Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புத்த (தசா)வதாரக் கதையில் பரிணாமக் கொள்கை இருக்கிறதாமே?

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

வெறியின் வெளிப்பாடு

சிந்தனையாளர் வரிசை _ என்ற தொடர் நூல்களுள் ஒன்று:

சிந்தனையாளர் டார்வின், இதன் ஆசிரியர் திரு. ஜெகசிற்பியன் அவர்கள். வைரஸ் முதல் மனிதன் வரை _ என்பது ஒரு நூல்: இதன் ஆசிரியர் திரு. கே.என்.ராமச்சந்திரன் அவர்கள்.

இரண்டு நூல்களுமே, முதன்மையாக பரிணாமக் கொள்கை எனப்படும் உருமலர்ச்சிக் கோட்பாட்டை மய்யமாகக் கொண்டவை. அறிவியல் நூல்கள் என அழைக்கப்படும் இந்நூல்களின் ஆசிரியர்கள் இருவருமே தங்களின் விளக்கங்களின் ஊடே ஊடே இடைச் செருகல்களாக, பின்வருமாறு தங்கள் இந்துமதப் பற்றினை, இல்லை, இல்லை _ வெறியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜெகசிற்பியன் பின்வருமாறு எழுதுகிறார்:

என்ன பேரை வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

இன்றைய இந்துமதக் கொள்கை என ஏற்றிப் பேசப்படுகிறதோ அதே தத்துவம்தான் அன்றைய டார்வினிசமாய் நம் மக்களால் வெளியிடப்பட்டது என்று கூடச் சொல்லலாம்.

அந்த டார்வினிசத்தின் பெயர் என்ன தெரியுமா? அதுதான், மஹாவிஷ்ணுவின் தசாவதாரம் என்பதாகும்.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!

அடுத்து, கே.என்.ராமச்சந்திரன் எழுதுகிறார்: பூமியில் உயிரினங்கள் பரிணமித்து வந்த வரலாற்றைப் பார்க்கும்போது, நமக்கு விஷ்ணுபகவானின் பத்து அவதாரங்கள் நினைவுக்கு வருகின்றன. ஏதோ ஒரு அறிஞன் பரிணாமத் தத்துவத்தை அடையாளம் கண்டுகொண்டு தனது அறிவுக்கு ஏற்ற வகையில் அவதாரங்களாக விவரித்து விட்டானோ? என்று தோன்றுகிறது. வெட்கத்தை உதறிவிட்டவர்கள்

படித்தீர்களா? இரு நூலாசிரியர்களும் பத்தவதாரங்களை பரிணாமக் கோட்பாட்டோடு, பொருத்தி கொஞ்சமும் கூச்சநாச்சம், வெட்கம் இவற்றை உதறி எறிந்துவிட்டு இந்துமத இதிகாச, புராணக் கற்பனைக் கட்டுக்கதைகளை அறிவியல் ஆய்வு முடிவுகளோடு முடிச்சுப் போட்டுள்ளனர். இருவருக்கிடையே என்ன ஒற்றுமை? எத்துணை ஒற்றுமை?

புரட்டுவேலை செய்யப் புறப்பட்டாரே!

மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் முதல் அவதாரமாக மச்ச (மீன்) அவதாரம் குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது கூர்மம் (ஆமை), மூன்றாவது வராகம் அதாவது பன்றி. நான்காவது அவதாரம் வாமனம். வாமனம் என்றால் குறள்வடிவு அல்லது குள்ளமான _ குறுகலான என்பது பொருள். ஆக, இந்தச் சொல்லுக்குக் கரடி அல்லது யானை என வைத்துக் கொள்ளலாம். அய்ந்தாவது அவதாரம் நரசிம்மம். அதாவது நர(மனித) உருவில் இருக்கும் சிங்கம். இப்படி, இந்த அய்ந்து அவதார உருவங்களும் பரிணாமத் தத்துவப்படி ஒன்றிலிருந்து ஒன்று திரிந்தும் சிதைந்தும் வளர்ச்சி பெற்றவையாக விளங்குகின்றன.

தப்பும் தவறுமாய்

ஜெகசிற்பியன் அவதார வரிசை கூறும்போது, முதல் மூன்று (மச்சம், கூர்மம், வராகம்) அவதாரங்களைச் சரியாகக் கூறிவிட்டு 4ஆவது அவதாரமாக வாமன அவதாரம் என்று தவறாகக் கூறுகிறாரே? நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்றுதானே புராணங்கள் புகல்கின்றன.

வைணவ ஆழ்வார்கள் எல்லாம் திருமாலின் திருவிறக்கமாக பத்தவதாரங்களைக் கூறும்போது (திருவிறக்கம் என அவதாரத்தை மொழிஞாயிறு பாவாணர் வழங்குகிறார்) பின்வருமாறுதான் அவதார வரிசைமுறையினைப் பாடியுள்ளனர்.
ஆழ்வார் பாடிய அவதார வரிசை

தேவுடைய மீனமாய், ஆமையாய், ஏனம்ஆய், அரியாய், குறள்ஆய்,
மூவுருவில் இராமன்ஆய், கண்ணன்ஆய்
கல்கியாய் முடிப்பான்…
என்பதாக, பெரியாழ்வார் பாடியுள்ளார். _பெரியாழ்வார் திருமொழி, நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

ஏனம் _பன்றி; அரி _(நர)சிம்மம்; குறள்_வாமனம். மூவுருவில் இராமன் _(1.கோசலராமன், 2.பரசுராமன், 3.பலராமன்) இது ஓர் எடுத்துக்காட்டு. இது ஒன்று போதும் எனக் கருதுகிறோம்.

வரிசை முறை தவறிய வன்கொடுமை

அவதார வரிசை முறையாக, மச்ச (மீன்), கூர்ம (ஆமை), வராக (பன்றி), நரசிம்மம், வாமன, கோசலராம, பரசுராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்றுதான் ஆழ்வார் பாசுரம் கூறுகிறது.

ஆனால், 4ஆவது அவதாரம் வாமனம், 5ஆவது அவதாரம் நரசிம்மம் என்று ஜெகசிற்பியன் கூறுகிறாரே? இல்லை குழப்புகிறாரே? வரிசை மாற்றுகிறாரே? ஏனிந்த மயக்கம்?

பரிணாமக் கோட்பாட்டை பத்தவதாரக் கதையோடு பொருத்த வந்தவர், பரிதாபமாக வரிசை மாற்றி எழுதுகிறாரே? ஏன் இந்த மாற்றம்? தடுமாற்றம்? பரிணாமக் கோட்பாட்டின் படிநிலை உருமலர்ச்சி மாறிப்போய் விடாதா?

யானையும் கரடியும் இங்கே ஏன் வந்தன?

வாமனம் என்றால் குறள் வடிவு அல்லது குள்ளமான குறுகலான என்பது பொருள் என்கிறார் நூலாசிரியர்.

நிரம்பச் சரி! அதுவே சரியான பொருள்! ஆனால், மறுபடியும் ஒரு குழப்பம் செய்கிறாரே இவர்! ஆக இந்தச் சொல்லுக்கு, கரடி அல்லது யானை என்று வைத்துக் கொள்ளலாம் என, ஒரு புதுக்கரடி விடுகிறாரே! கரடி அல்லது யானை என்று வைத்துக் கொள்ளலாம் என்கிறாரே! ஏன் அப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? கரடிக்கு இங்கென்ன வேலை? யானைக்கு இங்கென்ன அலுவல்? இப்படி வைத்துக்கொள்வது இவரது விருப்பமா? இவர் விருப்பத்தை எல்லாம் எவர் கேட்டார்கள்? எந்தப் புராணத்தில் இந்தப் பொருளில் கூறப்பட்டுள்ளது?

அவதாரம் பற்றிக் குழப்பிட இவருக்கு யார் தந்தது அதிகாரம்?

புராணம் அப்படிக் கூறியிருந்தால் அது தெளிவாகவே கரடி அவதாரம். அதாவது ஜாம்பவான் அவதாரம்; யானை அவதாரம் அல்லது கஜாவதாரம் என்று வெளிப்படையாகவே கூறியிருக்குமே? யார் தடுத்தார்கள்? எவர் மறுத்தார்கள்?

அதுசரி, அப்படி வைத்துக் கொள்ளலாம்; இப்படி வைத்துக் கொள்ளலாம் என்கிறாரே? புதிய புராணம் புனைகிறாரே? இதற்கு யார் கொடுத்தார் இந்த அதிகாரம்?

அடையாளம் காண்பதல்ல; ஆராய்ந்தறிவது

ஏதோ ஒரு அறிஞன்(?) பரிணாமத் தத்துவத்தை அடையாளம் கண்டு அதனை அவதாரமாக்கி விட்டானோ? என்று தோன்றுகிறது _என்கிறார் கே.என்.ராமச்சந்திரன்.

பரிணாமத் தத்துவம் என்ன வனாந்திரத்தில் பர்ணசாலையில் கிடக்கும் ஒன்றா? அதனை அந்த புராணகால மேதாவி அடையாளம் கண்டுகொண்டு அவதாரம் ஆக்கிவிட்டானோ? _ என வியக்கிறாரே இவர்?

பரிணாம தத்துவம் அடையாளம் காண்பதன்று;  பட்டறிவால், பரந்துபட்ட அறிவியல் ஆராய்ச்சியால் உருவாக்குவது. அடையாளம் கண்டுகொண்ட அந்த அதிமேதாவி அதனை ஏன் அப்படியே பரிணாம தத்துவம் என்றே ஏட்டிலே எழுதி வைத்திருக்கலாமே?

யார் இவர் கையைப் பிடித்துத் தடுத்தது? ஏட்டையும் எழுத்தாணியையும் யார் தட்டிவிட்டது? புராணக் கற்பனையாளர்களை அறிவியலாளர்கள் ஆக்க என்ன பாடுபடுகிறார் இவர்?

அவன்தான் மனிதன்!

முதலில் தோன்றியது மச்சம் (மீன்) என்கிறார் ஜெகசிற்பியன். முதலில் தோன்றிய உயிரினம் மீன் என்று டார்வின் எங்கே சொல்லியிருக்கிறார்? பரிணாமக் கொள்கையின் அடிப்படை என்ன? கீழான _தாழ்வான ஓர் உயிர் பரிணமித்து அதாவது உருமலர்ச்சி பெற்று, பல கிளைகளாகப் பிரிந்து, சிதைந்து, திரிபாக்கம் பெற்று உயிரினத்தின் உச்சகட்டம் ஆகிய மனிதன் ஆயிற்று என்பதுதான் பரிணாமக் கோட்பாட்டின் சாறு_ பிழிவு.

சொன்னது நீதானா? சொல், சொல்?

இதே ஜெகசிற்பியன், தனது நூலில் பிறிதோர் இடத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார். நீர்ப்பாசியிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, பல்லி, எலி, பெருச்சாளி, பன்றி, கரடி, எருமை, யானை, நாய், ஓநாய், புலி, சிங்கம் முதலிய ஜீவப் பிராணிகள் எல்லாம் பரிணாம ரீதியில் தோன்றி இறுதியில் குரங்கு என்ற ஒரு பிராணி தோன்றியது. அந்தக் குரங்கின் மூதாதையான ஒரு பிரிவின் காலக்கிரம வளர்ச்சியே மனிதன் _ என, பரிணாம வாதத் தத்துவம் கூறுகிறது _(நூல்: பக்கம் 77_78)

இவரது விளக்கம் ஒருவாறு ஏற்கத்தக்கதே!

என் கேள்விக்கு என்ன பதில்?

அவரது விளக்கத்தின்படி, மச்சத்திற்கு முன் புழு, பூச்சை, நத்தை தோன்றியுள்ளன. அப்படியானால்? மச்சாவதாரத்துக்கு முன், புழு அவதாரம், பூச்சி அவதாரம் இவைதானே தோன்றியிருக்க வேண்டும்? பின் எப்படி மச்சம் (மீன்) முதலவதாரம் ஆக முடியும்? ஒரு கேள்வி முறை இல்லையா? பதில் சொல்ல வேண்டும் ஜெக(ஜால)சிற்பியன்!

வேண்டாமே, இந்த விபரீத வேலை!

ஜெகசிற்பியன் கூற்றின்படி தவளைக்குப் பின்தானே ஆமை (கூர்ம) அவதாரம் வருகிறது? மாண்டூக்ய (தவளை) அவதாரம் தானே முந்தி வந்திருக்க வேண்டும்? புராணம் அப்படிப் புகலவில்லையே? ஜெகசிற்பியன் ஏன் இப்படிப் புரட்டுவேலை செய்கிறார்? அறிவியலைத் தன் துணைக்கு இழுக்கிறார்? ஏன்? புராணக் கதைக்கு அறிவியலை ஏன் பொருத்துகிறார்? ஏன் இப்படி மயங்குகிறார்? தானும் மயங்கி, படிப்பவரையும் மயங்க வைக்கிறாரே ஜெகசிற்பியன்? வேண்டாம் அய்யா, இந்த விபரீத வேலை!

வந்துட்டான்யா வந்துட்டான்!

நாலாவது அவதாரம் வாமன அவதாரம். வாமனன் என்றால் குள்ளன் எனப் பொருள்! தந்தை பெரியார் குள்ளப் பார்ப்பான் எனக் குறிப்பிடுகிறார்.

மகாபலி என்னும் அசுர(திராவிட) வேந்தனை அழித்து ஒழித்து, குழிதோண்டிப் புதைப்பதற்கே ஆரியன் எடுத்த அயோக்கியத்தனமானவன் இவன்.

மனிதனாக வந்த மகா அயோக்கியன் வாமனன். இவனை, மனிதக் கயவனை, கரடி அல்லது யானை என வைத்துக் கொள்ளலாம் எனக் கதை விடுகிறாரே நூலாசிரியர்? புராணங்களில் இப்படிப் புகலவில்லையே? விலங்குகளுக்கு நான்கு கால்கள் அல்லவா உள்ளன? மனிதனுக்கு ஈரடிகள்தானே? இதோ சிலப்பதிகாரம் பின்வருமாறு பாடுகிறது. மூவுலகும் ஈரடியால்
முறைநிரம்பா வகைமுடிய

தாவிய சேவடி….

உடையவன்தான் வாமனன் என்கிறதே, கண்ணை மூடிக்கொண்டு கரடி, யானை என பிதற்றுகிறாரே ஜெகசிற்பியன்? அந்தோ பரிதாபம்!

அப்படியா கூறுகிறது அறிவியல்?

அய்ந்தாவதாகக் கூறப்பட்டுள்ளது நரசிங்க அவதாரம். சிங்கத்தின் தலை; மனித உடல்! இவ்வாறு ஓர் உயிரினம் உலகில் உலவ, இருக்க முடியுமா? இது என்ன பரிணாமம்? இப்படிப்பட்ட உருமலர்ச்சி, வடிவம், நிலை, அறிவியலில், பரிணாமத் தத்துவத்தில் உயிரினத்துக்குக் கூறப்படவில்லையே? ஏன் இந்தத் தப்பான விளக்கம்? நரசிங்கம்! ஒரே அசிங்கம்!!

பேச்சில்லை, மூச்சில்லை

விலங்குகளின் நான்கு கால்களில் இரண்டைக் கைகளாகவும் மீதியைக் கால்களாகவும் கொண்டன என்கிறார் ஜெகசிற்பியன். விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் ஒரு கட்டமான முதனிலைப் பாலூட்டிகள் (Primates) குடும்பத்தில், மனிதனைத் தவிர, 1. குரங்கு (Monkey), 2. வாலில்லாக் குருங்கு (Ape) பற்றி ஏன் ஜெகசிற்பியன் பேச்சுப் பேசவில்லை; ஏன் மூச்சு விடவில்லை ?

வானரங்கள் ஏன் வரவில்லை?

குரங்கு (வாலுள்ளது) ஏன் வானர அவதாரம் என்று ஆகவில்லை? வாலில்லாக் குரங்கு வகைகளுள் சிம்பான்சி சிம்பான்சி அவதாரம் என்றோ, கொரில்லா கொரில்லாவதாரம் என்றோ, கிப்பன் கிப்பனாவதாரம் என்றோ, ஒராங் உடான் ஒராங் உடான் அவதாரம் என்றோ ஏன் கூறப்படவில்லை?

சிரிப்புத்தான் வருகுதய்யா!

இவ்வகை வாலில்லாக் குரங்குகளும் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டமல்லவா? இவையும் பரிணாமத் தத்துவக் கோட்பாட்டின் தத்துவம் என்று ஏன் தத்துப் பித்து என்று உளற அல்லது எழுதவில்லை? சிரிப்பு வருகிறது ஜெகசிற்பியன் அவர்களே!

உருட்ட முடியுமா? சுருட்ட முடியுமா?

தேவர்களுக்கு இன்னல் கொடுத்த ஓர் இராட்சதன் (இரண்யாட்சன்) பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் போய் ஓடி ஒளிந்து கொண்டானாம்! மஹாவிஷ்ணுவானவர், வராக (பன்றி) அவதாரம் எடுத்து கடலுக்குள் மூழ்கிப் போய், பூமியை மீட்டு வந்தானாம். இதுதான் வராகவதாரமாம்!

ஒரே ஒரு கேள்வி! பூமியைப் பாயாகச் சுருட்ட முடியுமா? அது என்ன தட்டையாகவா விரித்துப் போடப்பட்டிருந்தது? பூமியைச் சுருட்ட முடியுமா? ஒருவேளை அது உருண்டையாக இருப்பதால் உருட்டலாம்.

சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா?

இந்த எளிய அறிவியல் _ புவியியல் அறிவுகூட இந்த இந்துமத மேதாவிகளுக்கு இல்லையே?

இந்த இலட்சணத்தில், பரிணாமக் கோட்பாடு இந்துமதப் புராணங்களில் இருக்கிறதாமே? வெட்கமாக இல்லை?

அய்யாவின் நெற்றியடி

ஆமாம், பூமியைப் பாயாகச் சுருட்டும்போது மகாவிஷ்ணு எங்கே நின்றுகொண்டு சுருட்டினார்? பூமி சுருட்டப்படும்போது சகல சமுத்திரங்களும் பூமிப்பாய்க்குள்ளேதானே இருக்க முடியும்? அப்புறம் எந்தக் கடலுக்குள் மூழ்கி இந்தப் பன்றிப்பயல் பூமியை மீட்டு வந்தார்? என்று நெற்றியடிக் கேள்விகள் கேட்டாரே, பகுத்தறிவுப் பகலவன்? பதில் இன்னும் வந்த பாடில்லையே?

ஆனால், பரிணாமக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்ப்பதில் குறைச்சலில்லை?

பாதிக்குப் பொருத்தம்! மீதிக்கு ஏன் இல்லை?

இந்த நூலாசிரியர் முதல் 5 அவதாரங்களை பரிணாமக் கோட்பாட்டோடு பொருத்திக்காட்ட முயன்றிருக்கிறார். மீதி 5 அவதாரங்களை ஏன் பரிணாமக் கொள்கையோடு பொருத்திக்காட்ட முயலவில்லை? ஏன் இந்த முயற்சியில் ஈடுபட வில்லை? பாடுபடவில்லை? அவற்றை அம்போ என்று அப்படியே துறந்துவிட்டு சந்யாசம் வாங்கிக் கொண்டாரே? ஏன்? ஏன்? ஏன்?

இது எப்படி?

பரிணாமம் என்பது காலம்கடந்து _ நீண்ட நெடுங்காலத்தின் பின்தானே நிகழமுடியும். ஆனால், ஒரே காலகட்டத்தில், கோசல ராமனும், கோடாலி ராமனும்(பரசுராமன்) வாழ்ந்துள்ளனரே? வாதிட்டுள்ளார்களே? இது எப்படி? ஒரே காலகட்டத்தில், கிருஷ்ணாவதாரமும் பலராமவதாரமும் மகாவிஷ்ணு எடுத்துள்ளார்களே. முன்னவன் தம்பி; பின்னவன் அண்ணன்! அவதாரம் எடுத்தவர் ஒருவர். எடுக்கப்பட்ட அவதாரங்கள் ஒரேசமயம் இரண்டு. இது எப்படி?

பரிணாமம் என்றாலே ஒன்றிலிருந்து வேறொன்று சடுதி மாற்றம் (Mutation) காரணமாக, கிளைவிட்டு உருமலர்ச்சி பெறுவதுதானே?

ஒன்பது என்பதுதான் உண்மை!

தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை எடுத்துக்காட்டி நிறைவு செய்ய விரும்புகிறோம். விஷ்ணு 10 அவதாரங்கள் எடுத்தார் என்று சொல்லப்படுகிறதே ஒழிய, எடுத்த அவதாரங்கள் ஒன்பதுதான் என்று ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாக, 9 அவதாரங்களே எடுக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஓர் அவதாரம் நடக்காமலே 10 அவதாரங்கள் என்று சொல்லப்படுகின்றது என்பதுதான்! கல்கி என்பதாக ஏற்படப் போகிறது என்றும் சொல்லப்படுகிறது _ (பெரியார் களஞ்சியம்: தொகுதி 2, பக்கம் 93_94). கலியுக முடிவில்தான், மகாவிஷ்ணு, பார்ப்பன குலத்தில் விஷ்ணுசர்மாவின் மகனாக அவதாரம் எடுத்து தேவதத்தம் என்னும் குதிரை ஏறி உருவிய வாளுடன், துஷ்டநிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்வாராம். (தகவல்: நூல் _ தசாவதார மஹிமையும் துணைப் பாத்திரப் பெருமையும்)

வேண்டாம் இந்த வீண் வேலை!

அவதாரங்கள் 9தான் கூறப்பட்டிருக்க பத்த(தசா)வதாரக் கதையில் பரிணாமக் கொள்கை இருக்கிறது என்பது பித்தலாட்டமல்லவா? கோமளித்தனத்துக்கு ஓர் உச்சவரம்பே இல்லையா? இதில் ஒரு வேடிக்கை.  தசாவதாரம் என்று ஒரு திரைப்படம் நாயகன் நடிகர் நடித்து தமிழில் வெளிவந்துவிட்டது!

பத்த(தசா)வதாரத்தில் பரிணாமக் கோட்பாடு எனப்படும் அறிவியல் இருக்கிறது என்று புளகாங்கிதமடைவது _ புல்லரித்துப்போவது தகிடுதத்தம் அல்லவா? மோசடித்தனம் அல்லவா? திரிபுவாதம் அல்லவா?

இது இந்துமத வெறி-. வேண்டாம் இந்த வீண் வேலை! விஞ்ஞானத்தோடு விளையாட வேண்டாம்!