வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க…
காஞ்சி சங்கர மடக் கல்லூரியின் பாலியல் திமிர்ப் பேச்சு
காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, நாள்தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும்… என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்-கழகத்தின் உள்ளே நடைபெறுவதைக் கேட்டால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
மாணவிகள் தங்கிப் படிக்கும் இப்பல்-கலைக்கழக பெண்கள் விடுதி குளிக்கும் அறையில் கேமராக்கள் பொருத்தப்-பட்டுள்ளனவாம். மாணவிகள் புகார் கொடுத்தும் நிர்வாகத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்த மாணவிகளும் கடந்த 2 ஆண்டுகளாக அமைதி காத்து வந்துள்ளார்கள்.
கடந்த 10 நாள்களாக கேமரா விவகாரம் குறித்து விடுதிக் காப்பாளரிடம் (வார்டன்) புகார் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லாததால் உடன் பயிலும் மாணவர்களிடம் கூறியுள்ளனர். வெகுண்டெழுந்த மாணவர்கள் இந்தச் செயலைச் செய்தது அங்கு மின்சார வேலை(எல்க்ட்ரீசியன்) பார்ப்பவர் என்பதைக் கண்டுபிடித்து விடுதியின் தலைமைக் காப்பாளரிடம் கூறியதுடன், கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் எந்தப் பலனும் ஏற்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட 400 மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அங்கோ 2 மணி நேரமாக ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் (மீட்டிங்) இருப்பதாகவே பதில் வந்துள்ளது.
விடுதிக் காப்பாளர், பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில இருப்பதை இணையதளத்தில் அப்லோடு செஞ்சிடுவேன்
என்றதும், கோபமடைந்த மாணவர்கள் கல்லூரியினுள் சென்று டீனிடம் முறையிட்டுள்ளனர். டீனோ, நாகரிகமாக நடந்துகொள்ளும்படிக் கூறியதுடன் பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.
இத்தகு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டிருந்த வேளையில், கல்லூரி நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க என்றதும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் கூறியதும் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.
மாணவர்கள் அனைவரும் காலை முதல் தண்ணீர்கூடக் குடிக்காமல் சோர்வுடன் இருந்ததன் விளைவு, இரவு 7.30 மணிக்கு கல்லூரியின் விளக்குகள் அணைக்கப்பட்டு, காவல்துறையின் உதவியால் மாணவர்களைச் சித்ரவதை செய்து களிப்படைந்துள்ளது நிர்வாகம்.
சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களைக் கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவோ?
நன்றி: வினவு