– கை. அறிவழகன்
ஜாதி குறித்த பெருமிதமும், உயர் நம்பிக்கையும் உங்களுக்கு இருக்குமேயானால் இந்தத் திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் நீங்கள் திரையரங்கிலிருந்து வெளியேறி விடுவது நல்லது. ஏனெனில், இந்தப் படத்தின் இயக்குனரான நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே குறிபார்த்து உங்கள்மீது கல்லெறிவார். உயர்ஜாதி மனநிலையின் மீதும் ஜாதிய ஒடுக்குமுறைகளின் மீதும் அவர் எரிகிற அந்தக் கல் உங்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கக்கூடும்.
இந்தியத் திரைப்படங்களில் ஜாதியை உள்ளீடு செய்வதோ, ஜாதிய ஒடுக்குமுறைகளை கவிதையைப் போல கலைநுட்பத்தோடு சொல்வதோ அத்தனை எளிதானதன்று. ஆனாலும் ஒரு கவிதையைப் போல இந்தத் திரைப்படத்தைச் செதுக்கி திரைப்படக்கலை சமூக அவலங்களை உரக்கச் சொல்லும் உயர் தொழில்நுட்பக் கருவி என்று சமகால இயக்குனர்களுக்குச் சவால் விடுத்திருக்கிறார்.
இயக்கம், இசை, காட்சிப்படுத்தும் முறை, கதை நாயகர்களின் துல்லியமான முக அசைவு என்று எல்லாத் தளங்களிலும் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தும் ஓர் உயர் கலைப்படைப்பு என்பதில் எந்த அய்யமும் இல்லை.
ஜம்புவந்த் கச்ருமனே என்கிற ஜப்யா அகமதுநகர் அருகில் இருக்கும் அகோல்நெர் (Akolner) என்கிற கிராமத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட இளைஞன் (சிறுவன்), இந்தியச் சிறுவர்களின் வழக்கமான கனவுகளோடு கிராமத்தின் புழுதி படிந்த பாதைகளில் குருவி அடித்தபடி சுற்றித் திரிகிறான். குடும்ப வறுமையின் கரங்கள் கொஞ்சம் இளகி இருக்கிற நேரங்களில் பள்ளிக்கும் போய்ப் படிக்கிறான்.
தந்தை கச்ரு மனே அன்றாடம் கிடைக்கிற கூலி வேலைகளைப் பார்க்கும் நேரம் தவிர்த்து கிராம உயர் ஜாதி மனிதர்களிடம் அடிமை வேலைகளையும் பார்க்கிறார். குடும்பம் அவரோடு துணை நின்று வாழ்க்கையை எதிர்கொள்கிறது. திருமணப் பருவத்தில் பள்ளிக்குப் போகாத ஒரு பெண் குழந்தை, வயதான தாத்தா என்று கூடை முடைந்தபடி ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு குடிசையில் வசிக்கிறார்கள்.
பள்ளிக்குப் போகிறபோது கூடப்படிக்கும் ஷாலு என்கிற உயர் ஜாதிப் பெண்ணின் மீது ஜப்யாவுக்கு ஈர்ப்பு உண்டாகிறது, கடைசி வரைக்கும் பேசாமல், ஈர்ப்பை வெளிப்படுத்தும் எந்த வாய்ப்பும் இல்லாமல் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் ஜப்யா. ஆனால், இது ஒரு காதல் கதை என்று நீங்கள் நினைத்தால் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.
இது ஒவ்வொரு இந்தியக் கிராமங்களின் இறுகிப் போன ஜாதிய அடிமைத்தளை வாழ்வின் ஓர் அற்புதமான படிமம். ஒவ்வொரு டேக்கிலும் நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் நெஞ்சுரம் கொண்ட ஒரு பொதுமனிதனாக இந்தியக் கூட்டு மனசாட்சியைக் குலைத்துப் போடுகிறார். இந்திய மனிதர்களின் மனங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் உயர்ஜாதி சிம்மாசனத்தைக் கவிழ்த்து சேற்றில் தள்ளி விடுகிறார், பன்றிகளோடு ஓடவிடுகிறார்.
கதைக்குப் பிறகு வருவோம். அதற்கு முன்னதாக இயக்குனரும் ஏனைய தொழில் நுட்பக் கலைஞர்களும் (குறிப்பாக இசையமைப்பாளர் அலோக்கனந்தா தாஸ் குப்தா மற்றும் கலை இயக்குனர் சந்தோஷ் சங்காத்) இந்தியத் திரைப்பட வரலாற்றில் இன்னொரு மணி மகுடத்தைச் சூட்டி இருக்கிறார்கள்.
அலோக்கனந்தா தாஸ் குப்தா ஒவ்வொரு முறை தனது சிதாரின் கம்பிகளை மீட்டும்போதும் கதைக்குள் ஒரு பாத்திரமாய் இசையைச் சேர்த்துவிடுகிறார். கண்ணை மூடிக் கொண்டு ஒரு முறை இந்தப் படத்தைப் பார்ப்பது ஓர் அற்புதமான இசையனுபவமாக வாய்க்கக்கூடும். கூச்சலோ, இரைச்சலோ இல்லாது காட்சிகளுக்கும், கதை நாயகர்களுக்கும் வலு சேர்க்கும் ஒப்பற்ற இசை பின்னணியில் விடாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
ஜப்யா மராத்திய கிராமமொன்றில் நீலவால் குருவியை விரட்டும் போதெல்லாம் அவரது இசை பார்வையாளனை அந்த மண்ணில் போட்டுப் புரட்டி எடுக்கிறது. பதின் பருவங்களின் நினைவுகளை மீட்டுகிறது.
படம் முழுவதுமே கிராமத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் செம்புழுதிக் காட்டையும், கருவேல மரங்களையும், குடிசையின் விளக்குகளையும் கூட சிற்பங்களைப் போல காட்சிப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் கலை இயக்குனர் சந்தோஷ் சங்காத். இவர்களைத் தவிர்த்து ஆடை வடிவமைப்பு மற்றும் படப்பிடிப்பு ஒலிக்குறிப்புகள் என்று ஒவ்வொரு கலைஞனும் முழு ஈடுபாட்டோடு இந்தப் படத்தில் பங்காற்றி இருக்கிறார்கள்.
சோம்நாத் ஆவ்கடே என்கிற அந்தச் சிறுவன் அனேகமாக ஜப்யாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெளியேறுவது மிகக் கடினமான ஒன்றாக இருக்கக்கூடும். ஷாலுவாக நடித்திருக்கும் ராஜேஸ்வரி காரத் பெரிதாக நடிக்கிற வாய்ப்பில்லை என்றாலும் கிடைக்கிற இடங்களில் எல்லாம் ஒரு அருவியைப் போல மனங்களில் நிறைகிறார்.
படத்தின் மிக வலிமையான நாயகன் ஜப்யாவின் தந்தையாக வாழ்ந்திருக்கும் கிஷோர் கதம் (கச்ரு மனே), இந்தியக் கிராமங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் அத்தனை பேரின் முகக் குறிப்புகளையும் ஒரு குறியீட்டைப் போல படம் நெடுகக் கொட்டி இருக்கிறார். அவருடைய உடல் மொழி அவர் நடிக்கிறார் என்பதை நாம் நம்பவே இயலாதபடி நம்மை ஊடுருவுகிறது.
தாயாக வாழ்ந்திருக்கும் சய்யா கதம் (நானி) அவ்வப்போது கிஷோர் கதமுக்குச் சவால் விடுக்கிறார். உரையாடல்கள் நிறைந்த செயற்கையான காதல் உணர்வுகளையே பார்த்துப் பழகிப்போன எந்த இந்தியத் திரைப்படப் பார்வையாளனும் நம்ப இயலாத ஒரு மெல்லிய கவிதையான பதின் பருவத்துக் காதலை உரையாடலே இல்லாத ஒரு புதிய கோணத்தில் வழங்குவதோடு மட்டுமன்றி அந்தக் காதலின் வாயிலாக வெகு இயல்பாக ஒடுக்கப்பட்ட மனிதனுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகளைச் சொல்கிறார்.
நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே
ஜப்யாவின் கனவுகளை அவனது காதலை ஒரு பிடிக்க இயலாத நீலவால் குருவியின் பறப்பைப் போலப் படிமமாக்கும் இயக்குனர் ஒருவேளை அப்படிப் பிடிக்க முடிந்தாலும் அது இறந்துபோய்விடுகிறது என்று நெருப்பில் போட்டுவிட்டுப் போய்விடுகிறார். ஜாதிப் படிநிலைகளைப் பாதுகாக்கும் இந்தியச் சமூகமெனும் நெருப்பு அணைக்க முடியாத பெருங்கனலாய் படம் முடிந்த பின்னும் எரிந்து கொண்டே இருக்கிறது. காதெலெனும் குருவி பிடிக்க இயலாத பறவையாகவோ, இறந்துபோன உடலாகவோ அந்த நெருப்பில் வீழ்ந்து கிடக்கிறது.
ஒடுக்கப்பட்ட மனிதனின் உடல் ஒவ்வொரு இந்தியக் கிராமத்தின் தெருக்களிலும் அடித்து நொறுக்கப்படுவதையும், கேலிக்கு ஆளாவதையும் ஒரு கவிஞனுக்கே உரிய உயர் குறியீட்டுக் காட்சிப் படிமங்களோடு நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே தனிப்பெரும் இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு இயக்குனரின் திறனை திரைப்படத்தை அவர் துவக்குகிற விதத்திலும், முடிக்கிற விதத்திலும் எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்று திரைப்படக் கலையை நன்கறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே கடைசிக் காட்சியில் இந்தச் சமூகத்தின் அவலமான ஜாதியின் மீதும், அதை உயர்த்திப் பிடிப்பவர்களின் தலைமீதும் ஒரு பாறாங்கல்லைத் தூக்கி எறிந்து திரையை இருட்டில் தள்ளுவார். என்னைக் கேட்டால் அந்தக் கடைசிக் காட்சியே வாழ்நாளில் பார்த்த மிகச் சிறந்த காட்சி என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்வேன்.
ஆக சிறந்த உலகமொழித் திரைப்படங்களின் தரத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாத பல காட்சிகள் படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. கட்டிய பன்றியின் பின்னணியில் தேசத்தலைவர்கள் காட்சிப் பொருளாக நிற்பதும், சிவந்த பன்னீர்ப் பூக்களின் கோணத்தில் நீண்டு கிடக்கும் கிராமச் சாலையில் பயணிக்கும் நண்பர்களின் மிதிவண்டி மெல்ல உங்கள் அருகில் வருவதும், பன்றியைத் துரத்தும் குடும்பத்தின் வாதையை அவர்களின் உடலோடு நின்று இளைப்பதுமாய் ஒளிப்பதிவாளரின் நெஞ்செல்லாம் நிறைந்திருக்கிறது கலை நுட்பம்.
முகக் குறிப்புகளாலும், உடல் மொழியாலும், இசையாலும் மனித உணர்வுகளை வெகுநுட்பமாக வெளிப்படுத்தும் ஒரு திரைப்படத்துக்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை என்று ஆணித்தரமாக நிறுவி இருக்கிறார் இயக்குனர்.
ஃபான்ட்ரி (Fandry) சமகாலத்தின் திரைப்படங்களில் மிக முக்கியமானது என்று சொல்லி அதன் தரத்தைத் தாழ்த்திவிட முடியாது. இதுதான் சமகாலத்தின் திரைப்படம். தனது தொழில்நுட்பத் திறனில் ஆகட்டும், திரைமொழிகளின் தீவிரத்தில் ஆகட்டும், கலை நுட்பத்தில் ஆகட்டும், சமூகக் கடமைகளில் ஆகட்டும் இந்தத் திரைப்படமும், இதனை இயக்கிய நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளேயும் தனியிடத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள்.
உயர் ஜாதிக் குறியீடுகளை மய்யமாக வைத்து திரும்பத் திரும்ப ஜாதிய அடையாளங்களை வாந்தி எடுக்கிற இந்தியத் திரைப்பட இயக்குனர்கள் பலரை இந்த ஒற்றைப் படத்தின் மூலம் நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே காலத்துக்கும் வெட்கித் தலை குனிய வைப்பதில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். ஃபான்ட்ரி திரைப்படம் குறித்துப் பேசுகிற ஒவ்வொரு பார்வையாளனும் பார்க்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகம்.