என்றும் பெரியார்தான் தலைவர்
{இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மலரும் நினைவுகள்}
வீர வணக்கம்!
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், சீரிய பகுத்தறிவாளரும், திராவிட இயக்க அரசியலில் பங்காற்றியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தமது 84ஆம் வயதில் (24.10.2014) காலமானார்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நானே சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவியர். இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். சிறுவயதிலேயே நாடகம் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதனால் அப்போது நடக்கும் புராண நாடகங்களெல்லாம் பார்ப்பேன். அதில் கிருஷ்ணன் கதை நாடகமும் பார்த்துள்ளேன்.
கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள். பாமா, ருக்மணி. கிருஷ்ணனுடன் ருக்மணி சேர்ந்து பாமா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் பாமா கதவைச் சாத்திவிடுவாள். அப்பொழுது கிருஷ்ணன் பாடுவார் சத்யபாமா கதவைத் திறவாய் என்று. இந்தக் காட்சிகளையெல்லாம் நாடகத்தில் பார்த்துள்ளேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எனது தந்தையாரின் இரு மனைவியரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எங்க அம்மாவும், சின்னம்மாவும் வித்தியாசம் பார்க்காமல் எங்களிடம் பாசம் காட்டுவார்கள். கடவுளுடைய யோக்கியதை இப்படி மோசமாகவுள்ளதே. நம்ம வீட்டில் எவ்வளவோ நன்றாக உள்ளதே என்று சிந்தனை செய்யத் தொடங்கினேன்.
இது டி.கே.எஸ். கம்பெனியில் இருந்தபோது பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக இருந்தது. அங்கு வரும் பெரியாரின் பத்திரிகைகளையெல்லாம் படிப்பேன். விவாதங்கள் செய்வேன். நாடகக் கம்பெனி ஊர் ஊராகச் செல்லும்போது கும்பகோணம் சென்றோம். அங்கு கே.கே.நீலமேகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் அய்யாவின் படம் இருக்கும். அய்யா நூல்களைப்பற்றி சொல்லுவார். அதுவரை அய்யா அவர்களை நான் பார்த்ததில்லை. அப்படியே ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.
*****
பெரியார் அவர்களைச் சந்தித்தேன். அடிக்கடி சந்தித்தேன். அவருடன் பேசினேன். சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பேன். சில சமயங்களில், விவாதமே செய்வேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னப் பையன்தானே என என்னை நினைக்காமல், பொறுமையோடு, நிதானமாகப் பதில் சொல்வார். தந்தை பெரியாரும் சில சமயங்களில் எங்கள் நாடகங்களைக் காண வருவார். அங்குள்ள திராவிடர் கழக நண்பர்களுடன் எனக்குப் பழக்கமேற்பட்டது.
அங்கு அய்யா அவர்கள் பண்பாட்டைக் கண்டு வியந்தேன். சிறு வயதினனான என்னை வாங்க… போங்க… என்று அழைத்தார். அப்போது நான் துருதுருவென துடிப்புடன் இருப்பேன். ஏராளமாகக் கேள்விகள் கேட்டேன். பொறுமையுடன் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பதில் சொல்வார்.
*****
சம்பூர்ண இராமாயணம் திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன். இரண்டாவதுதான் தொழில் என்று சொன்னேன். இதனால்தான் என்னை அண்ணா அவர்கள் இலட்சிய நடிகர் என்று அழைத்தார்கள். அதுவே எனக்குப் பட்டமாயிற்று. யார் யாரோ இன்று வேஷம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ராஜேந்திரன் ஒரு கொள்கையுள்ள நடிகர். எனக்குக்கூட ஆசைதான். ராஜேந்திரன் நடிக்க மறுக்கும் வேடங்களில் வேறு யாராவது நடித்து பணம் வாங்கிச் சென்று விடுவார்களே, இவரே நடிக்கலாமே என்று. அதனால் பல லட்சங்கள் அவருக்கு இழப்புதானே? ஆனால் அவரைப் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்களே என்னைப் பாராட்டினார்கள்.
*****
மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அய்யா கருதினார். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அதை வெளிப்படையாகத் தட்டிக்கேட்டவர் தந்தை பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியதில்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.
தந்தை பெரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப்பேச மாட்டார்கள். மதவாதிகளையோ, அரசியல் வாதிகளையோ, பிற்போக்குவாதிகளையோ அவர்களின் கொள்கைகளைத்தான் கண்டித்துப் பேசுவார்.
*****
என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவர்தான் தலைவர். அவர் கொள்கையைத்தான் நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன்.
நேர்காணல்: மணிமகன்
தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் மலர் (2003)