இந்த சாமியாருக தொல்லை தாங்க முடியலப்பா!

ஜனவரி 16-31

இவ்விடம் அரசியல் பேசலாம்

இந்த சாமியாருக தொல்லை தாங்க முடியலப்பா!

சந்தானத்தின் சலூனுக்குள் தோழர் மகேந்திரன் நுழைந்ததுமே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தோழர் என்று வரவேற்றார்.

உங்களுக்கும் வாழ்த்துகள் தோழர்!

இந்தப் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குப் போகலையா தோழர்? என சந்தானம் கேட்க,

எங்க ஊருக்குப் போக? பொங்கல் விடுமுறையைக் கணக்குப் பண்ணி பத்தே நிமிடத்துல அத்தனை ரயில் டிக்கெட்டுகளையும் பதிவு பண்ணிடுறாங்க. குழந்தை குட்டியோட போற நான், பேருந்தை நம்பினால் சீரழிய வேண்டியதுதான்! அதனால் தமிழ்ப் புத்தாண்டு எப்பவுமே சென்னைலதான் தோழர் எனக்கு!

அதுசரி, எத்தனை ரயில்வே பட்ஜெட் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரயில் எண்ணிக்கை குறையுமே தவிர கூடிடாது! வந்தாரை வாழவைக்கும் சென்னை இப்பல்லாம் வந்தவங்களை வழியனுப்ப முடியாமல் திணறிக்கிட்டிருக்கு!
ஆமா தோழர். என்னைக்கு இதுக்கெல்லாம் விடிவுகாலம் வரப்போகுதோ!

இது மட்டும் பணிவு முதல்வரோட காதுல விழுந்துச்சுன்னா அம்மா எக்ஸ்பிரஸ்னு பத்து இருபது ரயில் வண்டியைப் புதுசா விட்டு அசத்திட மாட்டாங்க! அதுமட்டுமா, அந்த ரயில் முழுக்க மக்கள் முதல்வரோட விளம்பரமா ஒட்டி மிரட்டிட மாட்டாங்க!

கண்டிப்பா பண்ணுவாங்க! தண்டவாள இரும்புலகூட கட்சி விளம்பரம் பண்ணிடு-வாங்களே!
விளம்பரம்னதும்தான் ஒரு விசயம் நினைவுக்கு வருது தோழர். இந்த ஆன்மீக வியாபாரிகள் பண்ற விளம்பரங்களைப் பார்த்திங்களா?
இந்து ஆன்மீக கும்பலைச் சொல்றிங்களா? இல்லை கிறித்துவ ஆன்மீக வியாபாரக் கும்பலைச் சொல்றிங்களா?

ரெண்டு கும்பலையும்தான் சொல்றேன்! கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு சொல்றாங்க, ஆனால் உண்மையில் எல்லா மின்விளக்குத் தூணிலும் இந்த கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகள்தான் இருக்காங்க பார்த்திங்களா தோழர்?

ஆமா ஆமா. இப்ப அமிர்தானந்தமயி வேற சென்னைக்கு வரப்போறதா பேனர் வச்சிருக்காங்க பார்த்திங்களா?

யாரு? அந்த முத்தச் சாமியாரிணியா?

அதுவேதான் தோழர். இளைஞர்களின் முத்தப் போராட்டத்தைத் தப்புன்னும் கலாச்சாரக் கேடுன்னும் விமர்சிக்கிற அதே பெருசுங்கதான் அமிர்தானந்தமயியைக் கட்டிப்பிடிச்சு முத்தம் வாங்கறதுக்காக க்யூவுல பயபக்தியா நிக்கிறாங்க! ரத்தத்துல வகை இருக்குற மாதிரி முத்தத்திலும் வகை இருக்கும் போல! ஆன்மீக முத்தங்களை மட்டும் ஏத்துக்கறாங்க!

என சொல்லவும் சிரிப்பு அள்ளியது!. அதுசரி, இந்த பிடதி மேட்டர் பார்த்திங்களா? ஆன்மீகம்ங்கற பெயரில் நித்தியானந்தா கூத்துகளையும் கொலைகளையும் மக்கள் கண்டும் காணாத மாதிரில்ல இருக்காங்க! என்றார் மகேந்திரன்.

கேள்விப்பட்டேன் தோழர். இப்ப நம்ம மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதாங்கற பொண்ணு நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கு. இறந்து அடக்கம் பண்ணின பிறகு, இப்போ திரும்ப அந்த உடலை வெளிய எடுத்து போஸ்ட்மார்ட்டம் பண்றாங்க.

வழக்கம்போல இந்த கேசையும் நித்தியானந்தா குரூப் ஒன்னுமில்லாமல் பண்ணிடும். என்ன, சுத்தியிருக்குறவங்க கொஞ்சம் காசு பார்த்திடுவாங்க!

பாவம் அப்பாவி மக்கள் இன்னமும் இவனுங்க வலையில் விழுந்து, பெத்த பொண்ணையே இவனுங்களோட ஆசிரமத்துல சேர்க்கறது கொடுமைல்ல… இப்பதான் அரவிந்தர் ஆசிரமத்துலயும் தற்கொலை சம்பவம் நடந்துச்சு…

உண்மையில இந்த மாதிரித் திருடனுங்களை அடையாளம் காட்டித் துரத்த வேண்டியதே சாமி கும்பிடுறவங்களோட கடமைதான். ஆனால் அவங்க கண்டுங்காணாம இருக்கறதால-தான் இந்தத் திருடனுங்களை நாம அடையாளம் காட்ட வேண்டியிருக்கு…

சாமி கும்பிடாதவங்களுக்கு இதுல என்ன அக்கறைன்னு பாயிண்டா கேள்வி மட்டும் கேட்டுடுவானுங்க வீணாப் போனவனுங்க!

இதுல இன்னொன்னைக் கவனிச்சிங்களா? முன்னல்லாம் மாரியாத்தா, காளியாத்தா, கருப்பண்ணசாமி, முருகன்னு மட்டும் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப இந்த கார்ப்பரேட் சாமியாருங்க வந்தபிறகு ஜக்கம்மாவை விட்டுட்டு ஜக்கியைக் கும்பிடுறாங்க! சிவனை மறந்துட்டு சாய்பாபா காலைக் கழுவி ஊத்திக்கிட்டிருக்காங்க!

பின்ன முருகனுக்கு அறுபடை வீட்டை-விட்டால் கஸ்டமர் கேர் சென்டர் வேற எங்க இருக்கு? அதே நேரத்துல மேல்மருவத்தூர் பங்காருக்கு தெருவுக்குத் தெரு வழிபாட்டு மன்றம்ங்கற பெயர்ல வழிபாட்டு மன்றம் தொடங்கிடுறாங்க! பிறகெப்படி சிவன் அன்ட் பேமிலி வளர்றது?!

சரியாச் சொன்னிங்க, இந்த ஜக்கி கோயமுத்தூர் மலையடிவாரத்துல அம்புட்டு இயற்கைச் சீரழிவைப் பண்ணிப்புட்டு  இன்னொரு பக்கம் லட்சக்கணக்குல மரக்கன்று நடுறேன்னு சமூகசேவகனா சீன் போடுறாரு!

இனி சிவனே நேர்ல வந்தாலும் மரக்கன்று நடப்போறேன், அனாதை இல்லத்துக்கு உதவப்போறேன்னு சீன் போட்டால்தான் நம்புவாங்க! சாருநிவேதிதாவுக்கு வாசகர் வட்டம் இருக்கிற மாதிரி சிவனுக்கும் முருகனுக்கும் பக்தர் வட்டம் வச்சுக்கிட்டால்தான் முடியும்! மக்களும் எம்புட்டு நாளைக்குத்தான் நேரில் காட்சி தராத கடவுளையே நம்பிக்கிட்டிருப்பாங்க!

நீங்க சிவன், சாருநிவேதிதான்னு சொன்னதும்தான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. எழுத்தாளர் பெருமாள்முருகனோட மாதொரு பாகன் நாவலை திருச்செங்கோட்டிலிருந்த கலாச்சாரக் காவலர்கள் குரூப் ஒன்னு தீவைச்சு எரிச்சு கொலை மிரட்டலெல்லாம் விட்டிருக்கறதப் பார்த்திங்களா?

ஆமா ஆமா, அந்த நாவல் வந்து நாலு வருசமாச்சு. பயபுள்ளைங்க இப்பத்தான் முன்னுரையே வாசிச்சிருப்பானுங்க போல!

பெருமாள்முருகனாவது சமகாலத்து எழுத்தாளர், போன் நம்பர்லாம் இருக்கறதால கொலைமிரட்டல் விட்டிருக்காங்க. ஆனால் ராமாயணம், மகாபாரதம் எழுதுன ஆசிரியர்களெல்லாம் உயிரோடவும் இல்லை! அவங்க வாரிசுங்களும்கூட இல்லை! பின்ன எப்படிக் கொலைமிரட்டல் விடுவாங்க?

தசரதனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள் இருந்தது எம்புட்டுப் பெரிய கலாச்சாரச் சீர்கேடு? பாஞ்சாலிக்கு அய்ந்து புருஷன்கள் என்பதும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? அதையெல்லாம் படிச்சா எதிர்க்கட்சிக்காரன் நம்ம இந்து மதத்தைப்பத்தி என்ன நினைப்பான்?

இதை எதுக்குத் தோழர் இம்புட்டுச் சத்தமாச் சொல்றீங்க?

இதெல்லாம் இங்கிருக்கிற கூஜாக்களுக்குக் கேட்கட்டும்னுதான் சொல்றேன்!

தமிழ்நாட்டுல கூஜாக்கள் இருக்குற மாதிரி பி.ஜே.பி.க்கு நாடு முழுக்க தத்துப்பித்து ஆட்கள் இருந்துக்கிட்டுத்தான் இருக்காங்க தோழர்

ஆமா ஆமா. இப்பக்கூட ஒரு பி.ஜே.பி. தறுதலை, இந்துக்கள் எல்லோரும் நாலு குழந்தை பெத்துக்கணும்னு சொல்லியிருக்கறதப் பார்த்திங்களா?

அவங்களுக்கென்ன, பாதிப்பேரு கல்யாணம் பண்ணாதவங்களும், கல்யாணம் பண்ணியும் மனைவியைத் தள்ளிவைச்சுக் குடும்பம் நடத்தறவங்களும்தான அங்க பெரும்பாலும் தலைவர்களா இருக்காங்க! குடும்பம் நடத்தறதோட கஷ்ட நஷ்டம் அவங்களுக்கு என்ன தெரியும்?

நாலு குழந்தை பெத்துக்கிட்டா இந்துக்களோட எண்ணிக்கை அதிகமாயிடும்னு கணக்குப் போடுற மாதிரி ஏதாவது பொருளாதார மேதை ஏழைகள் அத்தனை பேரும் குழந்தைகளே பெத்துக்கக்கூடாது, குறிப்பா வறுமைக்கோட்டுக்குக் கீழ இருக்கறவங்க இந்தத் தலைமுறையோட வாழ்றதை நிறுத்திக்கிட்டா அடுத்த தலைமுறையில இந்தியா பணக்கார நாடாயிடும்னு சொன்னாலும் சொல்லுவாங்க!

என்ன தோழர் நீங்களே அவங்களுக்கு பாயிண்டு எடுத்துக் கொடுப்பிங்க போல!
இதுல இன்னொரு கொடுமையைக் கேட்டிங்களா தோழர், என்னவோ மக்கள் தொகை வளர்ச்சியைச் சொல்ற மாதிரியே ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் தமிழ்நாட்டில் ஒருத்தர் பி.ஜே.பி.யில சேர்ந்துக்கிட்டிருக்கறதா தமிழிசை மேடம் அறிக்கை விட்டிருக்காங்க!

ஆமா ஆமா! அவனவன் ஆதார் அட்டையே இன்னும் கிடைக்கலைன்னு புலம்பிக்-கிட்டிருக்காங்க… இவங்க உதார் விடுறதைப்-பார்த்தால் ஆதார் அட்டைக்குப் பதிலா அம்புட்டுப் பேருக்கும் பி.ஜே.பி. உறுப்பினர் அட்டை கொடுத்தாலும் கொடுப்பாங்க போல! நாமதான் உஷாரா இருக்கணும்!

இவங்க உதார் விடுறதை பி.ஜே.பி. தலைவர்கள் வேணும்னா ரசிக்கலாம், ஆனால் உண்மை என்னன்னா இப்ப அவங்ககூட இருக்குற ஒவ்வொரு கட்சியா கூட்டணியிலிருந்து வெளியேறிக்கிட்டிருக்கு!

முதலில் ம.தி.மு.க., அடுத்து பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் கிட்டத்தட்ட வெளியேறிட்ட மாதிரிதான்! இதுல சுப்பிரமணியசாமியும் ராஜாவும் பேசறதையெல்லாம் கூட்டணிக் கட்சிகள் பொறுத்துப்போகணும், விமர்சிக்கக்-கூடாதுன்னு அட்வைஸ் வேற!
கூட்டுக்குடித்தனம் இம்புட்டுச் சீக்கிரம் கசந்துடுச்சே!

பின்ன பண்றதெல்லாம் தமிழ்நாட்டுக்கு எதிரானதாகவே இருந்தால் தமிழகக் கட்சிகள் அதையெல்லாம் ரசிச்சுக்கிட்டா இருக்க முடியும் தோழர்?

எந்த விளம்பரங்களை, டெக்னாலஜியை வச்சு இவங்க ஆட்சிக்கு வந்தாங்களோ, இப்ப அதே டெக்னாலஜி இவங்களுக்கு எதிரா திரும்பத் தொடங்கிடுச்சு பார்த்திங்களா?

ஆமா தோழர். இப்பல்லாம் வாட்ஸ் அப், பேஸ்புக்னு எல்லாத்திலும் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு, கெயில் திட்டத்துக்கு எதிர்ப்புன்னு தமிழ்நாட்டைக் குப்பைக்காடா மாத்துற திட்டங்களுக்கு எதிராகத்தான்  நிறைய விழிப்புணர்வு பெருகிக்கிட்டு இருக்குது!

அப்போ அந்த க்ளீன் இந்தியா திட்டம்?

இனி கூடிய விரைவில் கிளைமாக்ஸ்தான்! மத்திய அரசையே கூட்டிப் பெருக்கித் தள்றதுதான் நடக்கப்போகுது!

சீக்கிரம் நடக்கட்டும்… கெட்டுப்போன கங்கையைவிட முக்கியம் இந்த மாதிரி மதவெறியர்களைச் சுத்தம் பண்றதுதான்!

ரொம்பச் சரியாச் சொன்னிங்க தோழர்! விரைவில் அதுதான் நடக்கப்போகுது! இந்தப் புத்தாண்டு நம்ம எல்லாருக்கும் நல்ல ஆண்டா விடியட்டும்!

கண்டிப்பா தோழர்! என்றபடி நிறைவோடு விடைபெற்றார் தோழர் மகேந்திரன்.

– கல்வெட்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *