கேள்வி : பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப் படவில்லையே? – கோ.பரமேஸ்வரி, வந்தவாசி
பதில் : அதிகமா? தமிழ்நாட்டில் முன்னணியில் அக்கட்சிக்கு சதா குரல் கொடுக்கும் மூன்று பெண்மணிகளுக்குக் கிடைத்ததோ மூன்று கோடுகளே! பரிதாபம்! ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முதலில் பெண்களுக்கு அனுமதியே கிடையாது. பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக கதவு கட்சிக்குள் திறந்தது! தமிழ்நாட்டில் அவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான்! என்ன செய்வது இன்னமும் இது ஆண் ஆதிக்க சமுதாயம்தானே!
கேள்வி : இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலில் எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதா? – மா.வெற்றிவேலன், குடியேற்றம்
பதில் : சரியானதல்ல என்பதை அடுத்த தேர்தலுக்குள் குறைந்தது ஒரு வாரமாவது நடத்தப்படும் பொலிட் பீரோ கூட்டத்தில் முடிவாக அறிவிக்கக் கூடும். (இது அவர்களது பழைய நடப்புகளைக் கணக்கிலிட்டுச் சொல்லப்படும் பதில். அவர்களைக் கேலி, கிண்டல் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.)
கேள்வி : தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் அந்தப் பிரிவின் உட்பிரிவில் வரும் ஒருவரைத் திருமணம் செய்தால் அது ஜாதி மறுப்புத் திருமணமாகுமா? அல்லது தாழ்த்தப்பட்டவர் பிற்படுத்தப்பட்டவருக்குள் நடைபெறும் திருமணம் ஜாதி மறுப்புத் திருமணமாகுமா? இதில் எதனை வரவேற்பீர்கள்? – நா.பார்த்திபன், கொளத்தூர்
பதில் : அதே பிரிவில் உள்ளவர்கள்கூட மற்றவை சற்று எஜமானத் தோரணையில் பார்க்கும் நிலையில் இதுபோன்று நடந்தால் எல்லாவற்றையுமே வரவேற்பார்கள் _ பெரியார் தொண்டர்கள்!
கேள்வி : திருமணம் செய்யும்போது பெண்ணிற்கு அதிகமாகவும் ஆணிற்குக் குறைவாகவும் வயது இருப்பின் அதற்கு வரம்பு ஏதேனும் உண்டா?
– மோ. மீனாகுமாரி, கொருக்குப்பேட்டை
பதில் : வரம்பு – மனதைப் பொறுத்தே! அதற்காக வயது இடைவெளி மிக அதிகமாக இருப்பது உசிதம் அல்லவே! சிறிய பள்ளத்தை எளிதில் தாண்டலாம். பெரிய பள்ளம் ஆனால் எளிதில் தாண்ட முடியாதே!
கேள்வி : இன்றைய மக்களவைத் தேர்தல் போட்டி ஆரிய, திராவிடப் போராட்டமே என்பது இன்னமும் இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறார்களா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : உண்மைகள் பலருக்குக் கசப்பாக இருப்பதால் அப்படி ஒரு தயக்கம்! அவ்வளவுதான்!!
கேள்வி : மது அருந்தாத மன்மத ராஜாக்கள் அறவே இல்லாத அரசியல் இயக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எங்கேனும் உண்டா?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : தேடிக் கண்டுபிடிப்பவர்களுக்கு நீங்கள் பரிசு தரலாமே!
கேள்வி : ஊடகங்களின் கருத்துக் கணிப்புப்படி ஒருவேளை மோடி நாட்டின் பிரதமராகும் நிலை ஏற்பட்டால் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? – வீ.பாவேந்தன், திருச்சி.
பதில் : மதக்கலவரம், ஜாதி மோதல்கள் அடிக்கடி ஏற்படும்.
பெருமுதலாளிகள் இராஜ்யமாக அமையக்கூடும்!
கேள்வி : தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கூட்டணிக்காக பட்ட பாட்டைக் கவனித்தீர்களா? எந்தக் கீழ்நிலைக்கும் செல்லத் துணிந்துவிட்டவர்களால் எப்படி நல்ல ஆட்சியைக் கொடுக்க முடியும்? – தெ.பூங்குழலி, ஈரோடு
பதில் : பலன் பிரமாதமாக இருக்கப் போவதில்லை என்பதை மே 16இல் தெரிந்து கொள்வீர்கள்; ஆசை வெட்கமறியாது! பதவியாசை எதையும் அறியாதது!
கேள்வி : தமிழக காங்கிரசின் தலைவர் ஞானதேசிகன் தனித்துப் போட்டியிடும் நிலை வந்தது இறைவன் கொடுத்த வரம் என குறிப்பிட்டுள்ளது குறித்து?
– சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : இப்படியா இறைவன் அக்கட்சியைப் பழி தீர்ப்பது? கொடுமையடா சாமி! தாங்காது இந்த பூமி என்ற பாடல் எங்கோ கேட்கிறது இதை எழுதும்போது!
கேள்வி : புருனே நாட்டில் கல்லால் அடித்துக் கொல்லுதல், பிரம்பால் அடித்துக் கொல்லுதல், கை கால்களை அடித்துக் கொல்லுதல் போன்ற மரண தண்டனை முறைகள் அமலுக்கு வருவது குறித்து? – க. இந்திரஜித், செங்கை
பதில் : இன்னமும் பழைய கற்காலத்திலேயே இருக்கிறார்கள்; தற்காலத்துக்கு வர சில ஆண்டுகள் பிடிக்கக்கூடும்.
Leave a Reply