சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும்
மூடநம்பிக்கை 1: அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் : இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இதுதான் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. அதே போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்.
தாய்க்குத் தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சினைகள் பல. அதில் முக்கியப் பிரச்சினை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் (ஜூஸ், இளநீர், மோர், நீராகாரம் எதுவென்றாலும்) குடித்தால் போதும். குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கும்.
மூடநம்பிக்கை 2: குளுக்கோஸ் ஏறும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது: இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று யூகிப்பது எளிதுதான்.
அந்தக் காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழித் திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் அதிகம் நடைபெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல்புண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே.
எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. சிரைவழியாக திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்.
எனவே, சிரைவழித் திரவம் ஏற்றினாலே வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூடநம்பிக்கை வந்துவிட்டது.
ஆனால் இன்றோ, பல மருந்துப் பொருட்களும் சிரை வழியாக ஏற்றப்படுகின்றன.
அப்படி இருக்கும்போது, அதைக்கூட சிரை வழித் திரவம் என்று நினைத்துக்கொண்டு, தாயைப் பட்டினி போடும் புத்திசாலிகள் பலர் இருக்கிறார்கள்.
சிரைவழித் திரவங்கள் ஏறிக்கொண்டிருந் தாலும்கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்குப் பிறகு தாராளமாகத் தண்ணீர் குடிக்கலாம்.
மூடநம்பிக்கை 3: சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள்.
அதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பிவிடும். அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை.
மூடநம்பிக்கை 4: எல்லோருக்கும் இப்போது தண்டுவட ஊசிதான். யாருக்கும் பொது மயக்கம் அளிக்கப்படுவது இல்லை.
அப்படியெல்லாம் இல்லை. இப்பொழுதும் சிலருக்குப் பொது மயக்கம் அளிக்கப்படுகிறது. (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றைப் பொருத்து).
மூடநம்பிக்கை 5: சிசேரியன் செய்தால் தாய்ப்பாலின் அளவு குறைவாக இருக்கும்.
தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான்.
மூடநம்பிக்கை 6: சிசேரியன் செய்தால் தாய்ப்பால் சீக்கிரம் வற்றிவிடும்.
தாய்ப்பால் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பால் சுரப்பது என்பது ஒன்றுதான். பால் சுரக்கும் அளவிலோ வேறுபாடு இல்லை, அளிக்கப்படும் நாட்களிலோ வேறுபாடு இல்லையென்றால் சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் தொடர்பே கிடையாதா?
இல்லை ஒரு தொடர்பு உள்ளது.
சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்கத் தேவையான ஆக்ஸிடோசின் இரத்தத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்துவிடும்.
அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்புக் காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்துவிடும்.
ஆனால் இந்த வித்தியாசம் Initiation தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது.
அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? குழந்தை பிறந்த உடன் குழந்தைக்குத் தாய்ப்பால் தர வேண்டும்.
மூடநம்பிக்கை 7: ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த முறை கட்டாயம் சிசேரியன்தான்.
பலவகைக் காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது. இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. எனவே, அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இதில் பொது விதி கிடையாது.
மூடநம்பிக்கை 8: சிசேரியன் செய்தால் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியாக இருப்பர்!!
இதை யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாகக் கூறப்படுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் இதுவரை இதை யாரும் மறுத்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவில்லை.
– மருத்துவர் மரியானோ ஆண்டோ புருனோ மஸ்கரனஸ்
(முகநூலிலிருந்து)
ஜனன நேரம் ஆல்டர் செய்து தரப்படும்!
சிசேரியன் அறுவைசிகிச்சையை ஒட்டிய மூடநம்பிக்கைகளையும் அதற்கான விளக்கத்தையும் படித்திருப்பீர்கள். ஆனால், குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துக் கொண்டிருந்த மூடர்கள் இப்போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து ஜனன நேரத்தை ஆல்டர் செய்துகொள்வதற்கும் தயாராகிவிட்டார்கள் என்பதை அண்மைக்காலமாகக் காண முடிகிறது. இதோ இங்கு நீங்கள் காண்பது கும்ப கோணம் தாலுகா, பட்டீஸ் வரத்தைச் சேர்ந்த கண்ணன் அய்யர் என்பவர் குழந்தையை எடுப் பதற்கான அறுவைச் சிகிச்சை செய்ய நேரம் குறித்துக் கொடுத்துள்ள ப்ரிஸ்க்ரிப்சன் பேப்பர்.
நிகழும் விஜய வருஷம் பங்குனி மாசம் 2-ஆம் தேதி 16.3.14 ஞாயிற்றுக்கிழமை பூர நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் காலை மணி 9.30க்கு மேல் 10.15க்குள் ரிஷப லக்னத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க நாள் உத்தமம்.
சுபம் பெரிதும் படித்த பாமரர்களும், பணக்காரர்களும் தான், குழந்தை இயல்பாகப் பிறக்க வேண்டிய நேரம் அல்லது தாய்க்கு வலி எடுக்கும் நேரத்திற்கு முன்பே, மருத்துவர்களின் யோசனைக்கு மாறாக, ஜோதிடர்களின் யோசனைப்படி காசு கொடுத்து மருத்துவர்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதையும் கேட்கும் போது இந்த மூடத்தனத்தின் மீதான உங்களின் கோபம் பன்மடங்கு ஆகலாம். அதற்கு கண்ணன் அய்யர் ஜவாப்தாரியல்ல!