மருந்தின் விலையும் மோடியின் சதியும்

டிசம்பர் 01-15

நரேந்திர மோடி.

கடந்த செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. தனது அய்ந்து நாள் அமெரிக்கச் சுற்றுப் பயணம், வெற்றிகரமாவும், திருப்தியாகவும் அமைந்ததாக பூரிப்பும் புளங்காங்கிதமும் அடைந்துள்ளார். ஆனால் தனது அமெரிக்கச் சுற்றுப் பயணத்தால் பல இலட்சம் பேரைக் கதிகலங்க வைத்துள்ள செய்தி பெரும்பான்மை ஊடங்கங்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கு முதல் நாள் உயிர்காக்கும் 108 மருந்துகளுக்கான விலைகளைக் கிடுகிடு என்று உயர்த்தி அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகிழ்வித்துள்ளார். புற்றுநோய்க்கான மருந்தான கெஃப்டினேட்டினின் விலை 5,900 ரூபாய். இப்போது அதன் விலை 11,500 ரூபாய். மற்றொரு மருந்தான கிளிவெக்கின் (Glivec) முந்தைய விலை 8,500 ரூபாய். இப்போது 1,08,000 ரூபாய். இந்த மருந்தின் விலை 14 மடங்கு உயர்ந்துள்ளது. வெறிநாய்க்கடிக்கான ஊசியின் விலை 2,670 ரூபாயிலிருந்து 7000 ரூபாய் என உயர்ந்துள்ளது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான பிளேவிக்ஸின் (Plavix) முந்தைய விலை 147 ரூபாய். இப்போது 1,615 ரூபாய். உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு விலையேற்றம் நடைபெறவில்லை.

 

இந்திய நாட்டில் 4.1 கோடி மக்கள் சர்க்கரை நோயாலும், 6 கோடி பேர் ரத்த அழுத்த நோயினாலும், 5.7 கோடி பேர் இருதய நோயினாலும் 22 லட்சம் பேர் காச நோயினாலும், 11 லட்சம் பேர் புற்றுநோயாலும், 22 லட்சம் பேர் எயிட்ஸ் நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலையேற்றம் இம்மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். பாரதீய ஜனதாவின்  மோடி ஆட்சியில் ஏழை மக்களும் நடுத்தர மக்களும் நோய் வந்தால் உயிர் வாழ உரிமையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். இந்தியாவை மாற்றுகின்றேன் என்று கூறி வந்தார். இந்தியப் பன்னாட்டுக் கம்பெனிகள் இவருக்கு ஆதரவாகக் களம் இறங்கி வெற்றிபெறச் செய்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியதற்கு நன்றிக் கடனாக ஆட்சியில் அமர்த்திய 6 மாதங்களில் முதலாளிகளுக்கு ஆதரவாக கொள்கைகளை _ திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. நோயுற்றால் 80 விழுக்காடு குடும்பங்கள் தனியார் மருத்துவரிடம்தான் செல்கின்றன. இவர்களின் மொத்த மருத்துவச் செலவில் 74 விழுக்காட்டை மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காகச் செலவிடு-கின்றனர். எனவே மருந்துகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது; எவ்வாறு அது செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

1970களுக்குமுன் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வேட்டைக்காடாக இருந்தது இந்தியா. நடுத்தர வகுப்பு மக்கள்கூட வாங்க முடியாத அளவில் மருந்துகளின் விலை இருந்தது. 1973இல் புதிய காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இது மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வழிகோலியது. 1975ஆம் ஆண்டு ஜெய்சுக்லால் ஹாத்தி குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் (Drug Price Control Order – DPCO) அமைக்கப்பட்டது. 1979இல் 347 மருந்துகளின் (Active Pharmaceutical Ingredience) விலை நிர்ணயம் இந்த ஆணையத்தின் கீழ் கொண்டு-வரப்பட்டது. இதன்விளைவாக மருந்துகளின் விலை படிப்படியாகக் குறைந்தது. உலகிலேயே மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கும் நாடு என்ற புகழை இந்தியா பெற்றிருந்தது.

1987இல் இப்பட்டியலில் இருந்த மருந்துகள் எண்ணிக்கை 142 ஆகக் குறைக்கப்பட்டது. 1995 சனவரி முதல் காட் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்ததைக் காரணமாகக் காட்டி, விலைக்கட்டுப்-பாட்டில் இருந்த மருந்துகளின் எண்ணிக்கை 76ஆகக் குறைக்கப்-பட்டது. அதன்பின், மருந்து தயாரிப்பு முதலாளிகள் அளித்த நெருக்கு-தலால், 2002இல் இந்த எண்ணிக்கை 35ஆகக் குறைக்கப்பட்டது. இக்குறைப்புக்குச் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த ஆணைக்குத் தடைவிதித்தது. இவ்வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம், உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தையும் விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலின்கீழ் நடுவண் அரசு கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இறுதியாக 2012 நவம்பர் 27க்குள் இன்றியமையா மருந்துகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது. அதனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை 23.11.12 அன்று இன்றியமையா மருந்துகள் பட்டியலில் 348 மருந்துகளைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி 348 மருந்துகளும் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தற்போது பன்னாட்டு மருந்து நிறுவனங்-களைத் திருப்தி செய்வதற்காக இருதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொழுப்பு, புற்றுநோய் சம்பந்தப்பட்ட 108 மருந்துகளின் மீது இருந்த விலைக் கட்டுப்பாட்டை மோடியின் அமெரிக்கப் பயணத்தை ஒட்டி இந்த அரசு நீக்கியுள்ளது. இனிமேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல மருந்தின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். 108 மருந்துகளில் பெரும்பாலானவை பன்னாட்டுக் கம்பெனிகள். அதிலும் குறிப்பாக அமெரிக்கக் கம்பெனிகள். அமெரிக்காவில் வருமானம் ஈட்டித் தரும் தொழில்களில் முதன்மையானது ஆயுத உற்பத்தி. அதற்கு அடுத்தபடியாக இருப்பது மருந்து உற்பத்தி. அதிபர் தேர்தலின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளாக மருந்துக் கம்பெனிகள் இருக்கின்றன. அத்தகைய மருந்துக் கம்பெனிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் மிகவும் பாதிக்கும் இந்த விலையேற்றத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ”பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பாக அந்த நாட்டைச் சேர்ந்த சில மருந்து உற்பத்தி நிறுவனங்களை மகிழ்ச்சிப்படுத்த சலுகைகளை அளித்துள்ளார். குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் நலன்-களுக்காக மட்டுமே மோடி பாடுபடுகிறார். வெகு விரைவில் தொழிலதிபர்களுக்காக மட்டுமே அரசு இயங்கும் நிலை உருவாகக்கூடும்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இது மனிதாபிமானமற்ற செயல் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறி உள்ளார். இந்த விலையேற்றத்தைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றன _ -இது ஒருபுறம் இருக்க, இந்த விலையேற்றத்தால் சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் லாப விகிதம் 0.7 விழுக்காடு கூடியுள்ளது. டோரண்ட் மற்றும் லுர்ப்பின் மருந்துக் கம்பெனிகளின் லாபங்கள் முறையே 1.5 விழுக்காடும் 0.7 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் பங்குகளின் விலையும் 2 விழுக்காடு வரை கூடியுள்ளது. ஜி.எஸ்.கே. பார்மா மற்றும் டேவிஸ் லேப் கம்பெனிகளின் பங்குகளின் விலை 1 விழுக்காடும் கிளென்மார்க் கம்பெனியின் பங்கின் விலையும் கூடியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், மக்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் இலவசமாக அளிக்கப்படும் என்றும், அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். இவர் சொன்னதற்கும், அவர் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்கின்ற செயலுக்கும் சம்பந்தம் ஏதாகிலும் உள்ளதா? இந்த விலை உயர்வை எதிர்த்து வழக்குரைஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தெடர்ந்துள்ளார். மத்திய அரசின் முடிவில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி-யுள்ளார். இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கெள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

– பழ.பிரபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *