Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அவனர் … அவளர் …

– கோவி.லெனின்

நியூசிலாந்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் எலனார் காட்டனுக்கு புக்கர் பரிசு. கனடாவைச் சேர்ந்த 82 வயது ஆலிஸ் மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு.

இவை இரண்டும் அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள். படம் வெளியிடாமல் செய்தி மட்டும் வெளியிட்ட தமிழ் நாளிதழ்களிலிருந்து இவர்கள் இருவரும் ஆணா, பெண்ணா என்று உடனடியாக அறிய முடியவில்லை. தொலைக்காட்சியிலும், இணையதளங்களிலும் படம் பார்த்துத்தான் அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ்களில் அந்தப் பிரச்சினை இல்லை. படம் இல்லாவிட்டாலும் பாலின அடையாளத்தைக் காண முடிந்தது.

காரணம்,Eleanor Catton, the 28-year old author from New Zealand has won the Man Booker prize 2013 for her novel, The Luminaries, published by Granta. ‘She’ is not only the youngest novelist to win the coveted literary prize, but has set a new record for the longest winning novel. The Luminaries is 852 pages. இதுதான் ஆங்கில நாளிதழின் செய்தி. எலனார் காட்டனுக்கு புக்கர் பரிசு என முதல் வரியில் சொல்லிவிட்டு, அடுத்த வரியிலேயே அவர் பெண் என்பதை She என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் சுட்டிக்காட்டுவிடுகிறார்கள். எலனார் காட்டனும், ஆலிஸ் மன்றோவும் பெண்கள். பரிசு பெற்றவர்கள் ஆணாக இருந்தால் he என்று குறிப்பிட்டு அடையாளம் காட்டிவிடுவார்கள்.

தமிழில் மரியாதை கருதி இருபாலரையும் அவர் என்றே எழுதுகிறோம். தீவிரவாதி எனப்படுவோர், வேறுயாரும் செய்ய முன்வராத கடைநிலை வேலை செய்வோர், பாலியல் தொழிலாளி, பிச்சையெடுப்போர், கொலைசெய்தோர் இவர்களைப் போன்றவர்களைத்தான் அவன், அவள் என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் கனதனவான்கள் உள்ளிட்ட மற்றவர்கள் எல்லாரும் அவர்தான். அதனால் ஆண்,- பெண் பாலின அடையாளம் எழுத்தில் சட்டென வெளிப்படுவதில்லை.

உத்தரபிரதேசத்தில் ஜெகதாம்பிகாபால் என்பவர் சிலநாட்கள் முதல்வராக இருந்தார். அந்தப் பெயர் தமிழ் மரபுக்கு பெண்பாற்பெயர் போல தெரிந்தது. தமிழ்ப் பத்திரிகைகளின் எழுத்து நடையில் பாலின அடையாளம் தெரியவில்லை. படம் வெளியான பிறகுதான் அவர் ஆண் என்பது தமிழ் வாசகர்கள் பலருக்கும் தெரிந்தது.

எழுத்து நடையில் இதுபோன்ற சிக்கல்களை எப்படித் தவிர்ப்பது என தமிழறிஞர்கள் ஆலோசித்து வழிகாட்டலாம். ஒரு சின்ன யோசனையாக நம்முன் இருப்பது இதுதான்… ர் விகுதி என்ற மரியாதை குறையாமல் அதேநேரத்தில் பாலின அடையாளத்தையும் காட்ட வேண்டுமென்றால் அவனர் என்று ஆண்பாலையும், அவளர் என்று பெண்பாலையும் சுட்டிக்காட்டலாமா? காலந்தோறும் உரிய மாற்றங்களை ஏற்றுக்கொண்ட தமிழ் இதை ஏற்றுக்கொள்ளுமா? இதைவிடச் சிறப்பான வேறு முறையில் எழுதலாமா? அய்யா.. சொல்லுங்கய்யா.. சொல்லுங்க.

– (நன்றி: www.kavvinmedia.com)