Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மாயமான மலேசிய விமானம்: மந்திரவாதியும், பெர்முடா முக்கோணப் புதிரும்!

– ப.ரகுமான்

14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பேரண்டம் ஒரு புள்ளியாக இருந்தது. இருப்பவை அனைத்தும் அந்த ஒற்றைப் புள்ளியில் திணிந்திருந்தன.

ஒரு பெருவெடிப்பில் அந்தப் புள்ளி விரிந்து உருவானதுதான், இன்று நாம் வாழும் வெளி-கால அரங்கம்.

பிரபஞ்சத்தின் புதிர்கள் ஏராளம். ஏன், இந்தப் பிரபஞ்சமே ஒரு புதிர்தான். அதன் முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கிவிட்டான் மனிதன் என்பதன் அடையாளம்தான் இந்தப் பெருவெடிப்புக் கொள்கை. உண்மையில், பிரபஞ்சப் புதிரின் முடிச்சுகளை அவிழக்கத் தொடங்கிவிட்டானா மனிதன்? ஆம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். பெருவெடிப்பு விட்டுச் சென்ற சுவடுகளைக் கண்டுபிடித்திருக்கிறது ஒரு வானியல் தொலைநோக்கி. பெருவெடிப்பு நிகழ்ந்தவுடன்  பேரண்டம் உப்பிப் பெருத்ததை உறுதி செய்கிறது, அந்தச் சுவடுகள். பேரண்டம் ஏன் தொடர்ந்து விரிவடைந்து செல்கிறது என்பதை பெருவெடிப்புக் கொள்கை விளக்குகிறது என்றால், நோக்கியறியத்தக்க பேரண்டம் முழுமையும் ஏன் எத்திசையிலும் ஒரே சீராக இருக்கிறது என்பதை விளக்குகிறது, உப்பல் கொள்கை.

14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பேரண்டம் பிறந்ததால் உருவான பிரசவக் கோடுகளை அறிவியலால் கண்டறிய முடிந்திருக்கிறது.

ஆனால், 239 உயிர்களுடன் திடீரென மறைந்த ஒரு அலுமினியப் பறவையின் சுவடுகளைக் கண்டறிவதற்குள் திக்கித் திணறுகிறது தொழில்நுட்பம்…

எத்தகைய முரண்மெய் இது…?

எத்தனையோ முரண்சுவைகளில் இதுவும் ஒன்று என கடந்து செல்ல முடியாமல் தடுக்கிறது. 239 மனித உயிர்களின் கதி… அதிலிருந்து விளையும் அவலம்தான், மந்திரவாதியிலிருந்து பெர்முடா முக்கோணப் புதிர் வரை அடைக்கலம் தேடி அனைவரையும் அலைக்கழிக்கிறது…

உண்மைக் கதை….!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, மார்ச் 8ஆம் தேதி, 239 பேருடன் (227 பயணிகள்+12 விமான ஊழியர்கள்) நள்ளிரவுக்குப் பிறகு 12.41 மணிக்குப் புறப்பட்டது, எம்எச் 370 எனும் பெயர்கொண்ட, போயிங்-777 ரக விமானம். பயணிகளில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமானோர், 154 பேர் சீனர்கள். 5 இந்தியர்களும் இருந்தனர். சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இருந்தார். அந்த விமானம் அன்று காலை 6.30 மணிக்கு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால் 1.40 மணிக்கு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராடார்  கருவியின் கண்காணிப்பில் இருந்தும் விமானம் மறைந்துவிட்டது. 35 ஆயிரம் அடி உயரத்தில் வியத்நாம் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தபோது இது நடந்துள்ளது. உடனடியாக விமானம் விபத்துக்குள்ளாகி வியத்நாம் அருகே தென்சீனக் கடலில் விழுந்துவிட்டதாகவும், பயணிகள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஊடகங்கள் அலறின. ஆனால் அடுத்தடுத்து வந்த செய்திகள், அது வழக்கமானதொரு, துயரார்ந்த விமான விபத்து என்ற எண்ணத்திற்கு முடிவு கட்டும் வகையிலேயே அமைந்தன.

தென்சீனக் கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடைக்கவில்லை. அதன் பிறகு, மலேசியக் கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, மலாக்கா நீரிணைப் பகுதியில் விமானம் விழுந்துகிடப்பதாகக் கூறப்பட்டது. மலாக்கா நீரிணை என்பது விமானம் சென்ற பாதைக்கு எதிர்த்திசையில் அமைந்துள்ளது. எனவே விமானம் செல்ல வேண்டிய பாதையிலிருந்து திருப்பப்பட்டு மலாக்கா நீரிணைக்குச் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்தது. அங்கும் விமானம் கிடைக்கவில்லை என்றவுடன், அப்படியே மேற்குநோக்கி நகர்ந்து அந்தமான் கடலில் விழுந்திருக்கிறதா எனத் தேடத் தொடங்கினார்கள். தென்சீனக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும் விமான வேட்டை தொடர்ந்தது.

26 நாடுகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், செயற்கைக் கோள்கள் சகிதமாக, மாபெரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. 40 நாட்களுக்கு மேலாகியும் ஒரு துரும்பைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கு நடுவே, விமானத்தின் தகவல் தொடர்பு முறைகள் திட்டமிட்டே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன, விமானம் ராடாரில் இருந்து மறைந்ததன் பிறகு 5 மணி நேரம் கழித்து விமானத்தில் இருந்து சமிக்ஞைகள் பெறப்பட்டதாக பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்தது, விமானம் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என வல்லுநர்கள் கோடிட்டுக் காட்டியது ஆகிய 3 விஷயங்கள் மர்மத்தை அதிகரித்தன.

செயற்கைக்கோள் அடிப்படையிலான புதிய தகவல்களின்படி, தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைக் கடப்பதற்குச் சற்று முன்னதாக, விமானத்தின் தகவல்தொடர்பு முறைகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்பதை எங்களால் உறுதியாகக் கூறமுடியும். அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், மலேசிய _ -வியத்நாம் எல்லைக்கு நடுவே விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் (வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் விமானத்தை அடையாளம் காண்பதற்கும், அதன் தடம்பற்றுவதற்கும் பயன்படும் ரேடியோ அலைக் கருவி) அணைக்கப்பட்டிருக்கிறது. மலேசிய விமானப் படை ராடாரிலிருந்து கிடைத்த தரவுகள் காட்டுவதன்படி, விமானம் மேற்குநோக்கி தீபகற்ப மலேசியாவை நோக்கித் திரும்பி, அதன் பிறகு வடமேற்காகச் சென்றுள்ளது. விமானத்திலிருந்த யாரோ ஒருவர் திட்டமிட்டு நடத்திய செயல்கள் போல இவை உள்ளன என அறிவித்தார், மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்.

இதைத் தொடர்ந்து, நாளொரு தகவலும் பொழுதொரு ஊகங்களுமாக ஊடகங்கள் பரபரப்புக்குத் தீனிபோட்டன. மாயமான விமானத்தின் விமானி ஜகாரி அகமது ஷாவின் வீட்டிலிருந்த கணினி அமைப்பில், சில நாள்களுக்கு முன்பு விமான வெள்ளோட்ட (சிமுலேட்டர்) மென்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் இந்தியா மற்றும் மாலத்தீவு, இலங்கை, டீகோ கார்சியா தீவுகளில் உள்ள 1000 மீட்டர் நீளம் கொண்ட விமான நிலைய ஓடுபாதைகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிமுலேட்டரில் சில முக்கியத் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்தத் தகவல்களை மீட்டெடுக்க கணினி நிபுணர்களின் உதவி நாடப்பட்டுள்ளது. விமானி ஜகாரி அகமது ஷா மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமின் உறவினர் மற்றும் தீவிர ஆதரவாளர் ஆவார். அண்மையில் அன்வர் இப்ராகிமுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் பழிவாங்கும் வகையில் விமானத்தை அவர் கடத்தினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றது ஒரு செய்தி.

மலேசிய ராணுவ ராடார்களில் இருந்து தப்பிக்க மலைப் பிரதேசங்களில் விமானம் பறந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அந்த நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மலேசியாவின் வடபகுதி மலைப் பிரதேசங்கள் வழியாக விமானம் பறந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. அந்தப் பகுதியில் குணங் டகான் (2286 மீட்டர்), குணங் பின்டாங் (1828 மீட்டர்) ஆகிய சிகரங்கள் மட்டுமே உயரமானவை. அந்த இரு சிகரங்களைப் பற்றி நன்கறிந்த விமானியால் 9000 அடி உயரத்தில் அந்த மலைப்பிரதேசத்தில் இரவிலும் விமானத்தைச் செலுத்த முடியும் என்றது மற்றொரு செய்தி.

மாலத்தீவுப் பகுதியில் மர்ம விமானம் பறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் 8-ஆம் தேதி காலை 6.15 மணி அளவில் ஜம்போ ஜெட் விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்ததை மாலத்தீவின் குடா ஹவுத்து பகுதியைச் சேர்ந்த மக்கள் பார்த்துள்ளனர். எங்கள் தீவில் மிகப் பெரிய விமானம் இவ்வளவு தாழ்வாகப் பறந்ததை நாங்கள் பார்த்தது இல்லை, விமானத்தின் கதவுகள்கூட தெளிவாகத் தெரிந்தன. அதன் சத்தம் காதைக் கிழிப்பதாக இருந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்கூட விமானத்தின் சத்தத்தைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மர்ம விமானம் அநேகமாக மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேதி, நேரம் ஆகியவை பொருத்தமாக இருப்பதால் இதுகுறித்தும் மலேசிய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றது வேறொரு செய்தி.

இதனிடையே மாயமான விமானம் கிட்டத்தட்ட 3 நாடுகளின் ராணுவ ராடார்களிலிருந்து தப்பிப் பறந்துள்ளது. முதலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த அந்த விமானம் ராடாரில் இருந்து தப்ப 5 ஆயிரம் அடி உயரத்தில் மிகவும் தாழ்வாகப் பறந்துள்ளது. ராடார் கண்காணிப்புக் குறைந்த மலைப்பிரதேசங்கள் வழியாகவும் விமானம் பறந்துள்ளது. விமானத்தின் இயக்கம், விமானப் பாதைகள் குறித்து நன்கறிந்தவர்களால் மட்டுமே இவ்வாறு விமானத்தைச் செலுத்த முடியும் என்று மலேசியப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்றது இன்னுமொரு செய்தி.

செயற்கைக் கோள் தகவலை ஆதாரமாக வைத்து லண்டனிலிருந்து வெளியாகும் தி இன்டிபெண்டன்ட் நாளிதழ் வெளியிட்ட தகவலோ வேறு மாதிரியாக இருந்தது. இன்மார்சாட் செயற்கைக் கோளில் விமானத்தின் சிக்னல் பதிவானபோது அந்த விமானம் வானில் பறந்திருக்க வாய்ப்பில்லை. தரையில்தான் இருந்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடகிழக்குப் பாகிஸ்தானில் விமானம் தரையிறங்கி இருக்கக்கூடும். ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளும் வடகிழக்குப் பாகிஸ்தான் பகுதிகளும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளில் விமானம் தரையிறக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது அந்த நாளிதழின் கண்டுபிடிப்பு. மாயமான மலேசிய விமானம் இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இரணைமடு விமானத் தளப்பகுதியில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என பிஸினஸ் இன் சைடர் எனும் ஆங்கில இணையதளமும் தன்பங்கிற்கு பரபரப்புத் தகவலை வெளியிட்டது. மாயமான மலேசிய விமானம் காணாமல் போன நான்கு மணி நேரத்தில் பல இடங்களைச் சென்றடைந்திருக்க முடியும். இதில் 2 ஆயிரத்து 530 மைல்கள் வரை பயணம் செய்யத் தேவையான எரிபொருள் விமானத்தில் இருந்துள்ளது. மேலும் இந்த விமானம் இந்தியா, இலங்கை அல்லது பாகிஸ்தான் நோக்கிப் பயணித்திருக்கலாம். அந்தமான் தீவுகளில் பல தீவுகள் மக்கள் குடியேறாத அடர்ந்த காடுகளைக் கொண்டுள்ளன. அங்கு ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே உள்ளது. எனவே அப்பகுதியில் தரையிறக்க வாய்ப்பு உள்ளது என அந்த இணையதளம் சந்தேகம்  எழுப்பயது. விமானம் தாய்லாந்து முதல் கஜகஸ்தான் எல்லை வரையோ அல்லது இந்தோனேஷியா முதல் தென் இந்தியப் பெருங்கடல் வரையோ பறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இந்த இரு வழிகளிலும் விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டதே இந்த ஊகங்களுக்குக் காரணமாக இருக்கலாம்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல, கடத்தப்பட்ட விமானத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், இன்னும் எத்தனை எத்தனை ஊகங்களை ஊடகங்கள் வெளியிட்டாலும், அவை அனைத்தும்  சில பொதுவான பண்புகளுக்குள் அடங்கிவிடக்கூடியவைதான். ஒன்று விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும்; அல்லது விமானம் கடத்தப்பட்டிருக்க வேண்டும்; விமானக் கடத்தல் வல்லரசுகளின் விளையாட்டாகவும் இருக்கக்கூடும்.

விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கக்கூடுமா? விபத்து எனில் அது நடுவானில் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும் அல்லது கடலில் விழுந்து மூழ்கியிருக்க வேண்டும். விமானங்களின் கட்டமைப்பில் ஒரு சிறிய குறைபாடு இருந்தாலும், அது நடுவானில் சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடுவதற்கு வாய்ப்பாகி விடும் என்பது தொடங்கி, விமானியே தற்கொலை அல்லது நாசம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் விமானம் கடலில் விழுந்து மூழ்கும்படிச் செய்திருக்கலாம். விமானிகளின் அறையில் ஆக்சிஜன் விநியோகம் குறைந்து அதை உணர்வதற்குள் அவர்கள் மயக்கநிலைக்குச் சென்றிருக்கலாம்; எரிபொருள் இருந்தவரை விமானம் பறந்து கடலில் விழுந்திருக்கலாம் என்பது வரை இந்த ஊகங்கள் செய்யப்பட்டுள்ளன. அய்.நா.வின் கீழ் செயல்படும் அணுவெடிச் சோதனைத் தடை அமைப்பு (சிஜிஙிஜிளி), தரைக்கடியிலோ தரைக்கு மேலோ அணுவெடிச் சோதனை நடைபெற்றால் அதைக் கண்டுபிடிப்பதற்கான கருவிகளை நிறுவியுள்ளது. அணுவெடிச் சோதனைதான் என்றில்லை, நிலநடுக்கம், பெரும் வெடிவிபத்து அல்லது விமானம் நடுவானில் வெடித்துச் சிதறுவது, கடலில் விழுவது போன்ற நிகழ்வுகளும், இன்ஃப்ராசோனிக் வேவ்ஸ் என்றழைக்கப்படும் கேளா ஒலி அலைகள் மூலம் இந்தக் கருவிகளால் உணரப்பட்டுவிடும். அப்படிப் பார்த்தால், மலேசிய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியிருந்தாலோ கடலில் விழுந்திருந்தாலோ அதுவும் கேளா ஒலி அலைகளின் அதிர்வாகப் பதிவாகியிருக்க வேண்டும். அப்படி ஏதும் பதிவாகவில்லை என்கிறது அணுவெடிச் சோதனைத் தடை அமைப்பு. இந்த ஒரு காரணி மட்டுமல்ல, வேறு பல காரணிகளும்கூட விபத்து நடந்திருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பை வெகுவாகக் குறைத்துவிட்டன. விமானம் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகத்தைத் தூண்டிய காரணிகளே அவை. சரி, விமானம் கடத்தப்பட்டிருக்குமா?

ஈரான் நாட்டைச் சேர்ந்த 2 பயணிகள் போலி பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளனர்.

அவர்கள் திட்டமிட்டு விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என்பது முதலில் செய்யப்பட்ட ஊகம். ஆனால், சர்வதேச அளவிலான புலனாய்வு அமைப்புகள் அதற்கு வாய்ப்பில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டன. எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு விமானிகளை வட்டம் போட்டுக் காட்டுவதே. அதனால்தான், விமானியின் வீட்டில் சிமுலேட்டர் கைப்பற்றப்பட்டதில் தொடங்கி, அவர் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வரின் உறவினர் என்பது வரை அனைத்தும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படுகிறது.

விமானம் கடத்தப்பட்டிருக்குமேயானால், அதற்கு ஒரு நோக்கம் இருந்திருக்க வேண்டும். எனவே, கடத்தியவர்களிடமிருந்து உடனடியாக கோரிக்கைகள் வந்திருக்கும். அப்படி ஏதும் வரவில்லை. பெரும் சேதத்தை ஏற்படுத்துவதுதான் விமானியின் நோக்கம் என்றால், காணாப் பிணமாக்குவது என்பார்களே, அப்படி சுவடுகூடத் தெரியாமல் 239 உயிர்களுடன் விமானத்தைச் சிதைக்கும் நோக்கத்திற்குக் காரணம் வேண்டும். ஆக எந்தத் தர்க்கத்திற்குள்ளும் பிடிபடவில்லை என்னும்போது மனிதன் பலவீனமாகி விடுகிறான். பலவீனம் எப்போதுமே அதிசயங்களில்தானே அடைக்கலமாகும்? மந்திரவாதிகளின் குறிகளும், பெர்முடா முக்கோணப் புதிர்களும் அந்த இடத்தை நிறைவு செய்கின்றன. மலேசியாவில் பிரபலமான மந்திரவாதி ஒருவர், விமானம் இன்னும் பறந்துகொண்டிருக்க வேண்டும் அல்லது நீரில் மூழ்கியிருக்க வேண்டும் என்று குறிபார்த்துச் சொன்னார். அவருக்குப் போட்டியாக, பெர்முடா கடற்பகுதியில் விமானம் விழுந்து மிதக்கிறது. அதிலிருப்பவர்கள் உதவி கேட்டுக் கதறுகிறார்கள் என்று ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்தது. அதை கிளிக் செய்தவர்களின் கணினியில் நச்சுமென்பொருள்கள் புகுந்து தகவல்களைத் திருடின. அதிசயங்களில் அடைக்கலமாகும் மனங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லையே!

இன்னும் சிலர் ஆசிய கடற்பகுதியிலும் ஒரு பெர்முடா முக்கோணம் உள்ளது என்றனர். சரி உண்மையில் பெர்முடா முக்கோணம் விமானத்தைக் காவு கொண்டிருக்குமா?

புதிர் என்ன?

அடுத்த இதழில்…