தலைவர்கள் போற்றும் தலைவர்!

செப்டம்பர் 16-30

தலைவர்கள் போற்றும் தலைவர்!

கொள்கைக் குன்றம்

இன்று நான் கழகப் பணியாற்றுவதாயிருப்பினும், பொதுப் பணி ஆயினும், கலைப் பணி ஆயினும், எழுத்துப் பணி ஆயினும், கொள்கைப் பிரச்சாரப் பணியாயினும், முரசொலி நாளேட்டுப் பணியாயினும் ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவு கூட அருந்தாமல் உழைப்பதற்குப் பயிற்சி பெற்றிருப்பது, குடிஅரசு அலுவலகத்திலும் ஈரோடு இல்லத்திலும் அந்தக் கொள்கைக் குன்றம் பகுத்தறிவுப் பகலவனிடம்தான் என்பதை எண்ணியெண்ணி இப்போதும் இன்பம் காணுகிறேன்.

– முத்தமிழறிஞர் கலைஞர்


ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

ஆயிரம் ஆண்டெனும்
மூதாட்டி
அவள் அணிந்திராத
அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
இப்பெரிய தமிழர்நாடு
கணந்தோறும்
எதிர்பார்க்கும்
தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான்
இராமசாமி.

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பெரியாரிடத்தில் நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்

பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் – தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.

– அண்ணல் அம்பேத்கர் (குடிஅரசு, 30.9.1944)

நீதிமன்றின்…

நோபல் பரிசு

பெரியார் அவர்கள் மட்டும் தமிழ்நாட்டிலே பிறவாமல் இருந்து, மற்ற நாடுகளிலே பிறந்து, இத்தகைய கருத்துகளைச் சொல்லியிருப்பாரேயானால், அவருக்குக் கண்டிப்பாக நோபல் பரிசு கிடைத்திருக்கும். அவ்வளவு சிந்தனை மிக்க கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்; எழுதியிருக்கிறார்.

– நீதிபதி பி.வேணுகோபால்

பதவியை விரும்பாத தலைவர்

அய்யா அவர்கள் பதவியை விரும்பவில்லை; அரசியலை விரும்பவில்லை; பதவியை வெளிப்படையாக வெறுத்தார்; ஊரைத் திருத்த வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். மக்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ வழி சொல்லிப் பிரச்சாரம் செய்தார். அதில் பெரும் அளவிற்கு வெற்றி கண்டார் என்றே சொல்லலாம்.

– நீதிபதி ஏ.வரதராசன்

பெரியார் இல்லை என்று சொன்னால்…

பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர் பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர் நீதிமன்றத்திலே இத்தனை பேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக் கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார்.

– நீதிபதி எஸ்.மோகன்

ஆயுட்காலம் முழுவதும்
ஆயுட்காலம் முழுவதும் மனத்திலே இருக்கின்ற மாசினையும் அறிவிலே இருக்கின்ற திருக்கத்தையும் ஒழிக்கப்பாடுபட்ட ஒருவர் பெரியார்.
– நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்

தன் அறிவை முன்வைத்து…

கீழைநாடுகளைப் பற்றிப் பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்!

– நீதிபதி ஏ.எஸ்.பி. (அய்யர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *