கேள்வி : பி.ஜே.பி.யின் மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக (தான்தோன்றித்தனமாக) கொள்கை முடிவுகளை அறிவித்து வருவது மோடி உட்பட பி.ஜே.பி.யின் உயர்மட்டக் குழுவுக்குத் தெரியாமல் நடப்பதாகக் கருதுகிறீர்களா?
-நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்
பதில் : மோடி எல்லா அதிகாரங்களையும் தன்னுள்ளும் தனது நண்பர் ஷா (பா.ஜ.தலைவர்) இருவரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அதை மீறி, ஆர்.எஸ்.எஸ்.-காரர்களின் சித்துவேலைகள் மோடிக்கேகூட தலைவலியாய் நடக்கிறதோ என்னவோ! யாம் அறியோம்!.
கேள்வி : மதவெறிக்கு மனிதாபிமானம் இருப்பதில்லையா?
– சு.எழில்மலை, வேலூர்
பதில் : மனிதாபிமானமும் மதவெறியும் பிறவி எதிரிகளாயிற்றே!
கேள்வி : நியாய விலைக் கடைகளில் முக்கியப் பொருட்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஏழைமக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே?
– க.பாரதிதாசன், காஞ்சி
பதில் : எப்படி நடந்தால் என்ன? தேர்தலின்போது ஓட்டுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கொடுத்தால் _ ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை, முன்னுதாரணங்கள் உள்ளதே!
கேள்வி : பச்சிளங் குழந்தைகளைக் கொல்லும் அளவுக்கு மதவெறி உலகில் தலைவிரித்து ஆடுகிறதே?
– பெ.அன்புமொழி, தேனி
பதில் : தாய் பிடிக்க தந்தை அறுத்து பிள்ளைக்கறி சமைத்துப் போட்ட சிறுத்-தொண்ட நாயனார் கதை தொடங்கி, சிறு குழந்தைகளைக் கொன்ற ராஜபக்ஷே சிங்கள மதவெறி வரை, சம்பவங்கள் அதற்கு முன்னுதாரணங்கள்தானே!
மதம் பிடித்தால் குழந்தையா? பெரியவரா? என்பது எப்படி அதற்குத் தெரியும்? வெறியே மோசம்; அதிலும் மதவெறி அதனிலும் படுமோசம்! -_ புரிகிறதா?
கேள்வி : மத்திய மாநில அரசு விருதுகள் உண்மையாக தகுதி அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது என கருதுகிறீர்களா? விருதுகள் வழங்குவது பற்றிய தங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
– ச.வேள்பாரி, தஞ்சை
பதில் : அரசியல் பார்வையே இதற்கு உண்மையான அடிப்படை. ஒரு பயனும் அதனால் கிடையாது. எப்போதாவது விதிவிலக்கும் இருக்கலாம். அவ்வளவே!
கேள்வி : மத்திய அரசால் மாநிலங்களவையில் உரிய காலத்தில் நிறைவேற்ற இயலவில்லை என்பதற்காக முக்கியச் சட்டங்களை அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயக நெறிமுறைகளை அலட்சியப்-படுத்துவதாகாதா?
– க.திராவிடமுரசு, பொற்பந்தல்
பதில் : நம் தமிழ்நாட்டில் அம்மா ஆண்டபோது 110; இப்போது மோடி ராஜ்யத்தில் அவசரச் சட்டங்கள். இரண்டு அணுகுமுறைகளும் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் நடைமுறைகள் _ அதிகாரத் தவறுகள்.
கேள்வி : நேர்மையான வாழ்க்கையும் கடுமையான முயற்சியும் இன்றி வெறுமனே யாகத்தின் மூலமும் பிரார்த்தனை வழிகளிலும் பிரச்சினைகளைத் தீர்க்க இயலும் என பெரும்பகுதி மக்கள் நம்பக் காரணம் என்ன?
– தெ.அன்பரசன், திருச்சி
பதில் : பக்திபோதை ஒருபுறம். மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பேராசை!
கேள்வி : இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்துள்ள சூழலில் அந்நாட்டின் முக்கியக் கொள்கைகளில் குறிப்பாக தமிழர் மற்றும் மீனவர் பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் வாய்ப்பு உள்ளதா? – மு.கனிமொழி, மதுரை
பதில் : உறுதியாக இப்போது சொல்ல முடியாது! இராஜபக்ஷே சென்ற அளவு அவ்வளவு மோசமாக இருக்காது என்று நம்புவோமாக!
கேள்வி : மத்திய அரசு ரயில்வே துறையை தனியார்மயமாக்காது என்ற மோடியின் வாக்குறுதி நம்பத்தகுந்ததா? – வ.கபிலன், விராலிமலை
பதில் : பொறுத்திருந்து பார்ப்போம்!
கேள்வி : நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் கடந்த காங்கிரசு ஆட்சிக்கும் தற்போதைய பி.ஜே.பி.க்கும் கொள்கை ரீதியான முரண் உள்ளதா? – தா.மலர்விழி, கடலூர்
பதில் : பழைய கள்; புது மொந்தை என்ற பழமொழிக்கேற்ற அணுகுமுறைதான்!
கேள்வி : வேதம் ஓதி, வேள்வி நடத்த வேண்டிய பார்ப்பனர் மாநாடு நடத்துவதும், நாட்டை ஆள்வதும் ஆகம விதிகளுக்கு முரண்பட்டதுதானே? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : இப்படிக் கேட்டதால்தான் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார். நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்!
கேள்வி : துரோகம் செய்வதற்கும் வஞ்சகமாக வாழ்வதற்கும் அடுத்துக் கெடுப்பதற்கும் வழிகாட்டும் கீதை இந்தியாவின் தேசிய நூலாக இருக்கத் தகுதி உண்டா? – இல.சங்கத்தமிழன், மயிலை
பதில் : உங்கள் கேள்வியிலேயே பதில் அடங்கிவிட்டதே!
கேள்வி : இன்சூரன்ஸ் மற்றும் நிலக்கரி ஒதுக்கீடுகள் பற்றிய மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவர் அரசியல் சட்டப்படி திருப்பி அனுப்புதல் சாத்தியமா?
– பி. குணசீலன், வியாசர்பாடி
பதில் : சாத்தியம்தான் சட்டப்படி. நடைமுறையில் பெரும்பாலான குடியரசுத் தலைவர்கள் மோதலுக்குத் தயராவதில்லை. அதனால் அவர்கள் கையொப்பமிட்டுவிட்டு, ஆளுபவர்களுக்கு நல்லிணக்கம் காட்டி நடந்துகொள்வர்.