நம்பிக்கைகள் பிறக்கின்றன
நம்பிக்கைகள் சாகின்றன
நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்குகின்றோம்
ஒரு நம்பிக்கை ஒருவனைச் சாட்டையால் அடிக்கிறது
இன்னொருவனின் நம்பிக்கை
ஒருவனின் கழுத்தை அறுக்கிறது
ஒரு நம்பிக்கை
அசுரனைக் கொல்கிறது
இன்னொன்று அந்தணன் கொன்றால்
அவனைத் தண்டிக்காதே பிரமஹத்தி தோஷம் வருமென்கிறது
நம்பிக்கைகளுக்காகச் சண்டையிடுகிறோம்
அவைகளுக்குப் பெயரிடுகிறோம்
ஒரு நம்பிக்கையின் பெயர் ஜாதி
இன்னொன்றின் பெயர் கட்சி
நம்பிக்கை மதமாகிறது
சில நம்பிக்கைகள் நம் கண்முன்னே சாகின்றன
சில தன்னை மாற்றிக்கொள்கின்றன
கண்டால் தீட்டெனச் சொன்ன நம்பிக்கை
செத்து சுண்ணாம்பாகிவிட்டது
கணவன் சிதையில் மனைவிகளைத் தூக்கியெறிந்த நம்பிக்கையின்மேல் புல் முளைத்துவிட்டது
ஈயத்தைக் காதில் ஊற்றச் சொன்ன நம்பிக்கை
உலகத்தை விட்டு ஓடிவிட்டது
என்றோ ஒரு நாள் சாகப்போகும் நம்பிக்கைகளின் பெயரில் நேற்றும் ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்றோம் இன்றைக்கும் வளர்கின்றன நம்பிக்கைகள்
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு!
நேரம் கிடைத்தால் நம்பிக்கைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்
அதன்அடியில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்
இன்னொரு நம்பிக்கையின் அடியில் இருப்பவர்கள்மீது கல்லெறிந்து கொண்டிருப்பதை
எளியமனிதர்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை
உங்களைத் தேடுங்கள் நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள்…?
– கோசின்ரா