Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள்

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

கேள்வி : இயக்கத்தின் தொடக்க காலத்தில் முழு வீச்சுடன் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்ததுபோல இந்தத் தலைமுறையை ஈர்க்க அதே பாணியைச் செய்யவேண்டிய அவசியம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன். இதுகுறித்த தங்கள் கருத்து? – அ.கிருபானந்தம், ஆரல்வாய்மொழி

பதில் : ஆம்; நீங்கள் சொல்வதை 100க்கு 100 ஒப்புக் கொள்ளுகிறோம்; புதிய தலைமுறைக்கு, பழைய தலைமுறையின் கொடுமைகளைச் சரியாக நினைவூட்டி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தால்தான் வரும் தலைமுறை பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்!

கேள்வி : முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பு பற்றி பொதுநிகழ்ச்சி ஒன்றில் அத்தீர்ப்பை வழங்க உள்ள நீதிபதியே செய்தியாளர்களிடம் கூறுவது சட்டப்படி சரியானதுதானா?- ஆர்.திவ்யா, பந்தல்குடி

பதில் : பொதுவாக நீதிபதிகள் _ பொதுத் தலைவர்கள், அரசியல்வாதிகளைப் போல பத்திரிகையாளர் பேட்டிகள், கேள்விகளுக்குப் பதிலளித்தல் போன்ற, மலிவான விளம்பர ஆசைகளுக்குப் பலியாதல் கூடாது; அந்த இடத்தின் உயர்நிலை தாழ்த்தப்படக்கூடும் அத்தகைய நடவடிக்கைகளால். நீதிமன்ற அறிவிப்புகளை பொது நிகழ்வில் பேசுவது நல்ல மரபல்ல.

கேள்வி : பிரித்தாளும் அரசியலைவிட தோல்வியைச் சந்திக்கத் தயார் என்ற மோடியின் கூற்று எதைக் காட்டுகிறது? – கோ.பிரியா, கும்மிடிப்பூண்டி

பதில் : ஓநாய் சைவத்தின் பெருமையைப் பேசும் விசித்திரம் அது!

கேள்வி : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்த சில நகைகளுக்குப் பதிலாக தகடுகள் பதித்த போலி நகைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற புகார் கிளம்பியுள்ளதே? – ம.தனபாலன், சாத்தான்குளம்

பதில் : இதுபற்றி இந்த இதழின் முதன்மைக் கட்டுரையில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. அதைப் படியுங்கள். கடவுள் காப்பார் என்று கூறுவது கடைந்தெடுத்த அறியாமை என்பது இப்போதாவது புரிய வேண்டாமா?

தனது சொத்துக்களையே காத்துக் கொள்ள முடியாத எல்லாம் வல்லவர் உங்களையும் உலகத்தையும் எப்படிக் காப்பார்?

கேள்வி : சமச்சீர் கல்வித் திட்டத்தின் இன்னொரு விளைவாக தனியார் கல்வி முதலாளிகள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்குச் சென்றுவிட்டார்களே? இதைத் தடுக்க முடியாதா? _ பெ.எழிலன், சென்னை

பதில் : உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளதே _ கல்வி முதலாளிகளுக்கு இருக்கும் நோக்கம் எதை எதை வைத்து கொள்ளை லாபம் அடிப்பது என்பதில் உள்ள கவலைதானே!

கேள்வி : என்னைக் கொல்ல சதி நடக்கிறது. அப்படியே கொன்றாலும் மக்கள் மத்தியில் மறுபிறவி எடுப்பேன் என்று கூறியுள்ள மம்தா பற்றி?
_ சு.அறிவொளி, திண்டுக்கல்

பதில் : நம்மூர் அம்மாவுக்கு அக்காவான அவர் இப்படிப் பேசுவது அதிசயமல்லவே. இரண்டு அக்கிரகாரத்துக் குரல்களும் இப்படித்தான் பேசிப் பழக்கப்பட்டவர்கள்!

கேள்வி : ஆழ்துளைக் கிணறுகளுக்குள் விழுந்து பலியாகும் குழந்தைகளைக் காக்க வழியே இல்லையா? – ந.செல்வன், கோவை

பதில் : பகவான் கொடுக்கிறான் என்று வதவதவென்று குழந்தை பெற்று கவலைப்படாது வளர்ப்பதில் காட்டும் அலட்சியத்தைத் தடை செய்தால் அப்படி நிகழ்வுகள் நடக்காதே!  ஆழ்துளைக் கிணறு தோண்டுவோரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதுடன், எச்சரிக்கையுடன் அந்தத் துளையை மூட வேண்டும். இதனை அரசின் தொடர்புடைய அலுவலகம் கண்காணித்திட வேண்டும்.

கேள்வி : குஜராத் கலவரத்துக்காக மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. நான் குற்றம் செய்திருந்தால் தெருமுனையில் தூக்கிலிடுங்கள் என்ற மோடியின் பேச்சு?
_ ப.அன்பழகன், துவரங்குறிச்சி

பதில் : அதெப்படி, பல காலம் கழித்து மக்கள் நடத்துவார்களோ என்ற அச்சம் மோடியின் திருவாய் மூலம் வெளி வந்துள்ளது?

கேள்வி : தான் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக சிலர் தனது அடிப்படைக் கொள்கைகளையே துறப்பதற்குத் தயாராக இருக்கிறார்களே?
_சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : தவறுங்க… அப்படியெல்லாம் இல்லிங்க… அடிப்படையில் கொள்கை அவர்களுக்கு இருந்தால் அல்லவா அவர்களால் துறக்க முடியும்? என்னங்க… புரிகிறதா…?

கேள்வி : பி.ஜே.பி., அ.தி.மு.க. இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நாடகத்தின் உச்சக்கட்டம் எப்படி முடியும்? _ கோ.நளினி, பெரியார் நகர்

பதில் : ஜூன் முதல் வாரத்தில், இருவரது அரிதாரமும் கலையும் காட்சியை நாடு காணத்தான் போகிறது!