்துவது பார்ப்பனர்கள்தானே. கடந்த தி.மு.க. ஆட்சியில், மாநில அரசின் செயலாளர்களாக இருந்தவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்-தானே.

இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலகத்தின் அதிகார மய்யமாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தானே. அ.தி.மு.க. என்ற ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே தன்னைப் பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக்கொண்ட ஒரு பார்ப்பனர்தானே. உண்மை இவ்வாறு இருக்க, அதிகாரம் இல்லை என்று போலியாகப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது? இட ஒதுக்கீடு முறையால் பார்ப்பனர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது போன்ற இந்தப் புலம்பல் உண்மையா? இதை நாம் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

(தொடரும்)

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -3

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *