எது தமிழ்த் திருமணம் – 9
கார் மாடல் போல கல்யாண முறைகள்
பெரியாரின் தொலைநோக்கு
சுயமரியாதைத் திருமணத்தைப் போன்றே மதச் சடங்குகள் அற்ற கிறித்துவர்களின் திருமணம் மனிதநேயத் திருமணம் (Legal Humanist Marriage) எனும் பெயரில் இங்கிலாந்து நாட்டில் எடின்பர்க் நகரில் 1975இல் நடந்த செய்தி நாளேடுகளில் வந்துள்ளது. மனிதநேய சங்கத்தார் இத்தகைய திருமணங்களை நடத்தி வைக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என அந்நாட்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு அறிவு 1928இல் செயல்படுத்திக் காட்டியதை 47 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இங்கிலாந்து நாடு கடைப்பிடிக்கிறது. பெரியாரைத் தீர்க்கதரிசி என்று பாராட்டியது பொருத்தம்தானே!
பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் திருமணங்கள் தமிழ்நாட்டில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த செய்தியினைக் குடிஅரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டுள்ளார். அதன்படி 19.8.1926இல் நாகப்பட்டினத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. சேலம் பிரபல காங்கிரசுத் தலைவர் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் உறவினரின் திருமணச் செய்தியை குடிஅரசு 28.9.1926இல் வெளியிட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் தாதம்பட்டி எனும் ஊரில் நடைபெற்ற மூன்று திருமணங்கள் பற்றிய செய்தி குடிஅரசு 21.11.1926இல் வெளிவந்துள்ளது.
என்றாலும் தந்தை பெரியார் அவர்கள் 1928இல் நடத்திவைத்து, அதன் பின்னர் நாடு முழுக்க நடத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள்தான் பெருத்த விழிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தின. சட்டப்பூர்வ திருமணம் என்கிற நிலையைப் பெற்றுத் தந்தன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளிலும் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
வகுப்பு – அறிவு உணர்ச்சிகள்
ஆனால் தமிழ்த் திருமணம் என்பதன் நிலை என்ன? பெரியார் சொன்னதுபோல, தமிழ்த் திருமணம் என்பது வகுப்பு உணர்ச்சி காரணமாய் ஏற்பட்டது. இதன்மூலம் பார்ப்பனப் புரோகிதர் விலக்கப்படுகிறார். பார்ப்பனரின் புரோகித முறைச் சடங்குகள் விலக்கப்படுகின்றனவா? விநாயகன் வழிபாடு, திருவிளக்கு பூஜை, பாலிகை இடுதல், விபூதி பூசுதல், காப்பு இடுதல், ஆடை உடுத்தல், பஞ்சகவ்யம், அய்ந்தெழுத்து பாதபூஜை, திருத்தாலி வழிபாடு, தாலி கட்டுதல், பட்டங்கட்டுதல், மாலை மாற்றுதல், மிஞ்சி இடுதல், அறு கெடுத்தல், வாழ்த்துக் கூறல் எனும் தலைப்புகளில் சமக்கிருதத்திற்குப் பதில் தமிழ்ப் பாடல்கள் என்று எல்லாமும் இடம் பெறுகின்றன.
மூஷிக வாகன, மோதக ஹஸ்தனே என்பதற்குப் பதில் ஆனைமுகத்தானைக் கூப்புவர் தம்கை எனப் பாடுகிறார்கள். ஆலவாயான் திருநீறே, வேதியர் குழாமும் திருத்தொண்டரும் ஆறு சூடினார் என்றுதானே பாடுகிறார்கள். கயிலை மலையானே என்றும் ஆரூரானை என்றும் உமையவளொடு இருந்தவனே என்றும் கூப்பிடுகிறார்கள். நாகேஸ்வரனே என்றும் பிரமபுரக்காவலனே என்றும் அழைத்து ஆரியக் கற்பனைக்குக் காவலராக அலுவல் பார்க்கின்றனரே!
பழந்தமிழரிடையே ஆனைமுகத்தானோ, வேதியர் குழாமோ உண்டா? எனவே, இவை தமிழ்மொழியில் நடக்கும் ஆரியப் புரோகித மூடநம்பிக்கைப் பெண்ணடிமைத் திருமணம் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர தமிழ்த் திருமணம் என்று கூறமுடியாது, கூறக்கூடாது. பசு மாட்டின் கழிவுகளான சாணி, மூத்திரம் ஆகியவற்றுடன் பால், தயிர், நெய் கலந்து பஞ்சகவ்யம் என்று சமஸ்கிருதப் பேரிட்டுப் புசிக்கும் பழக்கத்தை வைத்திருக்கும் திருமண முறை எப்படித் தமிழர் திருமணம் ஆகும்!
இந்த அய்ந்தின் கலவையைத் தமிழில் ஆனைந்து என்கிறார்களே அதையாவது சொல்லித் தொலைக்காத இந்த முறைத் திருமணம் எப்படித் தமிழ்த் திருமணம் ஆகும்?
தாலி வரலாமா?
தாலியை மங்கல அணி என்றால் தமிழ்த் திருமணம் ஆகிவிடுமா? அகநானூறு பாடல் 54இல் புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலியும், புறநானூறு பாடல் 374இல் வரும் புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் என்பதும் ஆண்கள் அணிந்த அணி தானே! இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவு கோத்து என பெரிய புராணம் பாடுவதும்கூட இந்த ஆண் தாலியைத் தானே! இப்போதைய சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சாரத்தாலி, மண்டைத் தாலி, நாணல்தாலி (ஞாழல் தாலி), பார்ப்பாரத் தாலி, பொட்டுத்தாலி என்பவையெல்லாம் மகளிர் கழுத்தில் மாட்டும் தாலிகள். இவை கட்டப்பட்ட சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் இல்லையே!
ஆரியப் புரோகிதத் திருமணத்தில் காப்புக் கட்டும் சடங்கில் புரோகிதர் கட்டுகிறார். மாலையோ அல்லது மறுநாளோ வண்ணார், மருத்துவர் போன்றவரே காப்பை அறுக்கின்றனர். ஒரு காலத்தில் இவர்கள் செய்து வைத்த திருமணச் சடங்குகளை நாயக்க மன்னர்கள் காலத்தில் அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பூணூல் அணிந்த பார்ப்பனர் முன்னுக்கு வந்து நடத்திடும் நிலை வந்துள்ளதை ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் தெரிவித்த பின்னும் திருந்த வேண்டாவா? புரோகிதனை மட்டும் நீக்கி மீதமுள்ள புரோகித முறைகளைச் செய்வது என்ன தமிழ்த் திருமணம்? எப்படித் தமிழர் திருமணம்?
ஜாதிக்கொரு தாலி உள்ளது. தாலி செய்யும் பொற்கொல்லர் மணமக்களின் ஜாதியைத் தெரிந்து அந்த ஜாதிக்குரிய தாலியைச் செய்து தருகிறார். முன்னமே தயாரிக்கப்பட்டு விற்கப்படும் தாலிகள் ஒரே மாதிரியாக இல்லாமல் ஜாதிவாரியாக இருப்பதை நகைக் கடைகளில் காணலாம். கருவறையில் மட்டுமன்றி கல்யாணத் தாலியிலும் ஜாதி பதுங்கித் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஜாதி தமிழ் அல்ல. தமிழர்க்குரியதும் அல்ல. அதன் அடிப்படையில் அமைந்த தாலி மட்டும் எப்படித் தமிழர்க்காகும்? இதனைக் கட்டிச் செய்யப்படுவது எப்படி தமிழர்க்கான திருமணம் ஆகும்?
நாடறி நன்மணம் எனக் குறிஞ்சிப் பாட்டு (பாடல் 232) கூறிய வகையில் நடைபெறும் மணவிழாக்களில் உறவினருடன் அமர்ந்து விருந்துண்டு மகிழ்தல் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள்தாம். சங்ககாலத்திலிருந்தே இப்பழக்கம் தொடர்வதை தன்அமர் ஆயமொடு நன்மணம் மற்றும் தமர்மணன் அயரவும் போன்ற சங்கப் பாடல் அடிகள் எண்பிக்கின்றன. அத்தகையச் சிறப்புமிக்க தமிழர் விழாக்களில் ஆரியம் கலக்கலாமா? புகலாமா? புகுத்தப்படலாமா? அக்னி சாட்சியாகவும் ஆகாசவாணி சாட்சியாகவும் சடங்குகள் நடத்தப்படலாமா? (ஆகாசவாணி என்றால் வானம் _ வானொலி அல்ல) மண்ணையும் நீரையும் கொண்டாடுவதுதான் இந்த மண்ணின் பண்பாடு. வானத்தையும் நெருப்பையும் கொண்டாடுவது ஆரியர் பழக்கம். அந்த ஆரியர் பழக்கம் இடம்பெறும் முறை எப்படித் தமிழர் திருமணமாகும்?
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே என்று தொல்காப்பியர் கூறியவாறு மிகப் பெரும்பான்மையராகிய கீழோர் செய்துகொள்ளும் திருமணச் சடங்குகள் நான்கு வருணப் பிரிவை உறுதிப்படுத்துகின்றன. இன்னும் சொன்னால், பிறவியிலேயே பேதம் கற்பிக்கும் கீழ்_மேல் எனும் சமநிலை அற்ற சமுதாயத்தைப் பிரதிபலிக்கிறதே!
சமூக உயர்வு தாழ்வு கற்பிக்கும் நிறுவனம் எனக் கூறத்தக்க வகையில்தானே தமிழர் திருமணம் அமைந்துள்ளது?
முதல் இந்தி எதிர்ப்புப் போரைப் பெரியார் 1937இல் தொடங்கியபோது கூட்டுப் பணியாளர்களாக -_ சக போராளிகளாக விளங்கிய மறைமலை அடிகள், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், சரவண ஆறுமுக முதலியார் ஆகியோர் நடத்திய தமிழர் திருமண மாநாடு எடுத்த முடிவுகளின்படியே தமிழர் திருமணங்கள் நடத்தப் பெறுகின்றன எனலாம். இந்தி எதிர்ப்பு என்பது பார்ப்பன எதிர்ப்பாக உருப்பெற்ற அக்காலத்தில் பார்ப்பனப் புரோகிதரை நீக்கவும், சமஸ்கிருத மந்திரங்களை விலக்குவதும் ஆகிய முடிவுகள் (பெரியார் சொல்வதைப் போல) வகுப்பு உணர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டன. தாலி கட்டல், தீவலம் வருதல், அம்மி மிதித்தல் போன்ற எல்லாமே தமிழர்க்கு உரிய சடங்குகள் என்றே மறைமலை அடிகள் அடித்துப் பேசிவிட்டார். காதலிலுமா தமிழன் மானங்கெட்டு, புரோகிதனை அழைப்பது? எனும் வினாவே முதன்மையாக எழுப்பப்பட்டதால், பார்ப்பன எதிர்ப்பு மேலோங்கி முடிவுகள் எடுக்கப்பட்டன. அரைக் கிணறு தாண்டிய நிலைதான்! தமிழ்ப் பெரியார்கள் இதனை உணரவில்லை, இன்றளவும்!
பேராசிரியர் ச.மாடசாமி கூறுவதுபோல, மேற்கத்திய பாணியில் கோட் அணிந்து, புரோகித பாணியில் நெருப்பு வளர்த்து, தொல்குடி மரபில் உப்பும் நீரும் மணப் பரிமாற்றம் செய்து, தன் பூர்வீகத்தின் குலக்குறியை (Totem) மணவறையில் பக்கத்தில் வைத்து, அரசியல் வெற்றி போல சிவகாசி வேட்டு வெடித்து, என்று இப்படி எல்லாம் கலந்த கலவையாக தமிழர் திருமணம் நடக்கிறது எனக் கவலைப் படவேண்டிய நிலை, இன்று!
தமிழர் பண்பாட்டை _ பழந்தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் தமிழர் இல்ல மணவிழாக்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழ் அடையாளம் எதுவுமே இல்லாத தமிழர் திருமணங்கள் மாற்றப்பட வேண்டும். மனித நேய அடையாளங்களாவது இருக்க வேண்டும். கொடிய ஜாதிய நாய் குரைக்குமுன்னே நடந்து வா அன்னமே என்று புரட்சிக்கவிஞர் விரும்பியதுபோல மணமகளை அழைக்கும் மணமுறை இருக்க வேண்டும். இவையெல்லாம் அடங்கியதாக இருக்கும் மணமுறை சுயமரியாதைத் திருமணம் மட்டுமே!
கல்யாண முறைகள் கார் மாடல் போலத்தான் என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்! அறிஞர்களும் தமிழர்களும் சிந்திப்பார்களாக!
– சு.அறிவுக்கரசு