இந்த ஆண்டு எங்கே போவது? சாக்ரடீஸ் கண்ணில் பட்டுவிடக் கூடாது. எப்போது பார்த்தாலும் கிரேக்கம் போ என்பார். எனக்கு மிகவும் பிடித்தது ருஷ்யாதான். ருஷ்யாதான் உடைந்துவிட்டதே என்கிறீர்களா?
கல் எத்தனையாக உடைந்தாலும் கல் கல்தானே! மண்ணாகப் போயிருக்கவேண்டிய ருஷ்யா, மண்ணாகாமல் சிறிய கல்லாக மட்டும் குறுகிக்கொண்டதற்கு கம்யூனிசம்தான் காரணம் என நினைக்கிறேன். அமெரிக்கர்கள் தொட்டதற்கெல்லாம் இரண்டு விஷயங்களைக் காரணம் சொல்வார்கள். ஒன்று கம்யூனிசம். மற்றொன்று அரேபியர்கள்.
புதின் பிரச்சினை சூடுபிடித்திருக்கும் வேளையில் நான் ருஷ்யா செல்வது என் மனதுக்கு நல்லதாக இருக்காது. உலகின் எங்காவது ஒரு மூலையிலேனும் கம்யூனிசம் கொஞ்சமேனும் நிலைபெற்றிருக்கிறதா எனப் பார்க்கும் என் ஆவல் ருஷ்யா போகும் மட்டும்தான் கொஞ்சமே கொஞ்சமாக நிறைவேறுகிறது.
இந்தமுறை அங்கேயும் கலவரமாக இருப்பதால் அந்த ஆசையையும் நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நேற்று மாலை உலாவிக்கொண்டிருந்த போது ஒரு பெரியவரைச் சந்தித்தேன். எங்களை இங்கே பாதுகாத்து வைத்திருக்கும் இயற்கைக்கு மிகவும் பிடித்த பெரியவர் அவர். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அரிஸ்டாட்டிலுக்கும், சாக்ரடீசுக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் அவர். அவரைப் பார்ப்பதென்றால் என்னைப் போன்ற பல பெரிய பெரிய ஆட்களே பதறுவார்கள். ஆனால் எனக்கு வேற வழி இல்லை. இந்த ஆண்டு சுற்றுலாவிற்கு எங்கே போவது என அவரிடம் தான் கேட்க வேண்டும்.
சாக்ரடீஸ் புண்ணியத்தில் அவரைச் சந்திக்க முடிந்து கேட்டதற்கு, தமிழ்நாட்டுக்குப் போ. அங்கே கம்யூனிஸ்ட்னு யாருமே கிடையாது. ஆனா கம்யூனிசம் இருக்கும் எனச் சொன்னார். என்னடா இந்தாள் குழப்புகிறாரே எனத் தோன்றினாலும் தமிழ்நாட்டுக்குப் போக முடிவு செய்துவிட்டேன். ஓ… உங்களுக்குத் தமிழ்நாடு என்றால் எது எனத் தெரியாதல்லவா? அது ஒருகாலத்தில் தனி அரசாக இருந்த நாடு. கிரேக்க, எகிப்தியப் பாரம்பரியங்களையெல்லாம் ஒத்த பழம்பெரும் இனமாக தமிழினத்தைச் சொல்கிறார்கள். ஆனால் இப்போது இந்தியா எனும் ஒரு நாட்டின் பகுதியாக சிறுத்துக் கிடக்கிறது. அதைப்பற்றி அந்த இன மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அலட்டுவதைப் போல் நடிப்பவர்கள் அங்கே அதிகம் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இறங்கியதில் இருந்து ஒரே குழப்பம். அங்கங்கே கொடி கட்டிக் கத்திக்கொண் டிருந்தார்கள். பிறகு சிகப்புச்சட்டையணிந்த கருப்புத்தோல்காரர் ஒருவர் யாருமே இல்லாத ஒரு சிறிய கூடாரத்தில் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவரிடம் விவரம் கேட்கச் சென்றேன். அவர் கூடாரத்தில் அரிவாள், சுத்தியல் இருந்தது. அட… பெரியவர் கம்யூனிஸ்ட் யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்றாரே! இங்கே ஒருவர் இருக்கிறாரே என மகிழ்ச்சி எனக்கு. என்ன இது அங்கங்கே கத்துகிறார்களே? எனக் கேட்டதற்கு தேர்தல் நேரம். அதான். எங்களைத்தான் தனியாக விட்டுவிட்டார்கள் என வருத்தமாகச் சொன்னார். என்னைத் தெரிகிறதா? எனக் கேட்டேன். எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா ஞாபகம் இல்லையே என்றார் அந்தக் கருந்தோல்காரர். ஞாபகம் இருந்திருந்தாதான் தனியா இருந்திருக்க மாட்டீங்களே என மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
தமிழ்நாட்ல பெரிய கட்சிகள் எல்லாம் என்ன கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்? என்றேன். திராவிடம் தான் இங்கே அதிகமாக விற்பனையாகும் கொள்கை. திராவிடம் என்றால் என்ன? என்றதற்கு, எனக்கு அதைப்பற்றி அவ்வளவாகத் தெரியாது. வேறு யாரையாவது கேளுங்கள். எனக்கு போயஸ் தோட்டத்தில் வாட்ச்மேன் வேலைக்கு நேரமாகிவிட்டது எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். கம்யூனிச கூடாரம் காலியாக இருந்ததை வருத்தமாகப் பார்த்தபடியே நகர்ந்தேன்.
கொஞ்ச தூரத்தில் கருப்பு, சிகப்பு, வெள்ளைக் கலரில் ஒரு கூடாரம் இருந்தது. அங்கே பெருங்கூட்டம். எல்லோரும் தரையோடு தரையாக இருந்தார்கள். என்ன ஏது எனக் கேட்கும் முன் பெரிதாக மீசை வைத்த ஒருவன் என்னையும் தரையில் அமுக்கினான். அம்மா வர்றாங்க. என்னய்யா நிக்கிற? படு படு என தரையில் நசுக்கினான். இவன் அம்மாவுக்கு நான் ஏன் மரியாதை கொடுக்கவேண்டும் என படுத்துக்கொண்டே யோசித்தேன். நீண்ட நேரத்துக்கு யாருமே வரவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு ஹெலிகாப்டர் மேலே வானத்தில் பறந்து சென்றது. எல்லோரும் அம்மா… அம்மா எனக் கத்திக்கொண்டு கையெடுத்துத் தொழுதார்கள். எனக்கு எதுவுமே புரியாமல் முகத்தில் ஒட்டியிருந்த மணலைத் துடைத்துக்கொண்டு எழுந்து மேலும் நடந்தேன்.
கடைசியாக கருப்பு சிகப்பில் ஒரு கூடாரம் இருந்தது. அங்கேயும் பெருங்கூட்டம். வந்தது வந்தோம். இங்கேயும் போய் என்னவெனப் பார்ப்போம் என முடிவு செய்துகொண்டு உள்ளே நுழைந்தேன். பலபேர் கருப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் அடையாளங்கண்டுகொண்டு அய்யா நீங்களா? அய்யா நீங்களா? என ஆச்சரியத்தோடு மரியாதை செய்தார்கள். நடுவில் சக்கர நாற்காலியில் மிகவும் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரும் தன்னால் முடிந்தவரை தன் நாற்காலியில் இருந்து எழ முயற்சித்து தன் இருகைகளைக் கூப்பி வணங்கினார். சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். எங்கேயும் சுத்தியலையோ, கதிரையோ, அரிவாளையோ காணவில்லை. அங்கங்கே சூரியன் படம் மட்டும் இருந்தது. பெரியவர் கிளம்பியபின் அங்கே இருந்த ஒரு கருப்புச் சட்டைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
உங்கள் கொள்கை என்ன? என்றேன்.
திராவிடக் கொள்கை என்றார் பெருமையாக.
அப்படின்னா?
அப்படின்னா… நான் ஒரு கேள்வி கேக்குறேன். உங்க கொள்கை கம்யூனிசம் என்ன சொல்லுது?
யாருடா இவன்? நம்மிடமே கேள்வி கேட்கிறானே என எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் என்னதான் சொல்கிறான் பார்ப்போமே என பதில் சொன்னேன், எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது. பணக்காரங்க, ஏழைங்க,- முதலாளிகள், தொழிலாளிகள்னு பேதம் இருக்கக் கூடாது, அப்படிங்குறதுதான் கம்யூனிசக் கொள்கை என்றேன்.
அவன் உடனே சொன்னான், திராவிடக் கொள்கையும் பேதமில்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான்.
அப்படியென்றால் அதுவும் பொதுவுடைமை தானே? என்றேன்.
ஆமாம். ஆனால் கம்யூனிசத்தைவிட திராவிடக் கொள்கை சந்தித்த சிக்கல்கள் அதிகம். உங்கள் நாட்டில் ஏற்றத்தாழ்வு பணத்தால் மட்டுமல்ல, பிறப்பாலும் என்றால் எதை எதிர்த்து முதலில் போராடியிருப்பீர்கள்? என்றான் அவன்.
என்னடா இவன்? நாம் இவனைக் கேள்வி கேட்டால் இவன் நம்மைக் கேட்கிறானே என எண்ணிக்கொண்டே பிறப்பால் ஏற்றத்தாழ்வு எங்கே அப்பா இருக்கிறது? அப்படி இருந்தால் அதைவிட ஒரு கொடுமை இருக்காது. அதை ஒழிக்கத்தான் முதலில் போராடியிருப்பேன்.
அவன் முகம் மலர்ந்தது. அதைத்தான் திராவிடம் செய்தது. இங்கே பணமுள்ளவர்கள்தான் முதலாளிகள் என்ற கொடுமை இருந்தால்கூட பரவாயில்லை. இங்கே இந்த ஜாதிதான் முதலாளிகளாக இருக்க வேண்டும், இந்த ஜாதிதான் மதிக்கப்பட வேண்டும், இந்த ஜாதிதான் கூலிவேலை செய்ய வேண்டும் என ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் எழுதி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரு சூத்திரன் பணக்காரனாய் இருந்தாலும்கூட ஒரு பார்ப்பனனுக்கு அவன் தாழ்ந்தவன்தான். அவனுக்கு படிப்பு முதல் வழிபாட்டு உரிமை வரை அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தது. அதைத் தகர்த்தெறிந்து வாழ்வுரிமையைப் பொதுவுடைமை ஆக்கியது எங்கள் திராவிடக் கொள்கைதான்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இப்படிக்கூடவா ஒரு நாடு இருக்கும்? இப்படியெல்லாமா எழுதி வைத்திருப்பார்கள்? ஒருமுறை நீட்சேவோடு பேசிக்கொண்டிருந்தபோது ஆரியர்கள் எழுதிய மனுதர்மம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் ஆரியர்களை சூப்பர்மேன் போலவும், மற்றவர்களை அவர்களுக்கு ஏவல் வேலை செய்யும் அடிமைகளாகவும் எழுதியிருப்பார்களாம். அந்தப் புத்தகத்தை உண்மையில் பின்பற்றும் நாடாகவா இந்தியா இருக்கிறது? அவ்வளவு முட்டாள்களா இவர்கள்? என்றெல்லாம் எனக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடியது. ஏனப்பா? சமநிலையை உண்டாக்கிவிட்டீர்களா? அல்லது எங்கள் பொதுவுடைமை போல அது பாதிதான் ஜெயித்ததா?
இன்னும் முழு சமநிலையை எட்டவில்லை, நீதிக்கட்சி தொடங்கி இன்று எங்கள் கட்சிவரை முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களால் நிலைமை ஓரளவிற்குச் சீராகியுள்ளது. இட ஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் நானெல்லாம் உங்களிடம் இப்படிப் பேசிக்கொண்டிருக்கவே மாட்டேன். என் ஜாதிக்கான இலக்கணப்படி நான் எங்காவது செருப்புத் தைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் கொடுமை என்னவென்றால் இடஒதுக்கீட்டின் மூலம் படித்தவர்களே இன்று இடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பனர்களுடன் கைகோர்த்து நிற்பதுதான். தான் ஏறிவிட்டால், அடுத்தவன் ஏறிவரும் ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் திராவிட இனத்திற்கும் தொற்றிவிட்டது
ஓஹோ… கல்வியுமா மறுக்கப்பட்டது?
ஆமாம். மெக்காலே என்றொருவர் இல்லையென்றால் நாங்கள் கல்விவாடையைக் கூட பிடித்திருக்க முடியாது. இங்கே வெள்ளைக்காரர்களுக்கு வேலை செய்ய போதிய அளவிற்குப் படித்தவர்கள் கிடைக்கவில்லை. படித்த பார்ப்பனர்கள் பாதிநாள் பூஜை புனஸ்காரத்தில் பொழுதைப் போக்கி திமிர்த்தனம் செய்தபோது பிரிட்டிஷ் அரசு மற்ற ஜாதியினரையும் படிக்க வைத்தால்தான் நிலைமை இந்தியாவில் சரியாகும் என முடிவு செய்து மெக்காலே அவர்களை அனுப்பியது.
அவர்கள்தான் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடிந்த குருகுலக் கல்வியிலிருந்து எங்களைக் காப்பாற்றினார். அவரை எங்கள் ஊரின் பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது! ஹா ஹா ஹா! அவர் பேரைச் சொன்னாலே வேப்பங்காயாய் முகம் சுழிப்பார்கள். இதில் கொடுமை என்னவென்றால், என்னைப் போன்ற திராவிடர்கள் பலரும்கூட பார்ப்பனர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்றலைகிறார்கள் என்றான் சோகமாக!
கல்வியின் நிலை இன்று எவ்வாறுள்ளது? என ஆவல் மிகுதியில் கேட்டேன்.
மெக்காலேவில் தொடங்கி இன்று எங்கள் தலைவர் கொண்டுவந்த சமச்சீர் கல்வி வரை எங்களின் போராட்டம் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அனைவரும் சமச்சீரான கல்வி பெற, கல்வியிலும் பொதுவுடைமை வெற்றிபெற பல திராவிடர்களே தடையாய் இருப்பதுதான் பெருங்கவலை! வரும்போது பார்த்திருப்பீர்களே?
ஆமாம். பெரிய மீசை வைத்திருந்த பலர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஹெலிகாப்டரை வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் சொல்கிறாயா?
ஆமாம். அவர்கள் எல்லாம் ஆதிக்க ஜாதிக்காரர்கள். சக மனிதனை ஜாதியின் பேரால் கேவலமாக நடத்துவார்கள். ஆனால் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருப்பது அவர்களுக்குச் சுகமான ஒன்று. அதே ஹெலிகாப்டரில் ஒரு சூத்திரப் பெண் போனால் இப்படிக் கும்பிடுவார்களா என்ன? ஆதிக்கம், ஆண்ட பரம்பரைப் பெருமை எல்லாம் ஆரியத்தோலின் முன் செல்லாது அவர்களுக்கு!
என்னப்பா இது? இவ்வளவு சிக்கல் இருக்கிறது? இதையெல்லாம் மீறியா நீங்கள் ஜெயித்தீர்கள்?
ஆம். முதலில் சமூகப் பொதுவுடைமை ஏற்பட்டு, வாழ்வுரிமை எல்லோருக்கும் ஒன்றுதான் என்ற நிலை ஏற்பட்டால்தான் அடுத்து பொருளாதாரப் பொதுவுடைமையை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதுதான் எங்கள் தீர்க்கமான கொள்கை. ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இந்த நாட்டில் நிறைவேற்ற முடியவில்லை. எல்லோரும் சமம் எனச் சொல்லும் இந்தியா, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறதென்றால் இந்த நாட்டில் நீதி என்ன லட்சணம் என்பதைப் பாருங்கள்.
பொதுவுடைமைக்கு ஒரே எதிரிதான். முதலாளிகள்! ஆனால் உங்களுக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்களே! இவர்களையெல்லாம் வென்று இன்றைக்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்றால் பெரிய விஷயம்தான். ஆமாம் உங்கள் தலைவர்கள் யார்?
டி.எம்.நாயர், நடேசன், பொப்பிலி ராஜா, தியாகராயர், பி.டி.ராஜன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எனப் பலர் உண்டு. 1969லிருந்து இன்றுவரை எங்களுக்குத் தலைவராக இருந்து, திராவிடக் கொள்கைகளுக்கு இழுக்கு வந்தபோதெல்லாம் காப்பவர் எங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி. சற்றுமுன் சக்கரநாற்காலியில் பார்த்தீர்களே அவர்தான்.
அவரா? அவர் ஏன் ஹெலிகாப்டர் பயன்படுத்தாமல் ஊர்தியில் செல்கிறார்?
அவர் பயன்படுத்த மாட்டார். நெடுந்தூரப் பயணங்களைக்கூட ரயிலில்தான் மேற்கொள்வார். அதனால்தானோ என்னவோ பலருக்கு அவரைப் பார்த்தால் இளக்காரமாக இருக்கிறது! மகாராணியைப் போல் மக்கள் பணத்தில் வலம்வருகிறவர்களை மதிக்கும் போதாத காலம் தானே இது! சொல்லும்போதே அவன் கண்களில் நீர் துளிர்த்தது.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே ஓர் இளம்தலைவர் சுறுசுறுப்பாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் அங்கே இருந்த இளைஞர்கள் எல்லாம் உற்சாகத்தில் துள்ளினார்கள். யாரப்பா அது? என்றேன். அவர்தான் எங்கள் திராவிட இயக்கத்தை அடுத்ததாக வழிநடத்தப்போகிறவர். ஊடகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆடும் பெரிய பெரிய கோலியாத்களை உண்மை என்ற சிறிய கல்லைக் கொண்டு வீழ்த்தப்போகும் டேவிட்! எனச் சொல்லும்போது அவன் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம்.
அவர் பெயர் என்னப்பா?
ஸ்டாலின். அவர் பெயர் மு.க.ஸ்டாலின்.
எனக்குப் பேச்சே வரவில்லை. திராவிட இயக்கத்தை ஸ்டாலின் வழிநடத்தப் போகிறார். கம்யூனிசத்தின் முகவரி, திராவிட இயக்கத்தின் தலைமைக்குப் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் இருந்த பெரியவரை ஒருமுறை மனதில் நினைத்துக் கொண்டேன். மேலே கேட்க எனக்கு ஒன்றும் கேள்வி இல்லை. ருஷ்யா உடையாமல், அங்கே கம்யூனிசம் பீடுநடை போட்டிருந்தாலும் எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்காது. தமிழகத்திலே கம்யூனிசத்திற்கு கம்பீரமான கருப்புப் போர்வை போர்த்தி அத்தத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் திராவிட இயக்கத்தினர்.
இவ்வளவு நேரம் பேசினாயே. என் பெயர் உனக்குத் தெரியுமா தம்பி?
என்னய்யா இப்படிக் கேட்டுட்டீங்க? உங்க கட்சிக்காரங்களைவிட எங்களுக்குத்தான் உங்களை நல்லாத் தெரியும். நீங்கள் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்!
எனக்குப் புல்லரித்தது. தம்பி எனக்கொரு கருப்புச்சட்டை கொடுக்கிறாயா?
எதற்கய்யா?
உலகிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பொதுவுடைமைத் தத்துவம் சமூக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. உங்கள் ஊரைப் பொறுத்தவரை கம்யூனிசத்தின் நிறம் கருப்பு! அதையே இனி அணிந்துகொள்கிறேன் எனச் சொல்லி கருப்புச்சட்டைக்கு மாறினேன்.
என்னை ஏன் அந்தப் பெரியவர் இங்கே அனுப்பினார் எனப் புரிந்துகொண்டேன். அந்தப் பெரியவரின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேனே! அவர் பெயர் ஈ.வெ.ராமசாமி. அவரைப் பார்க்கும் போது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்!
Leave a Reply