இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தும் கூட, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்களிடமும் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மகிந்த ராஜபக்சே, அந்நிலை மேலும் மோசமாவதற்குள் மூன்றாவது முறையாக அதிபராகிவிடலாம் என்று முடிவு செய்தார். இரண்டுமுறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற அரசியல் சட்ட அமைப்பையும், தன் போக்குக்கு வளைத்து, தன்னால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மொகான் பிரீசை வைத்து மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதியும் பெற்றுவிட்டார்.
அவருடைய ஆஸ்தான ஜோதிடரான சுமனதாச அபயகுணவர்த்தனாவும் அமோகமாக வெற்றிபெற்று விடுவீர்கள் என உறுதி வழங்க, திருப்பதி வெங்கியையும் தரிசித்துவிட்டு, தேர்தல் களத்திற்குத் தயாரானார் இராஜபக்சே. ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பத்தின் ஆட்டம் காரணமாக வெறுப்பிலிருந்த மக்கள், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, மகிந்த ராஜபக்சேவின் முன்னாள் அமைச்சரான மைத்ரி பால சிறீசேனாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிபராக்கி யிருக்கின்றனர். இதில் தமிழர்களின் வாக்குகள் தான் மைத்ரி பாலவுக்கு வெற்றியை உறுதி செய்திருக் கின்றன. தமிழர்கள் விசயத்தில் மைத்ரி பால தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட மாட்டார் என்றாலும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு மக்கள் வழங்கியுள்ள தண்டனை இது. ஆனால், இது முடிவு அல்ல.
அயல்நாடுகளுக்குத் தப்பிச் செல்கிற முகாந்திரம் ராஜபக்சே குடும்பத்திடம் தெரிகிறது. அதைத் தடுத்து, உரிய பன்னாட்டு விசாரணக்கு உட்படுத்தி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தருவது அவசியமாகும். இதை மைத்ரி பால நடத்துவார் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும், உரிய அழுத்தம் தந்து அய்.நா மற்றும் உலக நாடுகள் பன்னாட்டு விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருந்த சு.சாமி, ஊடகங்கள் உள்ளிட்ட கைக்கூலிகள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்வார்கள். என்ன, தனது ஆதரவு பெற்றவரும், தன்னைப் போலவே இனப்படுகொலை, உருட்டல்-மிரட்டல், அதிகாரப் போக்கு, அலங்கார பாவனை என்று அலைந்த ராஜபக்சே தோற்றதில் மோடிக்குத் தான் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கும்!