சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.பிரவீணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
மனுநீதிச் சோழனின் மகன் சாலையில் தேரோட்டிச் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில் பசுவின் துயரத்தை அறிந்த மனுநீதிச் சோழன் தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்றான். இதனால் நீதியின் அடையாளமாகப் போற்றப்படும் மனு நீதிச் சோழனின் சிலை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பசுவின் கன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்து தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் மனுநீதிச் சோழன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. பசுவின் கன்றைக் கொல்ல வேண்டும் என்ற எவ்வித நோக்கமும் அவனுக்கு இல்லை.
இந்நிலையில் ஒரு சிறுவனை கொடூரமாகக் கொன்ற மனுநீதிச் சோழனை நீதியின் அடையாளமாகக் கூற முடியாது. ஆகவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவினை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 27 அன்று ஆணையிட்டனர். ஆனால்,கோரிக்கை என்னவோ மிகச்சரியானதுதானே. மனுநீதி என்பதே ஒரு குலத்துக்கு ஒரு நீதி உரைப்பதுதான். மனுநீதியை நம்பிய அந்த மதி கெட்ட மன்னன் ஓர் மனித உயிரை அல்லவா கொன்றிருக்கிறான். இன்றைய காலத்தில் சாலை விதிகளை மீறி குறுக்கே வந்து உயிரிழப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அன்றாடம் செய்தி ஏடுகளில் பல்வேறு விபத்துகளை படிக்க நேர்கிறது. இன்று சாலை விதிகளை மதிக்கவில்லையென்றால்தான் தண்டனை.ஏனென்றால் இது மனித நீதிக் காலம். இப்படி ஓர் வழக்கு, இந்தக் காலத்தில் வந்தால் நீதிபதிகள் எந்த அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள்? மனு நீதிச்சோழன் காட்டிய வழியிலா? அல்லது மனிதநீதி வகுத்த சாலைப் போக்குவரத்து சட்டங்களின் படியா?
இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் காட்டப்படும் விலங்குபசுவின் கன்று என்பதால் தான் மனுநீதி வேலை பார்த்திருக்கிறது. அது எருமையாகவோ, நாயாகவோ, கழுதையாகவோ ஏன் காட்டப்படவில்லை என்று கேள்வி எழுப்பிப் பார்த்தால் தெரியும் பார்ப்பன மனுநீதியின் லட்சணம். பசு புனிதமானது என்ற சிந்தனையைத் தவிர மனுநீதிச் சோழன் கதையைப் பார்ப்பனர்கள் முன்னிறுத்த வேறென்ன காரணம் இருக்க முடியும்?
– பெரியாரிடி
Leave a Reply