Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஒரு ரோஜா அரளிப்பூவானது

– எஸ்.எஸ். தென்னரசு

எஸ்.எஸ்.தென்னரசு,திராவிட இயக்க முன்னணி எழுத்தாளர்; ஏராளமான சிறு கதைகளை எழுதியவர், அதனால் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டவர்.நாடகங்கள் உள்ளிட்ட இலக்கியப் புதினங்களைப் படைத்துள்ளார். இராமநாதபுர மாவட்ட தி.மு.க.செயலாளராகவும், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகவும், நீண்ட காலம் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அன்பு நிறைந்த சுமதிக்கு,

பெண்ணுக்குப் பல ஆசைகள் உண்டு. விபரம் தெரியும் பருவம் வந்தவள் பட்டுப்பாவாடை கேட்டு வாங்கியது வந்ததும்  அவளே வண்ணப் புடவைகளுக்குத் தன் தாயிடம் அடம் பிடிப்பாள். அடுத்து அவள் தனக்குள்ளேயே கணவனைப் பற்றிய கனவு காண்கிறாள். அதுவும் நிறைவேறி விட்டால் தானும் ஒரு தாயாக வேண்டும் என்ற துடிப்பு வந்து விடும் அவளுக்கு. இந்த ஆசைதான் அவள் சலிப்படையாத ஆசை.

ஏழை வீட்டில் பிறந்தவளாயினும் இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டாய்; வெற்றியும் பெற்று விட்டாள். ஆனால் என் கதை என்ன? உன்னைவிட நான் அழகானவள்; உன்னைவிட நான் படித்தவள்; உன்னை முந்திக்கொண்டு நான் திருமணம் முடித்துக் கொண்டவள். ஆனாலும் உன்னிடம் தோற்றுப் போனேன்.

வாழ்க்கையின் வெற்றி எதிலே அடங்கியிருக்கிறது என்று யாரும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை; தெளிவுபடுத்தவும் முடியாது. பெரிய இடத்திலே பிறந்த பேரழகு வாய்ந்த பெண் கொடுத்து வைத்தவள் என்ற ஊர்ப்பேச்சு எவ்வளவு பெரிய பொய் என்பது  என்னைப் பொறுத்தமட்டில் நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டது. இல்லையா சுமதி?

நீ, தாயாகி விட்டாய். உன் குழந்தைகள் உன்னை மொய்த்துச் சிரித்து விளையாடுகின்றன. நான் உன்னையும் உன் குழந்தைகளையும் மனக் கண்களால் பார்த்துப் பெருமூச்சு விடுகின்றேன்.

நான் அந்தப் பாக்கியத்தை இழந்துவிட்டேன். பெறவே முடியாத அளவிற்கு இழந்துவிட்டேன். நான் ஒருபோதும் இனி தாயாக முடியாது. எல்லாப் பெண்களும் தாய்மார்களாகிவிட்டால் மக்கட்பேற்றை உலகம் தாங்காது என்பதற்காக இறைவன் செய்து வைத்த ஏற்பாட்டில் என் பெயர் எப்படிச் சேர்ந்தது என்பதை நினைக்கும்போது, நான் ஏன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தீமை புரிவோர் பாவிகள் பட்டியலில் சேரலாம் – அதுதான் நியாயம். ஆனால் என்னைப் போன்றவர்கள் பிறக்கும்போதே பாவிகளானதெப்படி? மக்கட்பேற்றினை ஒரு செல்வம் என்கிறார்கள். அந்தச் செல்வம் ஒரு சிலருக்க மட்டுமே கிடைத்திட முடிகிறதே, ஏன்? மணமிருந்தும் மனோரஞ்சிதப்பூ தலையில் சூடிக்கொள்ள முடியாமல் போனது போல், உடலிலும் உள்ளத்திலும் மறுவில்லாத பெண்கள்கூட வாழ முடியாமல் அபாக்கியவதிகளாக ஆகிவிடுகிறார்கள்.

சுமதி, இதற்கு வேதாந்திகள் ஒரே வார்த்தையில் ஊழ் வினை என்று சொல்லி விடுவார்கள். இந்தத் தத்துவங்களெல்லாம் ஒரு வழிப் பாதைகள் போன்றவை; தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துடிப்பவர்கள் ஏற்பாடு செய்து கொண்ட கொல்லைக் கதவுகள்!

என் திருமணத்தின்போது என்னையும் அவரையும் ஒரே காரில் வைத்து பட்டணப் பிரவேசம் நடத்தினார்கள். தெருவில் நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கெல்லாம் நீ பூச்செண்டு கொடுத்துக் கொண்டு வந்தாய். அவர்களது வாழ்த்தெல்லாம் என்னவாயிற்று? கோவில்களுக்கெல்ம் போனோம் _ குறைவில்லாமல் காணிக்கைகளை வழங்கினோம். எல்லாமே வீண் விரயம்தானா?

ஒரு பெண்ணின் உணர்ச்சியை ஒரு பெண்தான் அறிய முடியும் _ நான் நினைத்தால் அல்லது ஒரு பெண் நினைத்தால் ஊழ்வினைகளைத் தூளாக்கிவிட முடியும். ஆனால்… அறுவை சிகிச்சைக்குமுன், மயக்க மருந்து போட்டுக் கொள்வது போல் முதலில் அவள் காதுகளைச் செவிடாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு எவள் துணிகிறாளோ அவள் ஊழ்வினையை ஒழித்து ஊரார் புரளியை எள்ளி நகையாடி ஒரு புரட்சிப் பெண்ணாகி விடுவாள்; நானும் அப்படி ஆகிவிட முடியாதா?

என் வீடு பெரிய வீடு; மேல் வீட்டை நான் வாடகைக்கு விட்டிருந்தேன். அதில் ஒரு நாடக நடிகை குடியிருந்தாள். புஷ்பராணி என்றால் நாடக ரசிகர்களுக்கு ஒரு மயக்கம் உண்டு. அவளுக்குப் பகலெல்லாம் தூக்கம். இரவெல்லாம் விழிப்பு. விடிய விடிய ஆடுகிறவளல்லவா! அவள் என்னமோ நல்லவள்தான். என்னை உணர்ந்தவள்தான். அவளுக்கு இரண்டு குழந்தைகள். புருஷன் அவளை விவாகரத்து செய்துவிட்டு ஒரு புதியவளைப் பார்த்துக் கொண்டான். புருஷனைக் கைவிட்ட புஷ்பராணி, பிள்ளைகள் போதும் என்று திருப்திப்பட்டுக்  கொண்டுவிட்டாள். எனக்கு அதுவுமில்லையே என்று நான் ஏங்குவதை அவள் தெரிந்து கொண்டுவிட்டாள்.

ஒருநாள் மாலை நானும் அவளும் கீழ் வீட்டின் உள்முற்றத்தில் பேசிக் கொண்டிருந்தோம்.

மேகலை, உன்னைப்போல் நான்கூட கொஞ்ச நாள் வேதனைப்பட்டேன். கடவுளை வணங்கினேன்; கண்ணீர் விட்டேன். இறுதியில் ஒரு மலையாள மந்திரவாதி சொன்னபடி நான் நடந்து கொண்டேன் _ காரியம் சித்தியடைந்தது என்றாள் புஷ்பராணி.

…….. பெருமூச்சு விட்டேன் நான். எனக்கும் அந்த வழி கிடைக்காதா என்றுதான் பெருமூச்சு விட்டேன்.

நீ உன் வீட்டுக்காரருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பழக்கத்தை உண்டாக்க வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் பல பெண்களோடு உறவு கொண்டாலும் சொந்த மனைவியோடு இன்பமாக வாழத் தவறியதில்லை. எனக்குத் தெரிந்தவரை குடிப் பழக்கமுள்ளவர்களின் மனைவிகள் குழந்தைகளை நிறையப் பெற்று வாழ்வதைத்தான் நான் பார்த்திருக்கிறேன் -_ புஷ்வராணி இதைச் சொல்லுவதற்குத் தயங்கினாலும் உள்ளத்தைப் பிதுக்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சியை அவளால் மறைக்க முடியுமா?

இதைக் கேட்டதும், ஓமத் திராவகம் குடித்த ஒரு வயதக் குழந்தையைப் போல் நான் தொண்டையைக் காரிக்கொண்டு முகத்தைச் சுளித்தேன்.

இரவு முழுதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. பரீட்சையில் தேறுவதற்கு விடிய விடியப் படிக்கும் மாணவனைப்போல் விழித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் இது ஒரு பரீட்சைதானே சுமதி!

பாதி ராத்திரிக்குப் பிறகு அவர் சூதாட்டக் கிளப்பிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார். ஆட்டத்தில் தோற்றிருப்பார் போலிருந்தது. கடு கடு என்று முகத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.

என்னங்க, சாப்பிட வேண்டாமா? விடியப் போகிறதே! என்றேன்.

போகும்போதே நீ அழுதாய். அங்கேயும் அழுது விடிந்தாற்போல்தான் ஆட்டமும் இருந்தது. கேலா, புருஷன் எங்கே போனாலும் மனைவி வாழ்த்தித்தான் அனுப்ப வேண்டும். புருஷனுக்குத் துணைவிதான் மனைவி என்றார்களே தவிர, புருஷனுக்கு வாத்தியார் என்றா சொன்னார்கள்! நீ எனக்கு வாத்தியாராக இருக்கிறவரை நான் ஆட்டத்திலே ஒருநாளும் ஜெயிக்க மாட்டேன் என்றார் அவர்.
கோபப்படாதீர்கள். நாளை முதல் நான் உங்களை வாழ்த்தியனுப்புகிறேன். இன்றைக்குச் சாப்பிட்டுப் படுங்கள் என்றேன்.

சாப்பிட்டார், வயிறு நிறையச் சாப்பிட்டா.

களைப்பு நீங்குவதற்கு இந்த டானிக்கைச் சாப்பிட்டுப் பாருங்கள். ஊரிலிருந்து அப்பா அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றேன்.

நீ கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியைக் கொடு என்றார் அவர்.

உங்கள் எச்சிலை நான் சாப்பிட்டால்தான் எனக்குப் பெருமை. முதலில் நீங்கள் குடியுங்கள் என்றேன்.
அவர் குடித்தார்.

துவர்க்கிறது மேகலை என்றார்.

மருந்துகள் எல்லாமே இனிக்குமா! துவர்க்கிற மருந்திலும், கசக்கிற மருந்திலும்தான் சக்தி இருக்கிறது என்றேன்.

முக்கால் கோப்பையைக் குடித்துவிட்டு, கால் பாகத்தை என்னிடம் கொடுத்தார். நானும் தட்டமுடியாமல் கண்களை மூடிக்கொண்டு குடித்துவிட்டேன். புருஷன் கொடுத்தது அல்லவா?

யார் முதலில் மயங்கியது என்றே தெரியவில்லை. அவர் புலம்பிக் கொண்டே இருந்தார்.

அடுத்த மாதம் சூதாட்டக் கிளப்பை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாடியில் ஏறி வரமுடியவில்லை என்றார் வெறியில்.

சூதாட்டக் கிளப் மாடியில் இருக்கிறது போலிருக்கிறது என்று நானும் தூக்கக் கலக்கத்தில் எண்ணினேன்.

சுமதி!

விடியற்காலை நான்கு மணிக்கு என் வீட்டு மாடியில் அலறல் சத்தம் கேட்டது. மயக்கம் தெளியாத நிலையில் நான் கண் விழித்தேன்; என் வீடு குடை ராட்டினம் சுற்றுவதுபோல் தெரிந்தது எனக்கு. அத்தான்! அத்தான்! என்று கத்தினேன். அவரைக் காணோம். ஆனால் மேல் மாடியில் மட்டும் பயங்கரக் கூச்சல் கேட்டது. தடுமாறிக் கொண்டு நான் மாடிக்கு ஓடினேன். சுமதி, என்னால் விவரிக்க முடியவில்லையம்மா _ புஷ்பராணி ரத்தக் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்தாள். அவர் _ என்னுடைய அவர், மயக்க நிலையில் சோர்ந்து கிடந்தார்.

என்னத்தான் இது? என்று கேட்டேன்.

அவர் பதில் சொல்லவில்லை. அதற்குள்ளாக ஊர் கூடிவிட்டது. புஷ்பராணியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அன்று பகலில் அவள் இறந்துவிட்டாள். குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். என் வீட்டுக்காரர் மீது கொலைக்குற்றம் _ தண்டனை _ இருபதாண்டுகள்!

இது யாருடைய வெறி? அவருடைய வெறியா? என்னுடைய வெறியால் கிளறிவிடப்பட்ட வெறியா?

நான் அறிந்த உண்மை இதுதான் _ வெறி என்பது ஒரு தீய சக்திதான்! அதைத் தூண்டிவிடுவது மது மட்டுமல்ல; ஒவ்வொருவர் ஆசையும் கடைசியாகப் பிரயோகிக்கும் ரிசர்வ் கடையாக வெறியைப் பயன்படுத்துகிறது. மது அரந்துவோர் அந்த வெறியைத் தொடக்கத்திலேயே பயன்படுத்தித் தோற்றுவிடுகின்றனர்.

சுமதி, என் கதையைச் சொல்லி விட்டேன். நீயாவது எச்சரிக்கையாகப் பிழைத்துக்கொள். ஏனென்றால், ரோஜாவாக இருக்கவேண்டிய நான் அரளிப்பூவானதுபோல் உன் கதையும் ஆகிவிடக் கூடாதல்லவா!

அன்புள்ள,
மேகலை.