தலைவிரித்தாடும் வேலையின்மை

ஜனவரி 16-31

வளர்ச்சி வளர்ச்சி என்ற வசீகரமான குரலைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மக்கள் மத்தியிலே பெரியதோர் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்த ஏழரை மாதங்களில் மதவாத ஓங்காரக் குரலேயன்றி, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதல்களை உண்டாக்கும் போக்கு அல்லாமல்,  பொருளாதாரத் துறையிலோ, தொழில் வளர்ச்சியிலோ, வேலைவாய்ப்பிலோ, கல்வி மேம்பாட்டிலோ, மக்களின் சுகாதார வளர்ச்சியிலோ குறிப்பிடத்தக்க சாதனையைச் சொல்லி மார்தட்ட முடியுமா?

மோடி காந்திநகரில்  (பிரவாசி பாரத் திவஸ்) வெளிநாட்டுவாழ் இந்தியர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டு  இருக்கும்போது  தொழிலாளர் துறை அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வழங்கியுள்ளது.   இந்தியாவில் வேலைவாய்பின்மை 4.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்குள் வேலையில்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

நகர்ப்புறங்களில் முக்கியமாக தொழிற்சாலைகள் எவ்வித காரணமுமின்றி மூடப்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் புரிதலற்ற பொருளாதாரக். கொள்கை காரணமாக அனைத்து மட்டங்களிலும் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது.

வட இந்திய பல்வேறு மாநிலங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்பட்டு வந்த 60 விழுக்காடு மக்கள் வேலை வாய்ப்பிழந்தவர்களாகிவிட்டனர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் 5.7 விழுக்காடு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது.

வேலைவாய்ப்பின்மை கிராமப்புறங்களைப் பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 83 விழுக்காடு பெண்களும் 67 விழுக்காடு ஆண்களும் பயனடைந்து வந்தனர்.

நகர்ப்புறங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தினசரிக் கூலிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பல்வேறு கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதை நம்பியுள்ள 43 விழுக்காடு மக்கள்  வேலைவாய்ப்பின்றி வாடுகின்றனர்.

இவர்களின் பெரும்பாலானோர் தினசரி கூலிகளாக பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கை காரணமாக எதிர்வரும் ஆண்டுகளில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில்  வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

2014 செப்டம்பர் ஹிந்துஸ்தான் வாட்ச் லிமிடெட் மூடப்பட்டதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 17,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

ஏர்.இந்தியா, ஓ.என்.ஜி.சி, போன்ற அரசுத்துறை நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகள் இழுத்து மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பிழந்து நிற்கின்றனர்.

நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் காரணமாக அதைச் சார்ந்த 30,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர்.

பன்னாட்டு  அளவில் தகவல் தொடர்புத்துறை அதிநவீனமயமாக்கப்பட்டு வருவதால் பெரும்பாலான நாடுகள் தங்களது தேவைகளைத் தாங்களே மிகவும் குறைந்த செலவில் பூர்த்தி செய்துகொள்கின்றன. இதன் காரணமாக (அய்.டி) தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களைக் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வருகிறது.

இந்த வரிசையில் கடந்த 3 மாதங்களாக விப்ரோ, எல்&டி, டாடா கன்சல்டன்சி மற்றும் ஹக்சார்வே போன்ற பெரிய தகவல் தொழில் துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்களது கிளை நிறுவனங்களில் பலவற்றை மூடியுள்ளன. இதனால் நாடு முழுவதும் ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்-துள்ளனர். இவர்களில் இளைஞர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.   தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் கதவடைப்பு காரணமாக இத்துறையைச் சேர்ந்த ஆண்களில் 57 விழுக்காடும் பெண்களில் 42 விழுக்காடும் வேலையிழந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த நிலை என்றால் தமிழ்நாட்டில் நிலை   அதல பாதாளத்தில் குப்புற வீழ்ந்து கிடக்கும் பரிதாப நிலை!

நோக்கியா, பி.ஒ.ய்.டி. ஆகிய மின்பொருள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை மூடப்படுகிறது; பிளக்ட்ரானிக், சான்மினா போன்ற தொழிற்சாலைகளில் ஆள் குறைப்புச் செய்யப்படுகிறது. இவற்றின் மூலம் 25,000 பேர் வேலையை இழக்கின்றனர் என்றால் 25,000 குடும்பங்கள் நடு வீதிக்கு வருகின்றன என்று பொருள்.

டாடா கன்சல்டன்சி என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 25 ஆயிரம் பேர்களுக்கு வேலை இல்லை என்று நோட்டீஸ் கொடுத்துவிட்டது.

என்.வி.எச். இந்தியா தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கி இதுவரை தமிழ்நாட்டில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கினால் நாட்டில் இளைஞர் மத்தியில் வன்முறை தலைதூக்கும் அபாயமும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கத்தில் வேலைவாய்ப்புப் பறிப்பு; இன்னொரு பக்கத்தில் அரசுத்துறைகள் தனியார்த் துறைகளுக்கு கைமாறும் போக்கு; தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல்லாமையால்  போராடி போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டுக்கு ஆழக் குழிபறிப்பு! உயிர் காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெட்டு,  (20 சதவீதம் குறைப்பு ரூ.6000 கோடி வெட்டப்பட்டுள்ளது) உலகில் எய்ட்ஸ் (எச்.அய்.வி.) பாதிக்கப்-பட்டவர்களில் மூன்றில் ஒரு பாகம் இந்தியாவில் உள்ளனர்; மத்திய அரசின் விபரீதப் போக்கால் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இரயில்வே துறை வளர்ச்சித் திட்டங்களும் முடக்கம்!

இந்த ஆபத்துகளின் இரும்புப் பிடியில் நாடு அபாய கட்டத்தைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. மக்களின் கவனம் இந்தப் பக்கம் வராமல் தடுக்க மற்றொரு பக்கத்தில் இந்துத்து-வாவாதிகளின் மதவாதக் கூச்சல்!

இவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டியது மக்கள் நலன்மீது அக்கறை கொண்டவர்களின் அவசியமான அடிப்படைக் கடமையாகும். மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு போகவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதையும் வேலை-வாய்ப்புகள் பறிக்கப்படுவதைத் தடுக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற உரிமைக் குரல் எழுப்பவும், சமூக நீதியை நிலைநாட்டவும்  போராட வேண்டிய நிலையில்-தான் நாடு இருக்கிறது.

கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் இளைஞர்களே மாணவர்களே கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *