Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மூளை to மூளை தகவல் பரிமாற்றத்தில் புதிய புரட்சி!

– செமல்விஸ்

ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும்

1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 சைகை காட்ட வேண்டும்

3.    நபர் 1 காட்டும் சைகைகளை நபர் 2 பார்க்க வேண்டும்

4. நபர் 2 பார்ப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சைகையுடன் சேர்ந்து பேச்சும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியது. மனித குலம் இந்த நிலைக்கு முன்னேறியபோது  ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் 1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 பேச வேண்டும்

3. நபர் 1 பேசுவதை நபர் 2 கேட்க வேண்டும்

4. நபர் 2 கேட்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைகையுடனும், பேச்சுடனும் சேர்ந்து எழுத்தும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியது. மனித குலம் இந்த நிலைக்கு முன்னேறிய போது   ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் 1.    நபர் 1 சிந்திக்க வேண்டும் 2.    நபர் 1 எழுத வேண்டும்

3.    நபர் 1 பேசுவதை நபர் 2 வாசிக்க வேண்டும்

4.    நபர் 2 வாசிப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் எழுத்து என்பது பாறைகளில் எழுதுவது, களிமண்ணில் எழுதுவது, ஓலைகளில் எழுதுவது, செப்புப் பட்டயங்களில் எழுதுவது, காகிதங்களில் எழுதுவது, அச்சிடுவது என்று மாறி வந்த நேரத்தில், 1875ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வசித்த இரிச்சர்டு கால்டன் என்ற மருத்துவர் தனது ஆய்வு முடிவுகளை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் எழுதினார். குரங்குகள் மற்றும் முயல்களின் கபால எலும்பினை அகற்றி விட்டால், மூளையில் இருந்து மின்னலைகள் வருகின்றன என்பதுதான் அவரது கண்டுபிடிப்பு.

15 ஆண்டுகள் கழித்து 1890இல் போலந்தைச் சேர்ந்த அடால்ப் பெக் என்பவர், முயல்கள் மற்றும் நாய்களின் மூளையில் இருந்து பெறப்படும் மின்னலைகள் மாறுகின்றன என்றும், இந்த மாற்றத்திற்கு அந்த உயிரினங்களின் கண்களில் விழும் ஒளி ஒரு முக்கியக் காரணியாக உள்ளது என்றும் கண்டுபிடித்தார். 1912ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த விளாடிமிர் விளாடிமிரொவிச் ப்ரவ்திச் நெமின்ஸ்கி என்பவர் ஒரு நாயின் மூளையின் மின்னலைகளைக் காகிதத்தில் பதிந்தார். 1924ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் பெர்கர் மனிதனின் மின்னலையைப் பதிந்தார். இதுவே மூளை மின்அலைப்பதிவி (Electroencephalography EEG) கடந்து வந்த வரலாறு ஆகும்.

அதன் பிறகு மூளை மின்அலைப்பதிவில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டன. மூளை மின்அலைப்பதிவி மூலம் வலிப்பு நோய் உட்பட பல நோய்களைக் கண்டறிய முடியும் என்பதையும் கண்டுபிடித்தார்கள். இது போல் பல கருவிகள் பயன்பாட்டிற்கு வந்தன. ஒளிவரைவி (VEP – Visual Evoked Potential) என்ற முறையின் மூலம் பார்வைக்கான நரம்புகளைப் பரிசோதனை செய்ய முடிந்தது. கேளலை வரைவி (Audiogram) மூலம் காதில் இருந்து ஒலிகள் மூளைக்குச் செல்லும் பாதையைப் பரிசோதனை செய்ய முடிந்தது

இவை அனைத்தையும் மூளைக்-கணினி இடைமுகம் (Brain Computer Interface) என்று அழைத்து வந்தனர். அதாவது மூளையில் (அல்லது நரம்புகளில்) ஏற்படும் செயல்-பாடுகளை கணினி மூலம் கண்டுபிடிப்பது, அதாவது மூளை செயல்படும் போது ஏற்படும் மின்னலைகளை கருவியை வைத்துக் கண்டறிந்து, அதன் மூலம் செயல்பாட்டினை அறிவது. இதற்கு அடுத்த கட்டமாக கணினி- மூளை இடைமுகம் (Computer Brain Interface) வந்தது. முதலில் மூளையில் நடைபெறும் செயல்-பாடுகளைக் கண்டு கொண்டிருந்தோம் அல்லவா. இது அதற்கு அடுத்த நிலை. மூளைக்கு அல்லது நரம்புகளுக்கு மின்னலைகளை அளித்து அதன் மூலம் மூளையை உணர வைக்க முடியுமா என்ற சோதனை. இதில் பல விஷயங்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன. அதே நேரம் செயற்கை உட்செவிச் சுருள் (Cochlear Implant) போல் சில விஷயங்களில் முன்னேறி உள்ளோம். வெளியில் இருந்து வரும் ஒலி அலைகளை உள்வாங்கி, அதை மின்னலைகளாக மாற்றி நேரடியாக மூளைக்கு இக்கருவி அனுப்புகிறது. காதில் நடுச்செவியில் பிரச்சினை இருந்தால்  செவிப்புலன் உதவிச் சாதனம் (hearing aid) மூலம் அந்த நபர் கேட்கலாம். ஆனால்  உட்செவி பிரச்சினையால் காது கேளாமை என்றால் சில ஆண்டுகளுக்கு முன்வரை அதற்கு சிகிச்சை இல்லாமல் இருந்தது. தற்சமயம், அதற்கு செயற்கை உட்செவிச் சுருள்  மூலம் தீர்வு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது கணினி- மூளை இடைமுகத்திற்கு ஓர் உதாரணம் ஆகும்.

இவ்வாறு அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அடுத்த கட்டப் பரிசோதனை நடந்தது. இதே கணினி மூளை இடைமுகம் மூலம் _-  ஒருவரது மின்னலைகள் மூலம் ஒருவரது மூளைக்கு நேரடியாக ஏதாவது செய்தி சொல்ல முடியுமா என்ற பரிசோதனை தான் அது. எசுபானியம் மற்றும் பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த சில அறிஞர்கள் திருவனந்தபுரத்தில் ஆய்வகத்தில் இருக்கும் ஒருவரின் மூளையில் இருந்து வெளிவரும் மின் அலைகளை மூளை கணினி இடைமுகம் மூலம் உள்வாங்கி, அதைக் கணினி மூலம் பதப்படுத்தி, அந்தக் குறியீடுகளை தொலைபேசி மூலம் பிரெஞ்சு நாட்டின் ஆய்வகத்திற்கு அனுப்பி, அங்கு கணினி மூலம் அதைப் பதப்படுத்தி, அங்கு கணினி மூளை இடைமுகம் மூலம் மூன்று நபர்களின் மூளைக்குள் அனுப்பி, இவர் நினைத்ததை அவர்களால் அறிய முடிகிறதா என்று சோதனை செய்துள்ளார்கள். ஆரம்ப கட்டப் பரிசோதனையில் சில செய்திகளை இம்முறையில் கடத்த முடிகிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர் .

இக்கண்டுபிடிப்பினை நாளையே நடைமுறைப்படுத்த முடியாது என்றாலும் இதில் வருங்காலத்தில் பயன்படும் சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

முக்கியமாக, விபத்து அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்-.

 

இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள்:

Carles Grau
Neurodynamics Laboratory, Department of Psychiatry and Clinical Psychobiology, Psychology and Medicine Faculties, University of Barcelona, Barcelona, Spain

Romuald Ginhoux, Thanh Lam Nguyen, Hubert Chauvat, Michel Berg
Axilum Robotics, Strasbourg, France

Alejandro Riera, Giulio Ruffini
Neuroelectrics Barcelona, Barcelona, Spain

Julià L. Amengual
Cognition and Brain Plasticity Unit, Department of Basic Psychology, University of Barcelona, Barcelona, Spain

Alvaro Pascual-Leone
Berenson Allen Center for Noninvasive Brain Stimulation, Beth Israel Deaconess Medical Center, Harvard Medical School, Boston, Massachusetts, United States of America